தமிழோவியம்
ஜோதிட விளக்கங்கள் : வருடத்திற்கு 365 1/4 அல்லது 360 நாட்களா ?
- ஜோதிடரத்னா S. சந்திரசேகரன்

 

நாம் நமது வருங்காலத்தைக் கணக்கிட விம்ஷோத்திரி தசை முறையைப் பின்பற்றுகிறோம். விம்ஷோத்திரி தசை முறையைத் தவிர, யோகினி மஹா தசை கணக்கீட்டுமுறை, காலச்சக்கர மஹா தசை, போன்ற தசை முறைகளும் உண்டு.  இருப்பினும் விம்ஷோத்திரி தசைமுறையைத் தான் பெரும்பாலானவர்கள் பின்பற்றுகின்றனர்.  அதுதான் சரியாகவும் வருகிறது. இதில் ஒரு வருடம் என்பது 365 1/4 நாட்களா அல்லது 360 நாட்களா என்ற சந்தேகம் சிலருக்கு உண்டு. விம்ஷோத்திரி தசையில் ஒரு வருடம் என்றால் 360 நாட்கள்தான் எனக் கூறுவோரும் உண்டு. இதில் எது சரி என்றும், எதைப் பின்பற்ற வேண்டும் என்றும் நமது கருத்தைக் கூறுவோம். 

ஒரு வருடம் எங்கிருந்து, எப்போது தொடங்குகிறது என்பதில் பலவித கருத்துக்கள் உண்டு. பொதுவாக 5 விதமான கருத்துக்கள் உண்டு. 

சந்திர மானம்:- பங்குனிமாதத்தில் வரும் சுக்கில பட்சப் பிரதமைத் திதியிலிருந்து வருடம் என்பது தொடங்குவதாகக் கணக்கில் கொள்கிறார்கள். அடுத்த பங்குனியில் வரும் பொர்ணமியுடன் ஒரு வருடம் முடிவதாக இஅவ்ர்கள் கணக்கும்.  தெலுங்கு வருடப் பிறப்பு இதைக் கணக்கில் எடுத்துக்கொண்டே அனுசரிக்கப் படுகிறது. 

சவன மானம்:- இதில் ஒரு வருடம் என்பது 360 நாட்களாக எடுத்துக் கொண்டு கணக்கிடு கிறார்கள்.

ப்ரஹஸ்பத்யம்:- அதாவது குருவின் நிலையைக் கொண்டு கணக்கிடுகிறார்கள்.  குரு ஒரு ராசியில் தங்கியிருக்கும் காலம் ஓராண்டு அல்லவா? இதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு வருடத்தை முடிவு செய்கிறார்கள்.

நட்சத்திர மானம்:- சந்திரன் அஸ்வனியில் ஒவ்வொரு மாதமும் பிரவேசிக்கிறார் அல்லவா ? இவ்வாறு 12 முறை பிரவேசிக்கும் காலத்தை ஒரு வருடமாகக் கணக்கிலிடுகிறார்கள்.

சௌர மானம்:- இந்த முறைதான் நாம் பின்பற்ற வேண்டியது.  சூரியன் நிராயன முறைப்படி மேஷராசியில் பிரவேசிக்கும் நாளே வருடம் பிறப்பதாகக் கொள்ளுதல். இது தோராயமாக 365 1/4 நாட்கள் ஆகின்றன.  இதைத்தான் தமிழ் நாட்டில் வருடப் பிறப்பாகக் கொள்கிறோம். இந்த முறையைத்தான் நாம் விம்ஷோத்திரி மஹா தசையில் பின்பற்றுகின்றோம்.  இதே கருத்தைத்தான் "பலதீபிகை"யிலும் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆக ஒரு ஆண்டு என்பது 365 1/4 நாட்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதைத்தான் விம்ஷோத்திரி தசையில்
நாம் கையாள வேண்டும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors