தமிழோவியம்
தராசு : ராகிங்
- மீனா

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த செவிலியர் பயிற்சிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் செய்த 21 மாணவர்கள் கல்லூரி முதல்வரால் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பாக இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு செவிலியர் பயிற்சி பெறும் மாணவர்களை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்த தாக செய்திகள் வெளியாகின. இதை மருத்துவப் பேராசிரியர்கள் 3 பேர் கொண்ட குழு விசாரித்து ராகிங் நடந்தது உண்மை என்று தெரிவித்துள்ளனர். மேலும் கல்லூரி விடுதியில் இரவு நேரத்தில் தங்கியிருக்கும் போது, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கீழ்த்தரமான முறையில் தங்களை நடத்தியதாகவும் ராகிங் கொடுமை குறித்து வெளியில் சொல்லக் கூடாது என அவர்
கள் மிரட்டியதாகவும் தங்களின் எதிர்காலம் மற்றும் பெற்றோரின் கனவு வீணாகி விடக்கூடாது என்ற காரணத்தால் தாங்கள் சொல்லாமல் பொறுமை காத்ததாகவும் விசாரணைக் குழுவிடம் மாணவர்கள் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட 21 மாணவர்களை கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

காலம் காலமாக தொடர்ந்து நடந்துவரும் மாமியார் மருமகள் கொடுமை போல கல்லூரிகளில் மாணவர்களுக்கு நடக்கும் கொடுமைதான் ராகிங். படிக்க வந்த இடத்தில் ஒருவரை ஒருவர்
துன்புறுத்தி - சித்திரவதை செய்து பார்ப்பதில் சில வக்கிரபுத்தி கொண்ட மாணவர்களுக்கு என்னதான் அப்படி ஒரு இன்பம் கிடைக்கிறதோ தெரியவில்லை. தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளிலும் புதிதாக சேரும் மாணவர்களை துன்புறுத்தும் வகையிலான ராகிங் உள்ளிட்ட செயல்களுக்கு தடை விதிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இருப்பினும் சில கல்லூரிகளில் அவ்வப்போது ராகிங் நடைபெறுவதும், இதில் ஈடுபடும் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதும் தொடர்கிறது. ராகிங் கொடுமை கல்லூரிகளில் காலம் காலமாக நடை பெற்று வந்தாலும் நாவரசு மரணத்திற்குப் பின்புதான் இதன் கொடுமை மக்கள் மனதில் பதியத் தொடங்கியது. மேலும் ராகிங்கிற்கு எதிரான சட்டங்களும் குற்ற விதிகளும் அரசால் இயற்றப்பட்டன.

மருமகளை கொடுமை செய்யும் மாமியார் மற்றும் கணவர் வீட்டாருக்கு சட்டம் சரியான தண்டனையைக் கொடுப்பதைப் போல - இந்தக் கொடுமைக்கு சற்றும் குறையாத ராகிங் கொடுமைக்கும் சம்மந்தப்பட்டவர்களுக்கு சட்டம் உச்சபட்ச தண்டனையைத் தரவேண்டும். தெரியாமல் செய்துவிட்டோம்.. எங்களுக்கு தண்டனை கொடுத்தால் எங்கள் எதிர்காலம் பாழாகிவிடும்..

பெற்றோர் கனவு கலைந்துவிடும் என்பது போன்ற பிதற்றல்களுக்கு கொஞ்சமும் இடம் தராமல் இவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனையை அரசு வழங்கினால்தான் இது போன்ற குற்றங்கள் குறைய ஓரளவிற்காவது வாய்ப்புள்ளது.

அரசாங்கம் மற்றும் கல்லூரி முதல்வர்கள் இத்தகைய கொடுமைகளைச் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து இன்னொரு நாவரசு சம்பவம் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors