தமிழோவியம்
தராசு : அதிரடித் தீர்ப்பும் அரசாங்க ஆஸ்பத்திரிகளும்
- மீனா

டாக்டர்களின் கவனக்குறைவான மருத்துவத்தால் உயிரிழந்த தன் மனைவியின் இறப்பிற்காக நஷ்டஈடு கேட்டு கோட்கிரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் " பணம் வாங்கும் மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் கவனக்குறைவாக யார் சிகிச்சை அளித்தாலும் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட் ஈடு வழங்கியாகவேண்டும் " என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரூமாபால், தாக்கூர் ஆகியோர் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

" லட்சக்கணக்கில் பணம் வாங்கும் தனியார் மருத்துவமனைகளிலேயே சில நேரங்களில் தவறுகள் நடக்கின்றன.. இதில் இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணத்திற்கோ தான் நாங்கள் வைத்தியம் செய்கிறோம்.. ஆகவே தவறுகள் நடந்தால் அதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.." இந்த ரீதியில் தான் பல ஆண்டுகளாக அரசு மற்றும் ரெயில்வே மருத்துவமனை நிர்வாகிகளும் மருத்துவர்களும் பேசிவருகின்றனர். ஏதாவது ஒரு அமைச்சரின் விசிட்டின் போது மட்டும் சுத்தமாகவும் நோயாளிகளிடம் கனிவுடனும் நடந்துகொள்வதைப் போலக் காட்சியளிக்கும் அரசு மருத்துவமனைகளின் நிஜ அவல நிலை சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றாகத் தெரிந்தாலும் யாரும் ஒன்றும் சொல்வதில்லை.. இங்கே வருபவர்கள் ஏழைகள் தானே - நம்மை எதிர்த்து இவர்களால் என்ன செய்துவிடமுடியும்? என்ற அலட்சிய மனோபாவம் தான் அரசு மருத்துவமனைகளில் நடக்கும் பெரும்பாலான குளறுபடிகளுக்கு மூல காரணம். இத்தகைய மனோபாவம்தான் அரசு ரேஷன் கடைகளிலும் காணப்படுகிறது. தங்களுக்கு வரும் நல்ல அரிசி, பருப்பு வகைகளை பதுக்கி வைத்துக் கொண்டு புழுத்துப் போன அரிசியை - அதுவும் பாதி எடையளவிற்குப் போடும் ரேஷன் கடை ஊழியர்களை எந்தவிதமாகத் திருத்தமுடியும் என்பது கடவுளுக்கே வெளிச்சம். ஊருக்காக அரசாங்கம் வழங்கும் பொருட்களை ஒருவரே அமுக்கும் நிலை கிட்டத் தட்ட அரசாங்கம் சம்மந்தப்பட்ட அனைத்துத் துறைகளிலும் பரவியுள்ளது.

ஏழைகள் மற்றும் மத்திய வர்கத்தினர் என்றாலே அலட்சியப்படுத்தும் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியிருக்கும் தீர்ப்பு ஒரு சம்மட்டி அடி தான்!! இதைப் போலவே தவறு செய்யும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்க உச்சநீதிமன்றம் முன்வரவேண்டும். நீதிமன்றத் தண்டனைக்காகவாது பயந்து மக்களின் உயிருடனோ, உடமைகளுடனோ அலட்சியமாக இருக்கும் மனப்பான்மை அரசு அதிகாரிகளிடமிருந்து விலகவேண்டும். அப்போதுதான் இந்தியா உண்மையில் சமத்துவம் பெறும். அந்த நாள் வருமா?

Copyright © 2005 Tamiloviam.com - Authors