தமிழோவியம்
தராசு : சிமெண்ட் விலை குறைப்பு - சாதித்தது யார் ? தி.மு.க வா (அ) பா.ம.க வா
- மீனா

கடந்த இரண்டரை ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி நடத்திவரும் தி.மு.க மக்கள் நலனில் கவனம் செலுத்துகிறதோ இல்லையோ அதன் கூட்டணி கட்சியான பா.ம.க மக்கள் பிரச்சனைகளில் அதிகம் கவனம் செலுத்துகிறது. உண்மையில் மக்கள் நலனுக்காக அவர்கள் இப்பிரச்சனைகளை எழுப்புகிறார்களா அல்லது கூட்டணிக்கு குடைச்சல் கொடுக்கச் செய்கிறார்களா என்பது தெரியாவிட்டாலும் நல்ல காரியம் செய்கிறார்கள். தற்போது அவர்கள் எழுப்பிய சிமெண்ட் விலை உயர்வு ஆர்பாட்டத்தின் காரணமாக இத்தனை ஆண்டுகளாக இந்த விலை உயர்வை கண்டு கொள்ளாத முதல்வர் அதிரடியாக "விலையைக் குறைக்கிறீகளா? இல்லை உங்கள் சிமெண்ட் ஆலைகளை அரசே ஏற்று நடத்தட்டுமா?" என்று அறிக்கை விட - உடனடியாக பணிந்து வந்துள்ளார்கள் ஆலை அதிபர்கள். அதிரடி விலை குறைப்பும் நடக்க உள்ளது. 200 ரூபாய் ஒரு மூட்டை சிமெண்ட் என்ற நிலையும் வரப்போகிறது.

மக்களை பாடாய் படுத்திவரும் மின்சாரத் தடை - ரேஷன் அரிசிக் கடத்தல் - விஷமாய் உயர்ந்து வரும் விலைவாசி - பெருகி வரும் ரெளடிகள் தொந்தரவு போன்ற பல பிரச்சனைகளைப் பற்றி கூட்டணியில் உள்ள பா.ம.க ஆகட்டும் எதிர்கட்சி வரிசையில் உள்ள அ.தி.மு.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளாகட்டும் யார் தங்கள் ஆட்சியைப் பற்றி குறை கூறினாலும் அதற்கு சரியான விளக்கத்தை கொடுக்காமல் "முன்பு எப்படி இருந்தது தெரியுமா? இந்த நிலைக்கு யார் காரணம் என்று தெரியுமா?" என்று எதிர்கேள்வி கேட்டே பொழுதை போக்குவது என்ற கொள்கையைக் கொண்டுள்ளார் முதல்வர். இது மக்கள் மத்தியில் இந்த ஆட்சிக்கு எதிராக அதிருப்தியை அதிகமாக்குமே தவிர எந்த விதத்திலும் பிரச்சனைகளுக்கு தீர்வாக இவை அமையப்போவதில்லை.

பா.ம.க தீவிரமாக எதிர்ப்பு காட்டியதால் இன்று சிமெண்ட் விலை உயர்வுக்கு கடிவாளம் போட்டிருக்கும் முதல்வர் இதை முன்பே செய்திருந்தால் மக்களும் மகிழ்ந்திருப்பார்கள் - நம்மால் தான் இது நடந்தது என்ற பா.ம.கவினரும் பெருமையடித்துக் கொண்டிருக்கமாட்டார்கள். ஆனால் முதல்வர் இத்தனை நாட்களாக இதைச் செய்யத் தவறியது ஏன்? தன் ஆட்சிக்கோ தன் உறவினர்களுக்கோ ஒரு பிரச்சனை என்றால் உடனடியாக நடவடிக்கையில் இறங்கும் முதல்வர் அதே வேகத்தை மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஏன் காட்டக்கூடாது? அப்படிக் காட்டி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டால் பா.ம.க மாதிரியான கட்சிகளுடன் கூட்டணி தொந்தரவே இல்லாமல் தனித்தே ஆட்சிப் பீடத்தில் ஏறமுடியும் என்பது ஐந்து முறை முதல்வராக இருந்த தி.மு.க தலைவருக்கு தெரியாமல் இல்லை. இருந்தும் நல்ல விஷயங்களை ஏன் செய்யத் தயங்குகிறார் என்று தெரியவில்லை.

இலவசத் திட்டங்கள் எல்லாம் நிலையான ஆதரவை ஒருபோதும் பெற்றுத் தராது. அடுத்த முறை ஆட்சியில் அமரவேண்டும் என்றால் நாட்டு மக்களுக்காக உருப்படியாக கொஞ்சமாவது செய்யவேண்டும் என்ற அடிப்படை விஷயத்தை தி.மு.கவில் உள்ள அனுபவஸ்தர்களில் ஒருவர் கூடவா முதல்வரிடம் இதுவரை தெரிவிக்கவில்லை? குடும்ப அங்கத்தினர்களுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் பதவி வாங்கிக் கொடுக்கும் சாதுர்யத்தை மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் விஷயங்களிலும் முதல்வர் இனியாவது காட்டினால் குடைச்சல் கொடுக்கும் கூட்டணிக் கட்சி சத்தமில்லாமல் முதல்வர் சொன்னதை கேட்கும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors