தமிழோவியம்
தராசு : எங்கே செல்கிறது இளைய சமுதாயம்?
- மீனா

கோவையில் 11-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர், பள்ளித் தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்த காரணத்திற்காய் ஆசிரியர் திட்டியதால் கடந்த புதன்கிழமை ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்மந்தப் பட்ட ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்ததாகவும் அதன் காரணமாக அந்த ஆசிரியை வெள்ளியன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்மவத்தில் சம்மந்தப்பட்ட ஆசிரியியை மாணவனைக் கண்டித்ததோ, திட்டியதோ சரியா? தவறா?? என்ற விவாதத்திற்கு நாம் செல்லவில்லை. மாறாக தற்கொலை செய்துகொண்ட மாணவனின் மனநிலையைக் குறித்துதான் இதில் குறிப்பிட விரும்புகிறோம். இந்த மாணவன் என்றில்லாமல் பொதுவாகவே இன்றைய இளைஞர் சமுதாயத்திடம் போராட்டங்களைச் சந்திக்கும் மனதிடம் குறைவாகவே உள்ளது. வாழ்க்கை என்பதை ஒரு மலர் படுக்கையாகவும் - மலர் பாதையாகவும் மட்டுமே அவர்கள் கருதுகிறார்களே தவிர, வாழ்க்கையின் நிஜ முகத்தை - அதன் கரடு முரடான பாதைகளைச் சந்திக்க அவர்கள் விரும்புவதில்லை. அதனாலேயே தேர்வில் வெற்றிபெற தவறியதற்காகவும், ஆசிரியர் திட்டியதற்காகவும், மதிப்பெண் குறைந்ததற்காகவும் தற்கொலை செய்துகொள்ளும் மாணவ மாணவியரின் எண்ணிக்கை சமீபத்தில் மிகவும் அதிகரித்துள்ளது.

பள்ளித் தேர்வில் மதிப்பெண் குறைவாக வாங்கியதற்காக ஆசிரியர் திட்டினார் என்றால் அடுத்த முறை அதிக மதிப்பெண் வாங்கி அவரிடமே பாராட்டுதல்களைப் பெறவேண்டும் என்ற எண்ணம் அந்த மாணவருக்கு இருந்திருக்க வேண்டுமே தவிர தற்கொலை செய்து கொண்டது கோழைத்தனம். தற்கொலைக்கு முயல்வதற்கு முன்பாக ஒரு நிமிடமாவது தன்னுடைய பெற்றவர்களைப் பற்றியும் தன்னை இழந்து அவர்கள் எத்தகைய மன வேதனைக்கு ஆளாவார்கள் என்பதைப் பற்றியும் அவன் சிறிதாவது நினைத்திருந்தால் நிச்சயம் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தை மாற்றிக்கொண்டிருப்பான். இத்தகைய முடிவுகள் உணர்சி வேகத்தில் - பின் விளைவுகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுக்கப்படும் முடிவுகளே!!

இன்றைய இளைய சமுதாயத்தினர் அனைவரும் கவனத்தில் வைக்க வேண்டிய விஷயம் இதுதான். வாழ்கை ஒரு போர்களம். போராட்டங்களைச் சந்தித்து - அதில் வெற்றி பெறுகிறவர்களே சாதனையாளர்கள் ஆகிறார்கள்!! தோல்வியே வெற்றியின் முதல்படி. தோல்வியால் துவண்டு உட்காருவதையும், விபரீதமான முடிவுகளை எடுப்பதையும் விட்டுவிட்டு சோதனைகளைச் சாதனைகளாக மாற்ற முயலவேண்டும். தற்கொலை எந்தப் பிரச்சனைக்கும் முடிவுரை ஆகாது - மாறாக பல பிரச்சனைகளுக்கு அதுதான் முன்னுரை. ஆகவே இளைய சமுதாயமே!! நீங்கள் வளரும்போதே போராட்டங்களைச் சந்திக்கும் மன திடத்தையும் சேர்த்து வளர்த்துக்கொள்ளுங்கள்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors