தமிழோவியம்
சிறப்பு ஆசிரியர் : குப்புசாமியும் ஷட்டில் கார்க்கும்
- அரை ப்ளேடு

எம்ஜியாருன்னதுமே நமக்கு நியாபகம் வர்றது நம்பியாரு..

நம்பியாருன்னா நமக்கு நியாபகம் வர்றது குப்புசாமி.

நம்ப தோஸ்த்து குப்புசாமிக்கு எம்ஜியார் படம்னா உசுரு. வேற யார் படம் கூப்பிட்டாலும் கூட வரமாட்டாப்ல..

குப்புசாமிய நான் முதல்ல பார்த்ததே எங்க ஊரு டூரிங் டாக்கீஸ்ல தான். பெஞ்சி டிக்கட்டு.

சும்மா எம்ஜியாரு நம்பியாரை போட்டு வாங்கு வாங்குன்னு வாங்கிக்னு இருந்தாரு.

"விடாதே வாத்தியாரே. அப்படிதான்."

அது சும்மா சூப்பரான பெஞ்சி. செஞ்ச ஆச்சாரி சும்மா நடுக்காலை உசரமா வச்சி மத்த இரண்டு பக்க காலையும் சின்னதா வச்சிட்டானா.

இல்லை சினிமா கொட்டாவோட தரை மேடு பள்ளமா இருக்கான்னு தெரியல. அது சும்மா சீசா பலக கணக்கா ஆடுதா.

அந்த பக்கம் குப்புசாமி குதிக்க குதிக்க இந்த பக்கம் நானும் சேர்ந்து வாத்தியாருக்காக குதிக்க வேண்டியதா போயிடுச்சி.

"குத்து வாத்யாரே. விடாத அவன."

இப்ப நான் மேல இருந்தேன்.

"அடி. அடி அப்படித்தான்."

இன்னொரு தடவ நான் எம்பி குதிக்க வேண்டியதா இருந்தது.

ஏற்கனவே மூட்டை பூச்சி கடிக்குது. இவன் வேற இந்த பக்கம்.

சரியான காட்டான் அப்படின்னு நினைச்சிக்கிட்டேன்.


அதுக்கப்பால குப்புசாமி நமக்கு தோஸ்தானதே பெரிய கதை.
அவரு நம்ப தோஸ்த்தோட தோஸ்த்தோட தோஸ்த்தா இருந்து அப்பாலிக்கா நமக்கும் தோஸ்த் ஆயிட்டாரு.

குப்புசாமிக்கு கொளத்து வேலை. சும்மா ஒரு பீடியை வலிச்சுக்னு ஆரம்பிச்சாருன்னா கொல்லுறும் மட்டக் கோலும் சும்மா பூந்து விளையாடும்.
அப்பாலிக்கா நம்ப ஊட்ல கொளத்து வேலை இருந்தா நாம நம்ப மேஸ்திரி குப்புசாமியைத்தான் கூப்புடறது.

நாங்க தோஸ்த்துங்க ஷட்டில் கார்க் ஆடற இடத்துல நம்ப குப்புசாமி ஆஜாராயிக்னு இருந்தாரு. ஒருநாள் கை குறையுதுன்னு குப்பு சாமிய கூப்பிட்டோம்.
அன்னியிலிருந்து குப்புசாமியும் ஷட்டில் கார்க் ரெகுலர்.

குப்பு சாமி நல்லா தான் ஷட்டில் கார்க் விளையாட ஆரம்பிச்சாரு.

"குப்பா.. என்னாமா பந்தை எடுக்கற... சும்மா கொல்லுறுல சிமெண்ட் எடுத்து சுவத்துல அடிக்கற கணக்கா"..

"அவ்ளோ நல்லா ஆடுறனா நானு".

"ஆமா அங்க சிமெண்ட சுவத்துல அடிப்ப. இங்க நெட்டுல அடிக்கற. நெட்டை தாண்டி பந்தை தள்ளுயா".

"இன்னா வாத்யாரே இப்படி சொல்லிட்ட. இப்ப நம்ம திறமைய பாரு."
இந்த தபா பின்னாடி இருந்து நம்ம குப்ஸ் அடிச்ச பந்து நெட்டுல படல. மின்னாடி இருந்த எம்மேல வந்து விழுந்தது. நெட்டு கிட்ட கூட போகலை.

கொஞ்சம் கொஞ்சமா நம்ப குப்ஸ்க்கு பேட் மிண்டன் திறம பொங்கி வர ஆரம்பிச்சது.

இப்ப பந்து நெட்டை தாண்டி எதிர்ல இருந்த இரண்டு பிளேயரையும் தாண்டி பக்கத்து கிரவுண்டுல வுழுந்தது.

"இன்னா ?" குப்புசாமி பந்து கோர்ட்டுக்கு உள்ள விழுந்ததா என்ற ஆராய்ச்சியில்.

"இன்னுதான். பக்கத்து கோர்ட்டுக்கு. நம்ம கோர்ட்டுக்கு இல்லை".

"நான் இன்னாபா பண்றது. காத்து பந்தை தூக்கிக்னு போயிடுச்சி".

நம்ப முடியாம நான். என்னா குப்புசாமி அடிச்ச அடியில பந்து எதிர்காத்தையும் தாண்டி போய் அந்த பக்கம் விழுந்து இருந்தது.

"காத்தா எதிர்காத்து இல்லை அடிக்குது"

"எதிர் காத்துல பந்து போகணும்னு ஓங்கி அடிச்சம்பா. ஓவரா அடிச்சிட்டேன் போல"...

நாளும் பொழுதும் குப்புசாமியின் அட்டகாசங்கள் தொடர்ந்தன. வெறுத்துப் போனேன் நான்.

அப்புறமா நான் வேலை விஷயமா வெளியூரு போக அப்புறம் இரண்டு வருசம் கழிச்சிதான் குப்புசாமியை பார்த்தேன்.

"குப்புசாமி எப்படி இருக்க".

"நல்லா இருக்கேன் வாத்யாரே"

"இப்பவும் ஷட்டில் விளையாடுறியா?' கிண்டலாக கேட்டேன்.

"நல்லா கேட்ட வாத்யாரே. நம்ம ஊர்ல இந்த வருஷம் நடந்த டோர்னமண்டுல ஐயாதான் வின்னர். தெரியும்ல".

ஆச்சரியத்தோடு குப்புசாமியை பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors