தமிழோவியம்
தராசு : ஜல்லிக்கட்டு : வீரமா? விவேகமின்மையா?
- மீனா

Jalikattuபாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 2 பேர் பலியாகியுள்ளார்கள். மேலும் 235 பேர் காயமடைந்துள்ளார்கள். இந்த முறை ஜல்லிக்கட்டைப் பார்க்க மதுரை டி.ஐ.ஜி, எஸ்.பி, டி.எஸ்.பி போன்ற போலீஸ் முக்கிய பிரமுகர்கள் குடும்பத்துடன் வந்துள்ளார்கள். காளைகளால் தாக்கபட்டவர்கள் தவிர தவறான காளையை பிடித்துவிட்டார்கள் என்பதலால் உள்ளூர் ஆட்கள் வெளியூர் ஆட்களை போலீசார் முன்னிலையிலேயே போட்டு தர்ம அடி அடித்துள்ளார்கள். உள்ளூர் பாலமேட்டு ஜல்லிக்கட்டிலேயே இத்தனை அதகளம் என்றால் ஜல்லிக்கட்டிற்குப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் என்னென்ன அனர்த்தங்கள் நடைபெறுமோ?

ஒரு காலத்தில் தமிழகத்தின் வீரவிளயாட்டாக கருதப்பட்ட ஜல்லிக்கட்டு இன்று இதில் பங்கேற்கும் வீரர்கள் பலரது உயிரைக் குடிக்கும் விளையாட்டாக மாறிவருகிறது. இவ்விளையாட்டில் ஈடுபடுவதில் உள்ள ஆபத்துகளைப் பற்றி நன்கு தெரிந்தும் தமிழகத்தைச் சேர்ந்த பல கிராம - நகர ஜல்லிக்கட்டு வீரர்கள் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாது இதில் பங்கேற்று வருகிறார்கள். மாடுகள் வெறித்தனமாக முட்டுவதால் காயப்படும், உயிரிழக்கும் இவ்வீரர்களின் இழப்பால் பாதிக்கபடும் இவர்களது குடும்பத்தாரின் நிலையைப் பற்றி யார் எண்ணிப்பார்கிறார்கள்?

போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு அவற்றின் உரிமையாளர்கள் போதை ஊசிகள் போடுவது, வெறியைத் தூண்டிவிடுவது போன்ற கொடுமைகளைச் செய்கிறார்கள் என்றால் போட்டிகளில் பங்கேற்பவர்களும் பிளேடு மற்றும் கத்திகளை வைத்து காளைகளைத் துண்புறுத்துதல், அவற்றின் கண்களில் மண்ணைத் தூவுதல் போன்ற வெறித்தனமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இத்தகைய செயல்களால் வெகுவாக பாதிக்கப்படும் காளைகள் கிடைத்த இடைவெளியில் கண்ணில் படும் மனிதர்களை துவம்சம் செய்துவிடுகின்றன. நாட்டில் ஏகப்பட்ட பிராணிகள் வதை தடுப்புச் சட்டங்கள் அமுலில் இருந்தாலும் ஜல்லிக்கட்டு காளைகளை எந்தச்சட்டமும் பாதுகாப்பதில்லை.

இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் ஜல்லிக்கட்டிற்கு ஒப்பான மாடுபிடி விளையாட்டுகள் நடந்து வந்துள்ளன. ஆனால் தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ப பல நாடுகள் இத்தகைய விளையாட்டிற்கு தடைவிதிக்க ஆரம்பித்துள்ளன. ஆனாலும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டில் ஜெயிப்பதை, ஜெயிப்பதை ஏன் பங்கேற்பதையே இன்றும் இளைஞர்கள் பெறுமையாக நினைக்கிறார்கள்.

மாறிவரும் காலங்களுக்கேற்ப நம் வாழ்க்கையைப் பலவிதமாக நவீனமாக முன்னேற்றிக்கொண்டிருக்கும் நாம் இந்த ஜல்லிக்கட்டு விஷயத்திலும் நம்முடைய பழமைத்தனமான எண்ணங்களைத் துறக்க முன்வரவேண்டும். இவ்விளையாட்டை இந்திய அளவில் ரத்து செய்யவேண்டும். பிராணிகள் வதை தடுப்புச் சட்டங்களைப் பற்றிப் பேசும் சமூக ஆர்வலகள் அனைவரும் கூடி இதற்கான தீர்மானத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக  இயற்ற வகை செய்யவேண்டும். ஆண்மக்கள் தங்கள் வீரத்தைக் காட்டுவதற்கு ஏகப்பட்ட உருப்படியான வழிகள் உள்ளன. அதையெல்லாம் விடுத்து இன்னமும் மாடு பிடிப்பது மட்டுமே தங்கள் ஆண்மையை நிரூபிக்கும் வழி என்று மடத்தனமாக சிந்திப்பதை நிறுத்த வேண்டும். சினிமாவில் ஹீரோ பங்கேற்று ஜெயிக்கும் ஜல்லிக்கட்டிற்கும் நிஜத்தில் பலரது உயிரைக்குடிக்கும் விதத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டிற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை நம்மவர்கள் என்று உணரப்போகிறார்களோ ?

|

Copyright © 2005 Tamiloviam.com - Authors