தமிழோவியம்
தராசு : யாருக்கும் வெட்கமில்லை
- மீனா

தமிழகத்தில் நடக்கப்போகும் சட்டமன்றத் தேர்தலில் ஒரு வேளை தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமைக்க இயலுமா? அப்போது ஆட்சியில் தாங்களும் பங்கு கேட்க முடியுமா? என்று தோழமைக் கட்சிகள் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், "எங்கள் கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியும் கூட்டணி ஆட்சியை விரும்பவில்லை..வரப்போகும் பொதுத் தேர்தலில் தி.மு.கவை ஆட்சியிலே அமர்த்துவது, தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளை வெற்றி பெறச் செய்வது என்ற உறுதியில் மக்கள் இருக்கிறார்கள்" என்று கருணாநிதி அதிரடி பேட்டி அளித்துள்ளார். ஆக தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதே கிடையாது என்பதை பட்டவர்தனமாக அறிவித்துவிட்டார் தி.மு.க தலைவர். தி.மு.க. மட்டுமல்லாமல் அ.தி.மு.கவும் கிட்டத்தட்ட இதே நிலையைத் தான் கூட்டணி ஆட்சி விவகாரத்தில் எடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்தியாவில் மத்திய அரசிலிருந்து பல மாநிலங்களிலும் கூட்டாசி நடைபெற்று வந்தாலும் தமிழகத்தைப் பொறுத்த வரை மாநிலத்தில் தங்கள் கட்சி வலுவான நிலையில் உள்ளது.. எனவே மற்ற கட்சிகளை சேர்த்துக் கொண்டு கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நிலை தங்களுக்கு இல்லை என்று தி.மு.க மற்றும் அ.தி.மு.க நிச்சயமாக நினைப்பதன் வெளிப்பாடே தி.மு.க தலைவரின் மேற்கூறிய அறிக்கை.

ஐந்தாண்டுகளுக்கு முன்னால் 2001 ல் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த கருணாநிதி "இதுவே எனது கடைசித் தேர்தல்.." என்றெல்லாம் உணர்ச்சிகரமாகப் பேசினார். சேப்பாக்கம் தொகுதியில் வெற்றியும் பெற்றார். ஆனால் தான் முதல்வராகாத காரணத்தால் 5 ஆண்டுகளில் ஒரு முறை கூட சட்டமன்றத்தில் நுழையக்கூட அவர் முயற்சி செய்யவில்லை. "மீண்டும் முதல்வராவதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை" என்று ஒப்புக்கு அவர் கூறி வந்தாலும் இந்த முறையும் அவரை முதல்வராக முன்னிலைப்படுத்தியே தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் செய்யும் முடிவில் உள்ளன. ஏனெனில் கருணாநிதியைத் தவிர வேறு எந்தத் தலைவரும் தி.மு.க கூட்டணியில் முதல்வர் பதவிக்கு போட்டியிடவே முடியாத சூழ்நிலை.

தங்கள் கட்சி அறுதிப் பெறும்பான்மை பெற்று ஜெயித்தால் மட்டுமே சட்டமன்றத்திற்குள் நுழைவோம்.. அதுவும் முதல்வராக என்ற முடிவில் கருணாநிதி மட்டுமல்ல, ஜெயலலிதாவும் உறுதியாக இருந்துள்ளார். 1996 ல் நடந்த பொதுத் தேர்தலே இதற்கு ஆதாரம்.

ஆக மொத்தத்தில் அரசியல்வாதிகள் அனைவரும் தங்களுக்கு ஏற்றவாறு தாங்கள் முன்பு பேசிய பேச்சுகளையும் கொடுத்த வாக்குறுதிகளையும் மறந்து விடுவார்கள். தங்களுக்கு ஏற்றவாறு சட்டமன்ற, நாடாளுமன்ற சட்டதிட்டங்களையும் மாற்றிக்கொள்வார்கள். இவர்கள் யாருக்கும் வெட்கமில்லை..

அரசியல்வாதிகள் மட்டுமல்ல.. கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டார்களே.. தங்கள் கடமைகளைச் செய்யாமல் தவறிவிட்டார்களே.. இவர்களை இம்முறை தேர்வு செய்யாமல் தோற்கடித்து இவர்களுக்கு பாடம் புகட்டுவோம் என்ற எண்ணம் பெரும்பான்மையான மக்களுக்கு தோன்றுவதே இல்லை.. "அரசியல்வாதிகள் ஒருவரும் சரியில்லை" என்று புலம்பிக்கொண்டே தகுதியற்ற - சுயநலவாதியான ஒருவரை மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள்.. மொத்தத்தில் இத்தகைய அரசியல்வாதிகளை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்து ஜனநாயகத்தை குட்டிச்சுவராக்கும் மக்களுக்கும் வெட்கமில்லை..

Copyright © 2005 Tamiloviam.com - Authors