தமிழோவியம்
ஹாலிவுட் படங்கள் : THE HOUSE OF FLYING DAGGER
- சம்பத் ரங்கநாதன்

கதை பிண்ணனி:

சீனாவில் 9ம் நூற்றாண்டில் கொடுங்கோல் அரசனை வீழ்த்த பறக்கும் கட்டாரி என்ற புரட்சி அமைப்பு துவங்கப்படுகிறது. அந்த அமைப்பின் தலைவன் அரசுப்படைகளால் கொல்லபட்டதும் புது தலைவன் தேர்ந்தெடுக்கபடுகிறான். அந்த தலைவன் யார் என்று யாருக்கும் தெரியாது. அந்த தலைவனை கொல்ல தளபதி திட்டம் தீட்டுகிறான். 

கதை:

Houseofflyingdaggersகதை ஒரு நடன விடுதியில் துவங்குகிறது. பேரழகான ஒரு குருட்டு நடன பெண்ணை கற்பழிக்க ஒரு அரசு அதிகாரி முயல்கிறான். அந்த அதிகாரியையும் குருட்டு பெண்ணையும் காவலர்கள் கைது செய்கின்றனர். நடன விடுதி தலைவி குருட்டு பெண்ணை விட்டு விட சொல்லி மன்றாடுகிறார். அந்த பெண்ணின் நடனத்தை பற்றி கேள்விப்பட்டிருந்த காவலர் தலைவன் அவள் தான் வைக்கும் நடனப்போட்டியில் வென்றால் விட்டுவிடுவதாக சொல்கிறான். 

நடனப்போட்டி துவங்குகிறது. குருட்டுபெண்ணை சுற்றி 100 முரசுகள். அதிகாரி கடலை கொட்டைகளை எந்த முரசு மீது வீசுகிறான் என்பதை அந்த பெண் கண்டுபிடிக்கவேண்டும். நடனமாடியபடியே அவள் அற்புதமாக அதை கண்டுபிடிக்கிறாள். இந்த முரசு நடனக்காட்சி மிக அற்புதமாக உள்ளது. பாடல் மிக இனிமை. 

பாடல் முடிந்ததும் குருட்டுப்பெண் அந்த காவலர் தலைவனை கொல்ல முயல்கிறாள். கைது செய்யப்படுகிறாள். பிறகு தான் தெரிகிறது அவள் அந்த பறக்கும் கட்டாரியின் முன்னாள் தலைவனின் மகள் என்று.

அவளை என்ன செய்வது என்று அரசு ஆலோசிக்கிறது. அவளை தப்பவிட்டால் இப்பொதைய தலைவனுடன் போய் சேர்ந்துகொள்வாள், அப்போது அனைவரையும் பிடித்துவிடலாம் என்று திட்டம் தீட்டப்படுகிறது. அவளை தப்பிக்க வைக்க ஒரு நாணயமாண வீரன் தேர்ந்தெடுக்கபடுகிறான். காவலர் தலைவன் ஒரு சிறு படையுடன் அவர்களை பின் தொடர்கிறான். 

காட்டில் அந்த வீரனும் குருட்டு பெண்ணும் தப்பிக்கிறார்கள். அந்த வீரன் மீது அவளுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக அடிக்கடி அரசு படையினர் அவர்களுடன் மோதுகிறார்கள். வீரன் அவளை காப்பாற்றுகிறான். காதல் மலர்கிறது.

இறுதியில் முட்டாள்தனமான ஒரு அரசு அதிகாரி நிஜமாகவே அவர்களை கொல்ல உத்தரவிடுகிறான். மூங்கில் காட்டில் அற்புதமான சண்டை நடக்கிறது. இந்த சண்டைக்காட்சி படம் பிடிக்கபட்ட விதம் மிக அற்புதம்.

அவர்கள் இருவரும் கொல்லபடவிருந்த தருணத்தில் பறக்கும் கட்டாரி படையினர் அவர்களை காப்பாற்றுகிறார்கள். பிறகு அதிரவைக்கும் உண்மைகள் தெரிகின்றன. . . . . . . . .

இப்படத்தின் சிறப்புகள்

Houseofflyingdaggersநடன விடுதியில் அழகிகள் ஆடும் அந்த நடனம் மனதை கொள்ளை கொள்கிறது. அடுத்ததாக குருட்டுப்பெண் ஆடும் நடனம் மிக அற்புதம். இது எல்லாவற்றையும் தூக்கி அடிக்கிறது முரசு நடனம். நடனத்தின் முடிவில் காவலர் தலைவனை கொல்ல தனது உடையையே ஆயுதமாக்கி போரிடுகிறாள் குருட்டுப்பெண். தனது துப்பட்டாவில் வாளேந்தி போரிடும் காட்சிக்கு ஒரு சபாஷ். 

குருட்டுபெண்ணை பற்றி சொல்லாவிட்டால் படம் பார்த்ததே வீண். முகத்தில் அப்படி ஒரு அழகு நிரம்பிய குழந்தைத்தனம். சண்டைக் காட்சிகளில் சீற்றம். இந்தப் பெண்ணா இப்படி சண்டை போடுகிறார் என்று அதிசயிக்க வைக்கிறார்.

சண்டைக் காட்சிகள் மனதை கொள்ளை கொள்ள வைக்கின்றன. படத்தின் லொகேஷனை எந்த மகானுபாவன் தீர்மனித்தாரோ?வாழ்க அவர். கவிதை மயமான லொகேஷன்கள். புல்வெளியில் நடக்கும் சண்டை பிரமாதம் என்றால் மூங்கில் காட்டில் மூங்கில்களை ஆயுதமாக்கி நடக்கும் போர் பிரமிப்பை ஊட்டுகிறது. இறுதியில் பனிப்பொழிவில் நடக்கும் கிளைமாக்ஸ் சண்டை காவியம் என்றே சொல்லலாம். 

படத்தின் முடிவின் போது கண்ணீர் விட்டு அழாதவரே திரையரங்கில் இல்லை எனலாம். கடமை உணர்வில் தவறாத மூவரிடையே காதல் குறுக்கிட்டு சித்து விளையாட்டு நடத்துவதை கிலைமேக்ஸ் காட்சி அற்புதமாக சித்தரிக்கிறது. காதலனை கொல்ல ஆணையிடப்பட்ட காதலி. தான் ஒருதலையாக காதலித்த பெண் தனது உயிர் நண்பனை காதலிப்பதை அறியும் காவல் படை தலைவன்,சீன அரசுக்கு விசுவசமாக இருக்கும் வீரன் --இந்த மூவருக்கிடயே நடக்கும் மனப்போர் தான் கிலைமேக்ஸ். காதல் Vs  கடமை உணர்வு, காதல் vs நட்பு என மோதல் நடக்கிறது. இறுதியில் கடமை, தேசம் அத்தனையையும் தாண்டி காதலும், நட்பும் வெல்கிறது. ஆனால்...

படத்தின் முடிவு சிலருக்கு புரியாமல் போகலாம். ஆனால் நான் புரிந்து கொண்டது இதைத் தான். தேசம், அரசு, போர், சூழ்ச்சி இவை வரும் போகும். அடிப்படை மனித உணர்வுகளான காதலும், நட்பும் இவை அத்தனையும் தாண்டி நிற்கும். இந்த படம் இரு நண்பர்களின் கதை. ஒரு அழகிய காதல் ஜோடியின் கதை. சீனம்,கட்டாரி இவை வெறும் காட்சி அமைப்புகளே. அந்த சீன அரசு என்ன ஆனது?அந்த பறக்கும் கட்டாரி அமைப்பினர் என்ன ஆனார்கள் என்பதை பற்றி யாருக்கு என்ன அக்கரை?அரசுகள் வரும்,போகும். . . காதல் நட்பு இவை என்றும் நிலைத்து நிற்கும்.

காதலுக்கு ஒரு கோட்டையே கட்டி வைத்துள்ளார்கள். சீனக் கலாச்சாரத்தை அற்புதமாக காட்டியுள்ளார்கள். படத்தை பார்க்கும் யாரும் சீனாவுக்கு ஒருமுறை நிச்சயம் செல்ல ஆசைப்படுவார்கள்.

|  |  |

Copyright © 2005 Tamiloviam.com - Authors