தமிழோவியம்
கட்டுரை : கிளி ஜோதிடம்
- திருமலை கோளுந்து

Parrot Jothidamதேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கைக்கும், நிர்ணயிக்கப்பட்ட வாழ்க்கைக்கும் இடைப்பட்ட வாழ்க்கை உன்னதமானவை. அந்த வாழ்க்கையை எளிதில் வாழ்ந்துவிட முடியாது. அப்படி வாழும் மனிதர்களை விளிம்பு நிலை மனிதர்கள் என இலக்கியவாதிகள் சொல்கிறார்கள். அவர்களில், கிளியை வைத்து ஜோதிடம் சொல்லி வருபவர்கள் முதன்மையானவர்கள்.

வெறும் மூன்று ரூபாயினை கிளி ஜோதிடரின் முன்னால் தட்சனையாக வைத்தால், கிளி இருக்கும் கூண்டினை திறந்து கிளியை அதன் பெயர் சொல்லி அழைக்கிறார். அக்கிளியும் வெளியே வருகிறது. யாருக்கு ஜோதிடம் பார்க்க வேண்டுமோ அவரது பெயர், வயதினைச் சொல்லி அவருக்கு ஒரு நல்ல சீட்டை எடுத்துக் கொடு என்று கிளிக்கு ஆணையிடுகிறார். அக்கிளியும் தன் முன்னாள் இருக்கும் சீட்டுகளில் ஒன்றை தேர்வு செய்து தனது கிளி ஜோதிடரிடம் கொடுக்கிறது. அப்படிக் கொடுத்தவுடன் கிளிக்கு இரண்டு நெல் துண்டுகளை பரிசாக கொடுக்கிறார். அதனை தனது அழகிய அலகால் வாங்கி கொறித்து தின்று விட்டு தனது கூண்டிற்குள் சென்று விடுகிறது. கூண்டினை பூட்டிவிட்டு கிளி எடுத்து கொடுத்த சீட்டினை பிரித்து அதில் உள்ள படங்களுக்கு ஏற்ப ஜோதிடம் சொல்கிறார். படங்களுக்கு ஏற்ப மலமலவென்று கருத்தை சொல்கிறார். அவரது சொல்வதைக் கேட்டு திருப்தியடையும் ஜோதிடம் பார்ப்பவரை, விட்டே இரண்டு சீட்டுக்களை எடுக்கச் சொல்கிறார். அவர்கள் எடுத்துக் கொடுக்கும் சீட்டினை பிரித்து அதில் வந்திருக்கும் கடவுள்களைப் படி  கருத்துச் சொல்கிறார். இத்தோடு ஒருவருக்கு ஜோதிடம் சொல்வது முடிகிறது. பின் அடுத்தவருக்கு மேற் சொன்னபடி கிளி ஜோதிடம் பார்க்கப்படுகிறது.

அதாவது உதாரணத்திற்கு மாயக்கண்ணண் கிருஷ்ணன் படத்தை கிளி எடுத்துக் கொடுத்திருந்தால், இந்த Parrot Jothidamசீட்டுக்காரருக்கு மாயக்கண்ணண் வந்திருக்கு, மாயக்கண்ணண் மயக்குவதில் மன்னன். இந்தக் ஜோதிடக்காரரும் மயக்கவதில் மன்னனாக வருவார். தன்னிடம் வரும் எல்லாரையும் தன் பேச்சாலேயே கவர்ந்து விடுவார். குடும்பத்தில் பாசமாக இருப்பார். அதே சமயத்தில் உள்ளே ஒன்றை நினைத்தும், வெளியே ஒன்றைச் செய்வார். இவர் நம்பவும் முடியாது. நம்பாமல் இருக்கவும் முடியாது என்று வேகமாக கருத்தை சொல்கிறார்கள் கிளி ஜோதிடம் பார்ப்பவர்கள்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் எங்களது பூர்வீகம். நாங்கள் அங்கு சுமார் 150 பேர் வாழ்ந்து வருகிறோம். கிளி ஜோதிட வடுவர் என்ற சமூகத்தைச் சேர்ந்த எங்களுக்கு இது குலத் தொழில். எங்களைப் போன்று தமிழகம் முழுவதும் இருக்கிறார்கள் என்று சொல்லும் கருப்பன், தான் பத்து வயதில் இருந்தே கிளி ஜோதிடம் பார்த்து வருவதாக சொல்கிறார். எல்லா கிளி ஜோதிடரும் 32 சீட்டுக்கள் இருக்கும். இதில் பெரும்பாலும் நல்ல செய்திகளை சொல்லும் தெய்வங்களின் படங்கள். சில தீய தெய்வங்களின் படங்களும் உண்டு. முன்பு இருந்த அளவு கிளி ஜோதிடத்திற்கு மதிப்பு தற்பொழுது இல்லை என்றாலும் கிளி ஜோதிடத்தின் மீது மக்களுக்கு இன்னும் அழமான பற்று இருக்கிறது. பிற ஜோதிடத்திற்கும் இந்த ஜோதிடத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் ஜந்து அறிவு கொண்ட ஒரு ஜீவன் எடுத்துக் கொடுக்கும் சீட்டில் இருக்கும் தெய்வத்தின் படத்தை வைத்து ஏற்கனவே எங்களுக்கு கற்றுக் கொடுத்த கருத்தை ஜோதிடமாக சொல்கிறோம். அவ்வளவு தான். இந்த ஜோதிடம் பார்ப்பதற்கு அதிகமாக பணம் வசூலாவது கிடையாது. நான் முதலில் 25 பைசாவில் இருந்து ஜோதிடம் பார்த்து வருகிறேன். தற்பொழுது 3 ரூபாய் வசூலித்து வருகிறேன். கிராமங்கள் தான் எங்களுக்கு இன்று வரை சாப்பாடு போட்டுக் கொண்டு இருக்கிறது. ஒரு வீட்டில் உட்கார்ந்து ஜோதிடம் பார்த்தால் பக்கத்து வீட்டுக்காரர்களும் தானாகவே வந்து ஜோதிடம் பார்ப்பார்கள். ஒரு நாளைக்கு எப்படியும் முற்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் கிளி ஜோதிடம் பார்த்து விடுவார்கள் என்கிறார்.

ParrotJothidamகிளி ஜோதிடம் பார்ப்பவர்களுக்கு நேரம், கிரகம் சரியில்லை என்றால் அவர்களுக்கு கிளி படங்களை எடுத்துக் கொடுக்காது. அப்படி கட்டாயமாக வற்புறுத்தினாலும் அது எடுத்துக் கொடுக்கும் படங்கள் அவ்வளவாக நன்றாக இருக்காது என்கிறார். அவர் ஜோதிடம் பார்க்கும் பொழுது அது நடக்கவும் செய்தது. ஒரு பெண்ணிற்கு பாம்பு சீறுவது போல் படம் வருகிறது. அவருக்கு நேரம் சரியில்லை என்று சொல்லி அதற்கான பரிகாரங்களை சொல்கிறார். தூர்க்கைக்கு அர்ச்சனை செய்யுங்கள், சிவனை வணங்கி வாருங்கள் என்று சொல்கிறார். அவர்களை விட்டே மூன்று சீட்டுக்களை எடுக்கச் சொல்கிறார். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் கிளி எடுத்துக் கொடுத்தது போலவே அவரும் பாம்பு சீறும் படங்களையே தேர்வு செய்து இருக்கிறார். அதற்கான பரிகாரங்களை சொல்கிறார். ஏதற்காக பாம்பு படங்கள் வருகின்றன என்பதற்கு பீதியை கிளம்பும் படி எதையும் சொல்வது இல்லை. மாறாக நேரம் சரியில்லை. இதனை செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு அடுத்தவருக்கு ஜோதிடம் பார்க்க தயாராகிவிடுகிறார். இது சற்று ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது.

இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்க்கையை ஓட்ட முடிகிறதா என்றால், ஏதோ ஓடுகிறது. மக்கள் எங்களை நம்புகிறார்கள். ஏழை, பணக்காரர், உயர் ஜாதி தாழ்ந்த ஜாதி என்று அனைத்து பிரிவினரும் எங்களை கூப்பிட்டு ஜோதிடம் பார்க்கிறார்கள். எங்களின் பிழைப்பும் ஓடுகிறது. இதில் எங்களுக்கு உள்ள வருத்தம் என்னவென்றால் எங்களுக்கு பின் இதனை பார்க்க எங்கள் சமூகத்து குழந்தைகளோ, இளைஞர்களோ முன்வருவதில்லை. அவர்கள் வேறு வேலைக்கும், படிக்கவும் சென்று விடுகிறார்கள். அடுத்த தலைமுறையில் இந்த தொழிலே அழிந்து விடும் என்கிறார் வருத்தத்தோடு.

Copyright © 2005 Tamiloviam.com - Authors