தமிழோவியம்
தராசு : ஒழியட்டும் இலவசங்கள்
- மீனா

 

தனக்கு எதிராகச் செய்யப்பட்ட எல்லாவிதமான மதவாத - இனவாத பிரச்சாரங்களை எல்லாம் முறியடித்து மீண்டும் முதல்வரான மோடியிடமிருந்து நம் தமிழக அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. மக்களை அசர வைக்கும் மெகா கூட்டணி கிடையாது - குஜராத்தில் இலவசம் என்ற பெயரில் அவர் ஒரு குண்டூசியைக் கூடக் கொடுக்கவில்லை. ஆனாலும் அவர் தன் திறமையான அணுகுமுறையால் குஜராத்தை ஒரு நவீன அமெரிக்காவாக மாற்றச் செய்த முயற்சிகள் அவர் மீதிருந்த இனவெறியன் என்ற முத்திரையையும் மீறி மீண்டும் அவரை முதல்வராகச் செய்துள்ளது. இந்துக்கள் மட்டுமல்லாமல் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் எல்லைப்புற மாவட்டங்களிலும் கூட பா.ஜ.க வெற்றி பெற்றிருப்பது மோடியின் சாதனைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

ஆனால் நம் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பது என்ன? வீட்டுமனைப் பட்டாவிலிருந்து மின்சாரம் வரை எல்லாம் இலவசம் - எங்கும் இலவசம்.. தொலைக்காட்சிப் பெட்டி இலவசம் - கேஸ் அடுப்பு இலவசம் - வேட்டி சேலை இலவசம் - விவசாயம் செய்ய நிலம் இலவசம் என்று எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுப்பதைப் போலக் கொடுத்து மக்களை நன்றாக ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய இலவசங்களைப் பெறுபவர்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று பொதுமக்களும் எதிர்கட்சிகளும் தினமும் அலறிக்கொண்டுதான் இருக்கிறார்கள் - ஆனால் ஆட்சியாளார்கள் அதையெல்லாம் கவனிக்கும் எண்ணத்தில் இல்லவே இல்லை.

மினசாரத் தடை ஏற்பட்டதற்கு காரணம் என்ன என்று கேட்டால் தமிழக மின்துறை அமைச்சர் "தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் 5,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால் கடந்த அக்டோபர் முதல் சரியான முறையில் காற்று இல்லாமல் போகவே 1,200 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டது.." என்கிறார். நாலு மாதம் காற்று இருக்காது - மின்சார உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் போன்ற விவரங்கள் எல்லாம் அமைச்சருக்கு முன்பே தெரியாமல் போனது நமது துரதிஷ்டம் தான். நாளுக்கு பாதிநேரம் பவர் கட் என்ற நிலையிலும் விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்குகிறோம் என்று தனக்குத் தானே பாராட்டுப் பத்திரம் வேறு வழங்கிக்கொள்கிறார் அமைச்சர். இதையெல்லாம் கண்டித்து ஒழுங்கு படுத்தவேண்டிய முதல்வரோ தன் குடும்பத்திலிருந்து இன்னும் யாருக்கு என்ன பொறுப்பு கொடுக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்.

ஏகப்பட்ட பிரச்சனைகள் - கலவரங்கள் எல்லாம் நடந்தும் குஜராத்தை வெற்றிகரமாக ஒரு முன்னணி மாநிலமாக மாற்ற மோடியால் முடிகிறபோது குஜராத் அளவிற்கு எந்த ஒரு பெரிய பிரச்சனையும் இல்லாத - மத்தியில் தங்களுக்குள்ள செல்வாக்கைச் சரியாகப் பயன்படுத்தி குஜராத்தை விட பலமடங்கு முன்னேறியிருக்க வேண்டிய தமிழகம் ஆயிரத்தெட்டு நொண்டு சாக்குகளைச் சொல்லிக்கொண்டு சுணங்கிக் கிடக்கிறது.

இலவச திட்டங்கள் எல்லாம் தற்காலிக கவர்சியே.. பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடையாது. தங்களது அன்றாட ஜீவாதாரப் பிரச்சனைகளை யார் சரிவர தீர்த்து வைக்கிறார்களோ அவர்களே எங்களை ஆளத் தகுதியானவர்கள் என்று குஜராத் மக்கள் நடந்து முடிந்த தேர்தலின் போது தெளிவாகச் சொன்னதைப் போல தமிழக மக்களும் என்றாவது சொல்வார்களா? இல்லை இலவச மாயவலையில் இன்னும் பலகாலங்களுக்கு சிக்கித்தவிக்கப்போகிறார்களா ?

Copyright © 2005 Tamiloviam.com - Authors