தமிழோவியம்
இயேசு சொன்ன கதைகள் : கேளுங்கள் தரப்படும்
- சிறில் அலெக்ஸ்

கடவுளுக்கும் மனிதனுக்கும் உண்டான உறவின் முக்கியக் கூறாக இருப்பது வேண்டுதல். கேட்டதைக் கொடுப்பவனாய், கையேந்துபவர்களுக்கு இல்லை எனச் சொல்லாதவனாய் கடவுள் எண்ணப்படுகிறார்.

மனித உதவிகள் மறுக்கப்படும்போது கடவுளைத் தேடுவது மனித இயல்பு.

இயேசு தன் சீடர்களுக்கு ஒரு செபத்தை கற்பித்தார். 'பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே. உமது பெயர் போற்றப்படுவதாக உமது அரசு வருக. உமது எண்ணம் விண்ணகத்தில் செயல்படுவதுபோல பூவுலகிலும் செய்யப்படுவதாக. எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல எங்கள் பாவங்களை பொறுத்தருளும். சோதனையில் எம்மை விழ விடாதெயும். தீமையினின்று எங்களை விடுவித்தருளும். ஏனெனில் அரசு வல்லமையும் மாட்சிமையும் என்றென்றும் உமதே."

மிகவும் எளிமையான அதெவேளை இறைவனைத் தந்தையென உரிமையோடு அழைத்து வேண்டும் செபம் இது.

செபங்கள் கேட்கப்படுகின்றனவா? இதை நிருபித்தால் கடவுளையும் நிருபிக்கலாமே? எனும் கேள்விகள் எழுகின்றன. அதிசயங்கள் பலவும் எல்லா காலகட்டங்களிலும், எல்லா மதங்களிலும், வேண்டுதல்களின் பலனாக விளைவதாகச் சொல்லப்படுகின்றன. கடவுள் எப்படி நம்பிக்கைக்குட்பட்டவரோ அதேபோல அற்புதங்களும் அறியப்படுகின்றன.

கடவுள் உதவுவார் எனும் நம்பிக்கை தன்நம்பிக்கைக்கு வலுசேர்ப்பதாய் இருக்கவேண்டும் என நினைக்கிறேன். சோதனைக் காலங்களில், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு வேண்டுதல்களளே துணை. நம்பிக்கையே கைத்தடி.

வேண்டுதலின் உளவியல் கூறுகளை ஆராய்ந்தால் அதன் மனித பலன்கள் பலவாக இருக்கும். சோதனை மிகும் வேளையில் அது எப்படியாவது விலகும் எனும் நம்பிக்கை ஊக்கம்தருமே தவிற வேறென்ன?

மீண்டும் மீண்டும் செபிக்கும்போது ஒரு கவலைகுறித்தான (கவலை தவிர்த்த) மாற்றுச் சிந்தனை நம்மில் பிறக்கிறது.

ஒரு ஊரில் ஒரு நீதிபதி இருந்தான். கடவுளை அஞ்சாதவன்; மனிதரை மதிக்காதவன். அந்த ஊரில் இருந்த ஒரு விதவை நீதி கேட்டு அவளிடம் வருவது வழக்கம். பலமுறை வந்தும் அந்த நீதிபதி மனம் கசியவில்லை. இறுதியாய் அந்த நீதிபதி 'நான் கடவுளுக்கு அஞ்சாதவனாயும் மனிதரைப் பற்றி கவலையற்றவனாயும் இருந்தபோதும் இவள் மீண்டும் மீண்டும் வந்து தொந்தரவு செய்வதால் இவளுக்கு நீதி வழங்குவேன்.' என்றான்.

'அந்தப் பண்பற்ற நீதிபதியைப் பாருங்கள். இவனைவிட விரைவாக இரவு பகலாய் தன்னை வேண்டும் மக்களின் வேண்டுதலைக் கடவுள் தரமாட்டாரா?' என்றார் இயேசு.

Copyright © 2005 Tamiloviam.com - Authors