தமிழோவியம்
ஆன்மீகக் கதைகள் : தர்மரின் பொறுமையும் திரௌபதியின் பெருமையும் - 4
- ர. பார்த்தசாரதி

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3

எப்போதும் போல் அன்று இரவும் வந்தது. மறுநாள் பொழுதும் புலர்ந்தது. துரியோதனன் மன்னன் திருதராஷ்டிரனிடம் காலையிலேயே சென்று மாமா சகுனி சொன்னது போல் சொல்கிறான்.

மன்னன் திருதராஷ்டிரன் ஒன்றும் முழுமூடன் அல்ல. அவன் மனம் எண்ணுகிறது: 'துரியோதனன் சகுனியின் கையில் மற்றும் ஒரு காய்தான். இதை இவனிடம் எடுத்துச் சொன்னாலும் கேட்கப் போவதில்லை. நாட்டை பிரிப்பது கூடாது. கிடைத்ததை வைத்து திருப்தி அடையலாம் துரியோதனன். அவன் காந்தாரி பிள்ளையாய் இருந்தால் இப்படி இருக்க மாட்டான். என் பிள்ளையல்லவா?

எனக்கு கண்கள் இல்லாமல் கிடைத்த இராஜ்யம் இவனுக்கு கண்கள் இருந்த்தும் கிடைக்காமல் போய்விடும் போல் தெரிகிறது. பேராசையோ அல்லது குரோதமோ. எது எப்படியோ. யுதிஷ்டிரனின் இராஜ்யத்தை சூதின் மூலம் கவர்ந்துவிட்டதாக இவனும் சகுனியும் நம்புகிறார்கள். யுதிஷ்டிரனைப் பற்றி இவர்கள் இருவரும் என்னதான் நினைக்கிறார்கள். தோற்றால் வனவாசம், ஜெயித்தாலும் ஒன்றும் கிடைக்காது. இது கூடவா புரியாது யுதிஷ்டிரனுக்கு? ஆனல் அவன் பெரியப்பா சொன்னால் சரி என்று சொன்னாலும் சொல்லி விடுவான். அப்படி சரி என்று யுதிஷ்டிரன் சொன்னாலும் சபையில் மற்றவர்கள் எப்படி இதை எதிர்கொள்வார்கள்? நேற்று மௌனமே சிறந்தது என்று பலரும் இருந்து விட்டார்கள். இன்றும் அப்படியே இருந்துவிடுவார்களா? யுதிஷ்டிரன் இந்த சூதாட்டத்திற்கு சரி என்று சம்மதம் கூறிவிட்டாலும், மற்ற பாண்டு புத்திரர்கள், அதுவும் பீமன் இதை ஒப்புக் கொள்வானா? ஆனால் சபையில் யுதிஷ்டிரன் பேசும் போது சகோதரர்கள் நால்வரும் மௌனம் அனுஷ்டிப்பார்கள். நான் யுதிஷ்டிரனைப் பற்றி நினைப்பது இருக்கட்டும். துரியோதனன் என்னதான் நினைக்கிறான் யுதிஷ்டிரனைப் பற்றி?'

திருதராஷ்டிரன்: "துரியோதனா! யுதிஷ்டிரன் இந்த சோதனைக்கு உட்படுவானா?"

துரியோதன்: "தாங்கள் சொன்னால் நிச்சயம் யுதிஷ்டிரன் ஒப்புக் கொள்வான் - உடன் சரி என்று சொல்வான், என்று மாமாதான் சொன்னார்"

திருதராஷ்டிரன்: "ஓகோ! மாமாவிற்கு அவ்வளவு நம்பிக்கையா? எனக்கும் அந்த நம்பிக்கை உண்டு. ஆனால் உனக்கு அந்த நம்பிக்கை இல்லை போல் தெரிகிறதே?"

துரியோதன் சங்கடத்துடன் ஏதோ முனகுகிறான்.

திருதராஷ்டிரன்: "சரி, சரி. துரியோதனா! சபைக்கு வா. யுதிஷ்டிரனைப் பற்றி கவலை வேண்டாம்"


முதல் நாள் மாலை அரச அவையை விட்டு பாண்டவர்கள் வெளியேறியது பற்றி சற்று பார்ப்போம்.

யுதிஷ்டிரர் முன் செல்ல பின் தொடர்கிறாள் பாஞ்சாலி. அவள் இருபுறமும் பீமனும், அர்ச்சுனனும் செல்கிறார்கள். நகுல ச்காதேவர்கள் பாஞ்சாலியை பின் தொடர்கிறார்கள்.

அவர்கள் தங்குமிடத்திற்கு வந்ததும், யுதிஷ்டிரர் ஆசனத்தில் அமர்கிறார். பீமனும், அர்ச்சுனனும், நகுல ச்காதேவர்களும் இருபுறமும் உள்ள ஆசனங்களில் அமர்கிறார்கள். திரௌபதி நடுவில் நிற்கிறாள்.

அர்ச்சுனன் பீமனைப் பார்த்து ஏதோ பேச விழைகிறான். யுதிஷ்டிரர் சைகையினால் சற்று பொறு என்று கூறி "பாஞ்சாலி! வெகு நேரமாக நின்று கொண்டிருந்தாயே. சற்று அமர்ந்து கொள்ளலாமே?"

திரௌபதி: "சரி பாண்டு புத்திரரே! என்னால் முடிந்த வரை நிற்கிறேன். முடியாத போது தரையில் தான் உட்காருவேன். இங்குள்ள ஆசனங்களைப் பார்த்ததும், பாபி துரியோதனன் நண்பன் கர்ணன் 'பட்டு மெத்தை சுகம் பிறகு கிடைக்காது’ என்று சொன்னது தான் ஞாபகம் வருகிறது. மன்னிக்க வேண்டும்".

யுதிஷ்டிரர் பதில் ஏதும் கூற விழையவில்லை. அவர் அர்ச்சுனனை பார்த்து 'ஏதோ பீமனிடம் கேட்க விரும்பினாயே? கேள்' என்று கண்ணால் பேச,

அர்ச்சுனன்: "சகோதரர் பீமன் கதையை தோளிலிருந்து கீழே வைக்கவில்லையே என்று கேட்க நினைத்தேன், பதில் தெரிந்துவிட்டது".

யுதிஷ்டிரன் என்ன பதில் என்று கண்ணாலேயே கேட்கிறார்.

அர்ச்சுனன்: "நான் கேட்டால் 'என் கதை துரியோதனின் துடையில் தான் இறங்குவேன் என அடம்பிடிக்கிறது என்பார். (பீமன் பக்கம் திரும்பி) என்ன? நான் கூறுவது சரிதானா?"

பீமன்: "புரிந்தவரை சரி தான். அண்ணா என்ன சொல்கிறார் என்று கேட்போம். பாஞ்சாலி சற்று தரையில் உட்கார். நீ நடுவில் இருப்பது எங்கள் எல்லோருக்கும் நல்லது."

பாஞ்சாலி நடுவில் வந்து அமர சற்று இறுக்கம் குறைகிறது ஐவர் மனத்திலும்.

யுதிஷ்டிரர்: "சகாதேவா! ஏதோ சொல்ல வேண்டும் என நினைக்கிறாய் போல் தெரிகிறதே?"

சகாதேவன்: "தாங்கள் சொல்ல நினைக்காததை சொல்ல எனக்கு அனுமதி உண்டா? இன்று சபையில் நடந்தவற்றை நாம் எல்லோரும் பார்த்தோமா? யார் யார் எப்படிப் பார்த்தார்கள் என்பது பற்றி தெரிந்து கொண்டால், நாளை சபையில் நடக்கவிருப்பதை எதிர் கொள்ளமுடியும்."

பீமன்: "நான் பார்த்ததை மறுமுறை சொல்ல விரும்பவில்லை. ஆனால் நீ, நாங்கள் பார்க்காததை, பார்த்து அதைச் சொல்ல விரும்புகிறாய் போல் தெரிகிறது. முதலில் நீ சொல்".

சகாதேவன்: " சரி! (சற்று யோசனையுடன்). பார்வை என்பது விசித்திரமானது. நல்ல மனம் கொண்டவர்கள் பார்வை நம்மீது பட்டால், அதுவே நமக்கு சுகந்தம். கபடமானவர்கள் பார்வையைப் பற்றி பேசவே வெண்டாம். இன்று அரச சபையில் முதலில் துரியோதனன், யுதிஷ்டிரரைப் பார்த்தான். பின் அண்ணா அவனைப் பார்த்தார். இதை நான் பார்த்தேன். அர்ச்சுனனும் பார்த்தான்"

பீமன்: (குறுக்கிட்டு) "சகாதேவா! நானும் பார்த்தேன். நகுலனும் பார்த்தான். தயவு செய்து நீ என்ன பார்த்தாய் என்பதைச் சொல்".

யுதிஷ்டிரர்: "சகாதேவா! பீமனின் பொறுமையை சோதிக்காதே"

சகாதேவன்: "மன்னிக்க வேண்டும் சகோதரரே! இதோ கூறுகிறேன்".

சகாதேவன் சற்று நிமிர்ந்து இரு கைகளையும் இரு கால்களின் மீது வைத்துக் கொண்டு கண்மூடி சொல்ல ஆரம்பிக்கிறான். அவன் ஆரம்பித்த விதம் ஏதோ நிமித்தக்காரன் குறி சொல்ல ஆரம்பிப்பது போல இருக்கிறது.

"இதோ, யுதிஷ்டிரர் சொக்கட்டான் மேடையில் துரியோதனுக்கு நேர் எதிர்புறம் அமர்கிறார். துரியோதனனின் கண்களில் தெரியும் ஆசை அவருக்கு தெரிகிறது. அவருக்கு, துரியோதன் மீது பச்சாதாபம்தான் வருகிறது. இவன் ஏன் பல நாள் பட்டினி கிடந்தவன் அன்னத்தைக் கண்டதும், கண்கள் விரிந்து, பார்வையினாலேயே உண்ண முயலுவது போலக் காணப்படுகிறான்? அரச குடும்பத்தை சேர்ந்த இவன், விருந்துக்குப் பின் விளையாட்டாய் சொக்கட்டான் ஆடி வந்த இவன், ஏன் இப்படி இருக்கிறான்?

draupathi with pandavasஇதோ கழுத்தில் இருக்கும் மிக விலையுயர்ந்த முத்து மாலையை சூதில் தோற்றது போலக் கொடுப்போம். ஆகா! கொடுக்க கொடுக்க, கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் வார்க்கும் நெய் அதை இன்னும் வளர்ப்பது போல இவன் பேராசை வளர்கிறது. இவன் கண்கள் ஏன் ஒரு பாழ்வெளி போல் எதைக் கொடுத்தாலும் திருப்தி அடையவில்லை. பாழும் கிணற்றில் மேலும் மேலும் கல்லையும் மண்ணையும் கொட்டினால் எப்படியும் அது தூர்ந்து போய்விடும். ஆனால் இவன் மனம் திருப்தி அடையாது போல் தெரிகிறதே! இன்னம் பொன் பொருளோடு கூட, எனது இராஜ்யத்தின் சில கிராமங்கள், பல கிராமங்கள் என்று கொடுத்தும், மேலும், மேலும் கேட்கிறானே! என் இராஜ்யம் முழுவதும் கொடுத்தாலும் இவன் அமைதி அடைவானா?

விளையாட்டுதானே, கொடுக்கிறேன் என்று சொன்னதும், இவன் திருப்தி அடைவானா? இராஜ்யத்தையும் கேட்டான், கொடுத்தேன். மேலும் சகுல சகாதேவனையும் கேட்டான், கொடுத்தேன். பின் அர்ச்சுனனையும் பீமனையும் கேட்டான், கொடுத்தேன். ஏன் என்னையும் கேட்டான், விளையாட்டில் எல்லாம் கொடுத்தேன். திரௌபதியையும் கொடு என்றான், சரி என்றேன்.

விளையாட்டில் என்னிடம் ஏதும் இல்லை என்ற நிலையிலாவது இவன் திருப்தி அடைந்தானா? இல்லையே! விளையாட்டை வினையாக நினைத்து, திரௌபதியை தாசி என்றழைத்து, தன் தாயின் கோபத்தையும் அல்லவா மேலும் சம்பாதித்துக் கொண்டான்!

இவன் மனம் ஒரு பாழும் கிணறு; இதில் கல்லும் மண்ணும் இட்டு நிரப்பப் பார்த்தேனே? இல்லை, இவன் பேராசை என்னும் நெருப்பிற்கு, என் பொன் பொருள் என்று எல்லாவற்றையும் நெய்யாக ஊற்றி விட்டேனா? இதில் விளையாட்டு எது வரை? வினை எப்போது ஆரம்பித்தது? இதில் துரியோதனன் பங்கு என்ன? என் பங்கு என்ன? விளையாட்டோ, வினையோ, எல்லாம் என்னுடையது என்று சபையில் இவன் கூற, இல்லோரும் மௌனமாக இருந்தார்கள். ஆக, வந்தவரை ஆதாயம் என்று இவன் இருந்து விட்டான்.

ஆனால், தன் தாய்க்கு சமமான பாஞ்சாலியை, இவன் தாசி என்று விளித்து சபையில் நடந்து கொண்ட விதம் மன்னிக்கக் கூடியது இல்லைதான். தர்மத்திற்கு இவ்வளவு சோதனையா? என்று நான் எண்ணும் முன்பே, பாஞ்சாலி அவள் பெண்மையின் மானத்திற்காக சபதம் செய்து விட்டாள். அதுவும் நியாயம்தான். அது தர்மமாகுமா என்று யோசிக்கும் முன்பாக, இரு சகோதரர்களும் பெண்மைக்கு செய்ய வேண்டிய நியாயத்தை மனதில் கொண்டு அந்த சபதத்தை உறுதி செய்து விட்டார்கள். எது நியாயம், எது தர்மம்? நாலை சபையில் நான் என்ன செய்வது? எனக்கு உயர் தர்ம வழி ஒன்றுதான் தெரிகிறது, அதை என் குடும்பத்தார்கள் ஐவரையும் உணரச் செய்ய முடியுமா?"

சகாதேவன், சட்டென கண்களை திறந்து, எழுந்து நின்று, கைகூப்பி யுதிஷ்டிரனை வணங்குகிறான். "நான் இதுவரை நடந்ததை, பார்த்ததை, பார்த்தபடி சொன்னேன். நாளையைப் பற்றி நான் ஏதும் கூறுவது தர்மமில்லை. தமையனார் தாங்கள் தான் ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தால், சொல்ல வேண்டும்".

யுதிஷ்டிரர்: "சகாதேவா! நீ சொல்ல வேண்டியதை சொல்லி விட்டாய். பாஞ்சாலி! உன் எண்ணத்தை நாங்கள் அறியலாமா? உனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, நான் உடன் ஏதும் பதில் சொல்லிவிட முடியாது. காலம் சரியான பதில் சொல்லும். இருந்தாலும் உன் மனத்தில் பட்டதை சொல்".

திரௌபதி: "இங்கு வந்தவுடன் கேட்டிருந்தால் உடன் பதில் கூறியிருப்பேன். ஆனால் தங்கள் பார்வையில் பட்டது, மனத்தில் நினைத்தது என்று சகாதேவர் விபரமாய் எல்லோருக்கும் விளக்கிய பிறகு, என் மனத்தில் பட்டதை கூற யோசிக்க வேண்டியிருக்கிறது. வந்தவுடன் கேட்டிருந்தால் நாம் ஹஸ்தினாபுரத்துக்கு வெளியே இன்று இரவு முதல், வனாந்திரத்தில், மரத்தடியில் தங்குவதுதான் உசிதம் என்று கூறியிருப்பேன். நாளை சபையில் என்ன செய்வது என்ற தங்கள் எண்ணத்தை தெரிந்து கொண்ட போதே, தாங்கள் நாளை வரை இங்கு இருப்பது என்ற முடிவிற்கு வந்து விட்டீர்கள் என்றும் தெரிகிறது.

மேலும் 'எனக்கு உயர் தர்ம வழி ஒன்றுதான் தெரிகிறது', என்று கூறியதின் மூலம், நாளையை இன்றே எதிர்பார்த்து அங்கு ஒரே ஒரு தர்மவழிதான் தெரிகிறது என்று கூறிவிட்டீர்கள். தங்கள் மற்ற சகோதரர்களும் தங்கள் வழியை பின்பற்றும் போது நானும் அந்த தர்ம வழியைத்தான் நினைக்க வேண்டும், அதன் படிதான் நடக்க வேண்டும். எனக்கு வேறு எண்ணம் ஏதும் கிடையாது. இருந்தாலும் என் மனம் 'பெண்ணின் மானத்திற்காக சபதம் செய்துவிட்டாள் திரௌபதி. அதுவும் நியாயம் தான்' என்ற வார்த்தையில் சற்று சமாதானம் ஆகிறது. அவ்வளவுதான்."

Copyright © 2005 Tamiloviam.com - Authors