தமிழோவியம்
திரைவிமர்சனம் : காதல்
- மீனா

காதலிக்கும் வயதில் பிள்ளைகளை உடைய பெற்றவர்களே தங்கள் பிள்ளைகளுக்கு காசு கொடுத்து, " போய் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வாருங்கள்!!" என்று சொல்ல வைக்கும் அளவிற்கு காதலை மையப்படுத்தி அதிலுள்ள எதார்த்தத்தை உணர்ந்து எடுக்கப்பட்டுள்ள படம் காதல்.

மெக்கானிக் பரத்திற்கும் ஊரையே கலக்கும் தாதா தண்டபாணியின் மகள் பள்ளி மாணவி சந்தியாவிற்கும் இடையே  காதல் தோன்றுகிறது. எங்கே ஊரில் இருந்தால் இருவரையும் பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் இருவரும் ஊரை விட்டு ஓடி சென்னைக்கு வருகிறார்கள். அங்கே தோன்றும் சில சிக்கல்கள் காரணமாக இருவரும் பரத்தின் நண்பன் உதவியுடன் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

காணாமல் போன அண்ணனின் மகளைத் தேடி சென்னை வரும் சந்தியாவின் சித்தப்பா மூர்த்தி, காதலர்களைக் கண்டுபிடிக்கிறார். நயமாகப் பேசி அவர்களை ஊருக்கு அழைத்துச் செல்கிறார். பிறகு வழக்கமான நிஜக் கதையில் நடக்கும் சம்பவங்கள் தான்.. அடித்து உதைத்து காதலர்களைப் பிரித்து விடுகிறார்கள். சந்தியா வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொள்கிறார். பரத்தோ காதலி நினைவாக பைத்தியமாகத் திரிகிறார். கொஞ்ச வருடங்களுக்குப் பிறகு பரத்தும் சந்தியாவும் மீண்டும் சந்திக்கிறார்கள். அங்கே என்ன நடந்தது? இதுவே படத்தின் முடிவு.

எல்லாப்படங்களிலும் காதலிப்பவர்கள் போராட்டத்திற்குப் பிறகு கல்யாணம் செய்து கொள்வதோடு படத்தை முடிப்பார்கள். ஆனால் இயக்குனர் பாலாஜியோ அதற்குப் பிறகும் நிஜ வாழ்வில் ஏகப்பட்ட விஷயங்கள் நடக்கிறது என்பதை அழகாகக் காட்டியுள்ளார்.

பாய்ஸ் மூலமாக அறிமுகமான ஐந்து நட்சத்திரங்களில் உருப்படியாக ஜொலித்துக்கொண்டிருப்பவர் பரத் மட்டுமே. மெக்கானிக்காகவே வாழ்ந்துள்ளார். அவரது அடாவடித்தனமான பேச்சுகளும், காதலிக்காக அவர் மாறும் விதமும் சூப்பர். அறிமுகம் சந்தியா.. ஹீரோயின்கள் எல்லாம் வெறும் பொம்மைகள் என்ற கருத்தை உடைத்தெறிகிறார். அபாரமான, அழகான நடிப்பு.  நல்ல இயக்குனர்கள் உதவியால் இப்படியே இவர் நடித்தால் நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார்.

அப்பா தண்டபாணி மற்றும் ஒற்றைக் கை சித்தப்பா மூர்த்தி இருவரும் யதார்த்த நிஜ வில்லன்கள். ஆய் ஊய் என்று இப்போதைய வில்லன்கள் அனைவரும் கத்திக்கொண்டிருக்கும் வேளையில் சத்தமில்லாமல் காரியத்தை முடிக்கிறார்கள். அதேபோல
'கரட்டாண்டி'யாக வரும் பொடியனின் காமெடியும் கதையோடு இழைந்தோடுகிறது.

விஜய்மில்டனின் நேர்த்தியான ஒளிப்பதிவும் ஹோஷ்வர் ஸ்ரீதரின் இசையும் ஓக்கே. பெரிய பட்ஜெட், பெரிய ஆர்டிஸ்ட் என்று பெரிய பெரிய விஷயங்கள் இருந்தாலும் பெரிய கதை இல்லாததால் தன் முதல் படத்தில் தோல்வியடைந்த இயக்குனர் பெரிய அம்சங்கள் ஒன்றுமே இல்லாமல் கதையை மட்டும் நம்பி இப்படத்தை இயக்கியுள்ளார். கதை தான் இப்போதைய ஹீரோ என்பதை நிரூபிக்கும் விதமாக படமும் அபார வெற்றி பெற்றுள்ளது. பெரிய பட்ஜெட் படங்களை மட்டுமே இயக்கும் ஷங்கர் தயாரித்துள்ள ஒரு சின்ன பட்ஜெட் படம் காதல். தயாரிப்பாளராக ஷங்கர் பெற்றுள்ள பெரிய வெற்றி காதல்..

Copyright © 2005 Tamiloviam.com - Authors