தமிழோவியம்
ஹாலிவுட் படங்கள் : தி ப்ளைட் ப்ளான்!
- மூர்த்தி

Flight Planஒரே ஒரு விமானத்தினுள்தான் மொத்த திரைக்கதையும்! இவ்வாறு படம் எடுக்க ரொம்ப தில் வேண்டும். செலவும் ரொம்ப குறைவு. ஆனால் கதைக்கரு என்று பார்த்தால் சூப்பர். சேரன் என்ன விக்ரமன் படம் என்ன? அந்த அளவுக்கு பின்னி எடுத்திருக்கிறார்கள். தாய்ப்பாசத்தினைப் பற்றிய மிக அருமையான படம்.

ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரில் இஞ்சின்கள் வடிவமைக்கும் இஞ்சினியராக வேலை பார்க்கும் பெண் கைல் என்பவர். அவரின் கணவர் கர்சன் என்பவர் மாடியில் இருந்து தவறி விழுந்து விடுகிறார். தனிமரமாய் ஆன கைல் சோகத்துடன் கணவரின் பிணத்துடன், தன் ஆறுவயது மகள் ஜோலியாவை அழைத்துக் கொண்டு தன் தாய்வீட்டினை நோக்கி விமானத்தில் பயணிக்கிறார். அவரின் தாய்வீடு அமெரிக்காவின் இருக்கிறது.

பிணம் பெட்டியில் அடைத்து சீல் வைக்கப்பட்டு சரக்கு அறையில் ஏற்றப்படுகிறது. ஜூலியாவை பக்கத்து இருக்கையில் அமர்த்தி தானும் அமர்கிறார். அந்த ஆறு வயது பெண் தன் தந்தையைக் குறித்து தாயிடம் கேள்விகள் எழுப்பிவிட்டு விமான கண்ணாடி ஜன்னலில் ஆடின்(இதயம்) சின்னத்தை தன் கைவிரல்களால் எழுதிவிட்டு தாயை கட்டிப் பிடித்து தூங்கி விடுகிறது. அவர்களின் கைப்பை இருக்கைக்கு மேல் இருக்கிறது.

நன்றாக கண்ணயர்ந்த கைல் திடீரென விழிக்கிறார். தன் செல்ல மகள் ஜூலியாவைக் காணவில்லை! பதறுகிறார். பக்கத்து இருக்கைக் காரர்களைக் கேட்கிறார்.. அவர்களும் பார்க்கவில்லை என்கின்றனர். விமானத்தின் ஒவ்வொரு பயணியாகக் கேட்கிறார்.. யாருமே குழந்தையைப் பார்க்கவில்லை. அங்கே ஒரு மூலையில் அமர்ந்திருந்த அரேபியப் பயணியான அகமதைக் கேட்கிறார், 'நேற்று என்னையும் என் மகளையும் ஒரு பொழுதுபோக்கு இடத்தில் பார்த்தீர்களே.. உங்களுக்காவது அவளைத் தெரியுமா? பார்த்திருக்கிறீர்களா?' என்கிறார். அவரும் பார்க்கவில்லை என சொல்கிறார்.

கடையில் விமான சிப்பந்திகளை ஒவ்வொருவராய்க் கேட்கிறார். யாருமே பார்க்கவில்லை. கடைசியில் விமான கேப்டனை அணுகி தன் கதையைச் சொல்லி அழுகிறார். அவர் தன் சக பணியாளர்களை அழைத்து தேடச் சொல்கிறார். திரும்பி வந்து காணவில்லை என்கின்றனர்.

பறக்கும் விமானத்தில் இருந்த குழந்தை மாயமாய் எப்படி மறைய முடியும்? பயணிகள் லிஸ்டைப் பார்க்கிறார்கள். அங்கே குழந்தையின் பெயர் இல்லை. சரி குழந்தையின் போர்டிங் பாஸ், டிக்கெட்டினைக் காட்டு என்கிறார்கள். கைல் தேடுகிறார் இருக்கைக்கு மேலே. அவரின் கைப்பை திருடு போய் இருக்கிறது. எனவே குழந்தையை கைல் அழைத்து வரவே இல்லை என எல்லோருமே முடிவு செய்கிறார்கள். பெற்ற மனம் பித்து என்பதுபோல அந்த தாய் அழுது புரள்கிறார்! அவளின் மன நிலையை எல்லோரும் சந்தேகிக்கிறார்கள்.

அவள் இஞ்சினியர் என்பதால் விமானத்தின் மூலை முடுக்கின் பெயரெல்லாம் சொல்லி தேடச் சொல்கிறாள். அவர்களும் கோபத்துடன் தேடிப் பார்த்துவிட்டு வந்து இல்லை என்று சொல்கிறார்கள். ஜூலியா கடைசி வரை யார் கண்ணிலும் படவே இல்லை. அச்சமயம் பெர்லின் மருத்துவமனையில் இருந்து வருகிறது ஒரு தகவல். அடிபட்ட நிலையில் இருந்த கைலின் குழந்தை ஒரு மணி நேரத்திற்கு முன்பு இறந்து விட்டதாய்! கேப்டன் கைலிடம் சொல்லி விட்டு ஐ ஆம் சோ சாரி என ஆறுதல் கூறுகிறார். 'அய்யோ நான் என்னுடன் அழைத்து வந்தேன்.. என் மகள் சாகவில்லை' என அவள் மன்றாடியும் யாரும் நம்பத் தயாராக இல்லை.

கணவர் இறந்தது, ஜூலியாவுக்கு தான் ஆறுதல் சொன்னது, முதன்முதலாக விமானத்தினைப் பார்க்கும் ஜூலியாவுக்கு விளக்கியது, மகள் ஆடின் சிம்பலை வரைந்தது, தன் மகளைக் கொஞ்சியது, அணைத்துக் கொண்டு தூங்கியது என ஒவ்வொன்றாய் எடுத்துச் சொல்லியும் யாரும் நம்பவோ அதன ஏற்றுக் கொள்ளவோ இல்லை. குழப்பத்திற்கு மேல் குழப்பம்.

அதன்பிறகு 'என் மகளை அடைத்து வைத்துவிட்டு அதன்மூலம் விமானத்தினை எங்கோ கடத்த யாரோ திட்டமிட்டிருக்கிறார்கள்!' என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறார் கைல். அந்த அரேபிய இளைஞனை அறைந்து கீழே தள்ளி மிதிக்கிறார். அரேபியர் தான் கடத்தவில்லை என்று சொல்லியும் கைல் கேட்கவில்லை. கடைசியில் விமான பாதுகாப்பு அதிகாரி ஸ்டீபன் கைலை கைது செய்கிறார்!

உண்மையில் நடந்தது என்ன ? குழந்தை கடத்தப்பட்டதா அல்லது மருத்துவமனையில் இறந்துவிட்டதா என்பதை இயக்குனர் படு சுவாரஸ்யத்துடன் முடிக்கிறார்.

கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம். தாய்ப்பாசத்தினைச் சொல்லும் அற்புதமான ஆங்கிலப் படம் இது !

Copyright © 2005 Tamiloviam.com - Authors