தமிழோவியம்
அரும்பு : ரூமியின் அரும்பு
-

'அரும்பு'

மற்றவர்களால் அங்கீகரிக்கப்பட்ட முதல் படைப்பை யாரும் மறக்க முடியாது. அப்படி ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு படைப்பு இருக்கும்.  அந்த படைப்பு பற்றிய ஒரு மலரும் நினைவு தான் இந்த அரும்பு.

தங்களுக்கு முகவரி தந்த / மீண்டும் எழுதத்தூண்டிய / பலரால் பாராடப்பட்ட / பலரால் கிழிகப்பட்ட முதல் படைப்பு எது ? எந்த தளத்தில் எழுதினீர்கள் ? (கைஎழுத்து பத்திரிகை, குழுமம், அச்சு இதழ், வலைப்பதிவு, ஃபோரம், மின்னிதழ்...)

முதன் முதலில் வெளிவந்த போது எப்படி உணர்ந்தீர்கள் ? மற்றவர்கள் விமர்சித்த  போது எப்படி உணர்ந்தீர்கள் ? அந்த விமர்சனத்தின் தாக்கம் தங்களை எப்படி மாற்றியது ?

இப்படி பல எழுத்தாளர்களை கேட்டோம். அவர்களின் பதில்கள் இனி வாரந்தோறும்.

இந்த  வாரத்தில்..


நாகூர் ரூமி

முதல் படைப்பு, முதல் முத்தம், முதல் அறை

Nagore-Rumiஒவ்வொரு எழுத்தாளனுக்கும் தான் முதன் முதலாக எழுதிய படைப்பு ஒன்று பிரசுரமாகும்போது அது ஏதோ நோபல் பரிசு பெற்றதைப் போன்ற பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய அனுபவமாக இருந்திருக்கக்கூடும். நோபல் பரிசு பெறும்போது எப்படியிருக்கும் என்று எனக்குத் தெரியாவிட்டாலும் ஒரு உலகளாவிய பரபரப்பை ஏற்படுத்துதல் என்ற அர்த்தத்தில் சொல்கிறேன். ஏனெனில் முதல் படைப்பு பிரசுரமாவதும் நிச்சயமாக ஒரு பரபரப்பான சம்பவம்தான். பிரசுரம், பிரசவம் -- இந்த இரண்டு சொற்களுக்கும் இடையேகூட எவ்வளவு சந்த ஒற்றுமை இருக்கிறது பார்த்தீர்களா?!

ஆனால் என்னைப் பொறுத்தவரை என் முதல் படைப்பு எது, முதல் பரபரப்பு எது, முதல் முத்தம், ஐ மீன் முதல் பாராட்டு எது, முதல் அறை (முதலிரவு அறையல்ல) எது என்று நினைவில் இல்லை. நான் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் தீவிரமாக எழுதத் தொடங்கினேன் என்று நினைக்கிறேன் (1980கள்). கணையாழியில் 'தமிழ் உயிரைவிடப் போகிறது' என்று ஒரு கட்டுரை வந்தது. கதி. இலக்குவன் என்பவர் எழுதியது என்று நினைக்கிறேன். அந்தக் கட்டுரை என்னை என்னவோ செய்தது. உடனே நான் தமிழைக் காப்பாற்ற, அதன் ஆபத்பாந்தவனாகப் புறப்பட்டு விட்டேன். தமிழ் சில வட்டங்கள் என்ற தலைப்பில் கதி. இலக்குவன் அவர்களின் கட்டுரைக்கும் ஒரு மறுப்புக் கட்டுரை எழுதினேன். அது கணையாழியில் பிரசுரமானது. அப்போது அது எனக்கு பெருமிதம் கொடுத்த அனுபவம் அது. காரணம், கணையாழி தமிழில் இலக்கியத்துக்காக வந்து கொண்டிருந்த, தமிழின் எல்லா முக்கிய எழுத்தாளர்களும் பங்கு கொண்டு பங்களிப்புச் செய்த ஒரு மாத இதழ். அதில் எனது படைப்பும் வந்துவிட்டது என்ற நினைப்பு எனக்கு நிச்சயமாக சந்தோஷம் கொடுத்தது. ஆனால் கவிஞன் என்று ஒரு தொகுப்பின் மூலம் என்னை அறிய வைத்துக்கொண்ட எனக்கு அதுதான் -- ஒரு கட்டுரைதான் -- முதல் படைப்பா என்று இப்போது சந்தேகமிருக்கிறது. ஏனெனில் வெகுவாக அறியப்படாத பல சிற்றிதழ்களிலும், கையெழுத்துப் பிரதிகளிலும்கூட நான் கவிதைகள், கட்டுரைகள் எழுதி வந்திருக்கிறேன். உதாரணமாக அ·கு, மீட்சி, இலக்கின் படிகள், கொல்லிப்பாவை இப்படி. இந்தப் பெயர்களையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்போது ஆத்மாநாம் ழ என்று கவிதைக்காக ஒரு இதழைக்கூட நடத்தி வந்தார். ஆனால் எனக்கு அவரோடு அப்போது தொடர்பில்லாமல் போனது எனது துரதிருஷ்டமே.

என் இலக்கிய ஆர்வத்துக்கு ஆர்ம்பகாலத்தில் தீனி போட்டு வளர்த்தது நான், ஆபிதீனெல்லாம் அண்ணன் என்று அன்பாக அழைத்த எழுத்தாளர் சாரு நிவேதிதா. பிறகு நான் கல்லூரியில் படித்த காலத்தில் என் தமிழ், மற்றும் ஆங்கில இலக்கிய அறிவை நான் வளர்த்துக்கொள்ள பெருமளவில் உதவியது என் பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட் அவர்கள். முதன் முதலில் என் கவிதைத் தொகுதி "நதியின் கால்கள்" வெளிவருவதற்குக் காரணமாக இருந்தவர் நண்பரும் தமிழின் குறிப்பிடத் தகுந்த கவிஞருமான பிரம்மராஜன் அவர்கள். அவர் நடத்திய "மீட்சி" இதழில் நான் பல கவிதைகளும், சில கட்டுரைகளும், மொழி பெயர்ப்புகளும் செய்திருக்கிறேன். பிரம்மராஜனின் உழைப்பு பிரமிக்க வைக்கக் கூடியது. அவருக்கு நான் கடன் பட்டுள்ளேன். நான் படித்த அத்தனை எழுத்தாளர்களுக்கும் என்னை உருவாக்கியதில் பங்குண்டு. இன்னும்கூட பழைய பாடலா புதிய பாடலா என்று கேட்டால் சட்டென்று பழைய பாடல்கள்தான் என்று சொல்ல வருவதைப்போல, தமிழில் நவீன இலக்கியமா என்று ஆரம்பித்தாலே என் மனம் இல்லை, ஜாம்பவான்களான தி.ஜானகிராமன், லாசரா, நகுலன், ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், மௌனி, ஆதவன், அசோகமித்திரன் என்று பழையவர்களின் பட்டியலுக்கே மனம் சட்டென்று செல்கிறது. காரணம் என்னவென தெரியவில்லை. நவீன இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க அளவில் யாரும் சாதிக்கவில்லை என்று சொல்ல மாட்டேன். முகம் தெரியாத பல எழுத்தாளர்கள் ஜாம்பவான்களைவிட அதிகமாக சாதித்திருக்கிறார்கள். சரி, நான் கொஞ்சம் வழிவிலகிப் போவதாகத் தோன்றுகிறது.

கணையாழி கட்டுரையை எனக்கு வந்த முதல் முத்தமாகக் கருத முடியவில்லை. (அக்கட்டுரையும் என்னிடம் இல்லை. யாரிடமாவது இருந்தால் கொடுத்து உதவுங்களேன்). ஆனால் எனக்கு வந்த முதல் முத்தமாக என் சிறுகதை ஒன்றைக் கூறுவேன். மணிவிளக்கு என்ற மாத இதழில் "அஸ்தமனங்கள் விடியும்" என்று ஒரு கதை எழுதினேன். உடனே, இதைப்போன்ற கதைகளைப் பிரசுரித்தால் பத்திரிக்கை மீது வழக்கு போடுவோம் என்று மிரட்டல் கடிதங்கள் அதன் ஆசிரியருக்கு வந்தன. காரணம், அது என் குடும்பக் கதை. ஒரு இடத்தில் எனக்கே தெரியாமல் நான் உண்மையான பெயரையும் போட்டிருந்தேன். ஆர்வக் கோளாறு! என் குடும்ப நண்பர்களிடமிருந்துதான் அந்த மிரட்டல் சென்றிருக்க வேண்டும். ஆனால் அதன் ஆசிரியராக இருந்த காலஞ்சென்ற சிராஜுல் மில்லத் அப்துல் சமத் சாஹிப் அவர்கள், இந்த மாதிரி மிரட்டல் கடிதங்கள் வருவதாகவும், அதனால் பிரச்சனை ஏற்படுத்தாத விதத்தில் தொடர்ந்து கதைகள் அனுப்பும்படியும் என்னைக் கேட்டுக் கொண்டார்! அதுதான் எனக்கு கிடைத்த முதல் அறை முத்தம். அறை மாதிரி தொடங்கி நச் சென்று முடிந்த முத்தம்!

"நிமிர்வு" என்ற என் கதையைப் படித்துவிட்டு அந்தக் கதையில் வரும் ஒரு வேலைக்காரிக்கு நான் ஒரு கோயிலே கட்டி விட்டதாக சாரு நிவேதிதா என்னைப் பாராட்டினார். என் "குட்டியாப்பா" என்ற கதையைப் பற்றி அசோகமித்திரன், "குட்டியாப்பா ஒரு மகத்தான சாதனை என்றே தோன்றுகிறது" என்று தன் முன்னுரையில் எழுதினார். அந்தக் கதை இருக்கும் அந்தப் பேரைக் கொண்ட தொகுதி திருவனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக் கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடப்புத்தமாக வைக்கப்பட்டது. என் "கப்பலுக்குப் போன மச்சான்" குறுநாவலை 2004ம் ஆண்டின் தலைசிறந்த குறுநாவல் என்று சுஜாதா ஆனந்த விகடனில் எழுதினார். You have a poet in you என்று நகுலன் தன் கைப்பட எனக்கு கடிதம் எழுதினார். என்னுடைய மற்றும் என் நண்பர் ஆபிதீனுடைய கவிதைகள் வந்தால் உடனே பிரசுரிக்கும்படி சுந்தர ராமசாமி யாத்ரா இதழ் நடத்தியவர்களிட சொல்லியிருந்தார். எனது "இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்" என்ற நூலுக்கு திருப்பூர் தமிழ் சங்க விருது கிடைத்தது. இவையெல்லாம் எனக்குக் கிடைத்த நோபல் பரிசுகள்தான். அவற்றை மறக்க முடியுமா?

விமர்சனங்களைக் கண்டு நான் என்றைக்குமே கலங்கியதில்லை. சரியான விமர்சனமாக இருந்தால் அவற்றை நான் மதித்து மாற்றி எழுதியிருக்கிறேன். உள்நோக்கம் கொண்ட விமர்சனம் எனில் உதாசீனப்படுத்தி விடுவேன். 'சாலையோரம் இரண்டு செம்பாறைகள் ஒன்றையொன்று கேலி செய்து கொண்டன' என்று தொடங்கும் என் கவிதையில் 'கேலி செய்து கொண்டிருந்தன' என்பது தேவையில்லை என்றார் சுஜாதா. அவர் சொன்னது சரி. எனது "இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்" நூலில் ஒரு சில சொற்களை மாற்றலாம் என்று திருப்பூர் கிருஷ்ணன் கருத்துச் சொன்னார். அதுவும் சரியாகவே இருந்தது. அவர் சொன்னபடி அடுத்த பிரதியில் மாற்றம் செய்யப்பட்டது. குமுதத்தில் ஒரு கதை எழுதினேன். "மன்னிப்பு" என்ற தலைப்பில். மாரியம்மா என்ற சூலிப்பூனையை உதைப்பதால் காலில் ஹீரோவுக்கு மர்மமான முறையில் வலி வந்துவிடும். கடைசியில் பூனையிடம் போய் மன்னிப்புக் கேட்டுக் கொண்டவுடன் வலி போய்விடும். எனக்கு மிகவும் பிடித்த என் கதைகளில் அதுவும் ஒன்று. ஆனால் கதை பிரசுரமான அடுத்தவாரம் அக்கதையை கடுமையாகக் கிண்டலடித்திருந்தார் ஒரு வாசகர். "என்ன காதில் பூ சுத்துகிறார்?" என்பதாக. அந்த விமர்சனத்தை நான் மிகவும் ரசித்தேன்.

எழுதுவதற்கு முத்தங்களும் தேவை. அறைகளும் தேவை. ஆரம்பத்தில் முத்தங்கள். பின்பு அறைகள். நேர்மையான விமர்சனங்கள் நம்மை வளர்க்கக் கூடியவை. அப்படிப்பட்ட் அறைகள் வாங்கும்போது நிச்சயமாக மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டலாம். மறுகன்னத்தை முத்தங்களுக்காகவும் காட்டலாம் என்று நான் சொல்ல வேண்டுமா என்ன?

Copyright © 2005 Tamiloviam.com - Authors