தமிழோவியம்
ஆன்மீகக் கதைகள் : தர்மரின் பொறுமையும் திரௌபதியின் பெருமையும் - 6
- ர. பார்த்தசாரதி
பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5

இப்போது யுதிஷ்டிரன் ஆட்டத்தில் தோல்வியடைகிறான் என எண்ணிப் பார்ப்போம். அதன் மூலம் நாட்டை பணயமாக வைத்து ஆடியது தவறு என்றாகிறது. தண்டனையாக பதிமூன்று வருடம் வனவாசம் அனுபவிக்க வேண்டும். தண்டனைக்காலம் முடிந்ததும், யுதிஷ்டிரன் தனது நாட்டை திரும்ப பெறுவது தான் முறையாகும். தண்டனைக் காலத்தில் இந்திரப்பிரஸ்த்தம் மன்னரின் பாதுகாப்பில் இருக்கும். இப்போது அரசர் தான் தனது முடிவைத் தெரிவிக்க வேண்டும்."

திருதராஷ்டிரன் ஒரு நொடியில் எல்லவற்றையும் புரிந்து கொண்டுவிட்டார். 'யுதிஷ்டிரன் ஜெயித்தால், மொத்தமாக நாடு முழுவதையும் அவனுக்கு கொடுத்துவிட்டு, துரியோதனன் வனவாசம் செல்ல தயாரா? இல்லை - இந்திரப்பிரஸ்த்தத்தை மட்டும் பிரச்சனைக்கு உரியதாக ஆக்கி, துரியோதனன் ஜெயித்தால், பதிமூன்று வருடம் பாண்டவர்கள் வனவாசம் முடித்து வரும் வரை, யுத்த பயமின்றி இரண்டு நாடுகளையும் ஆள்வதா? இரண்டில் ஒன்றை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்பதை விதுரன் சொல்லிவிட்டான். சகுனியும், துரியோதனனும் ஏதோ கூடிப் பேசி, 'நாடு முழுவதும் நம்முடையது; மறுமுறையும், ஏதோ சூது செய்து யுதிஷ்டிரனை வனவாசம் அனுப்பிவிடலாம்' என்று தாங்களே முடிவெடுத்து விட்டார்கள். விதுரன், 'முடிந்தால் யுதிஷ்டிரனிடம் இந்திரப்பிரஸ்த்தத்தை திரும்பக் கொடுத்துவிட்டு சமாதானமாய் போக முயற்சி செய். இல்லை சூதில் அவன் தோற்றால், பதிமூன்று அனுபவித்துவிட்டு நாட்டை திரும்பக் கொடுத்துவிடு' என்று கோடி காட்டி விட்டான்.

தவறு செய்தவரை, குற்றமிழைத்தவரை தீர்மானிப்பதற்கு சொக்கட்டான் ஆட்டம் என்று அறிவித்துவிட்டு, அதன் முடிவு தெரியுமுன்னே இந்திரப்பிரஸ்த்தம் எங்களுடையது என்று அறிவிக்க வழியில்லை. அத்துடன் அது மிகவும் ஆபத்தானதும் கூட. மொத்த இராஜ்யமும் யுதிஷ்டிரனுக்குப் போய் சேர்ந்து விடலாம். தவிர துரியோதனன், அந்த சூழ்நிலையில் காடு போவது என்பது, அவன் உடல் மட்டும் தான் காடு போகும் என்றாகிவிடும். உயிரை பீமன் கவர்ந்து கொண்டு விடுவான். ஜெயம் என்று ஏற்பட்டு மொத்த அரசும் யுதிஷ்டிரனுடையது என அறிவித்த உடனேயே, பீமன் சபையிலேயே துரியோதனனை பிணமாகத்தான் பார்க்க விழைவான்.

அதே சமயம், இந்திரப்பிரஸ்த்தம் மட்டும் பிரச்சனைக்குரியது என்று இருந்தால், துரியோதனன் தோற்றதும், பதிமூன்று வருடம் தண்டனை நான் கொடுத்திருக்கிறேன். அது முடியும் வரை ஏதும் பேசக்கூடாது எனக் கூறி, சமாதானம் செய்து, பாண்டவர்களை இந்திரப்பிரஸ்த்தத்திற்கு திரும்ப அனுப்பிவிடலாம். யுதிஷ்டிரனும் கட்டுப்படுவான், மற்ற பாண்டு புத்திரர்களையும் கட்டுப் படுத்துவான். தவிர, துரியோதனனுக்கு ஜெயம் என்றால் பாண்டவர்கள் வனவாசம் சென்று வரும் வரை ஏதும் பேச மாட்டார்கள்.

துரியோதனனும் இந்த பதிமூன்று வருடத்தில் திருந்துவானா? கெட்டது பெண்ணாலே என்று கூறி விடுவார்கள். பெண்தான் தாய் உருவத்தில், நம்மை உருவாக்கி உலகத்தில் அறிமுகப்படுத்துகிறாள். அவள்தான் நமக்கும் முதல் அறிமுகம். அதே பெண்வர்க்கம் தான் பின் மனைவி என்றாகி, வாழ்வில் பங்கு கொள்கிறாள். கெடுவது பெண்ணை மதிக்காததாலே என்று இருக்க வேண்டும். மதிப்பது என்பதை சரியாக புரிந்து கொள்ளாமல், பெண்ணுக்கு அடிமைப்படுவது கூடாது என எண்ணி, கடைசியில் பெண்ணை மதிக்காமல் போவது என்றாகிவிட்டது. இதற்கு மேலும், பெண்ணை அடிமைப்படுத்துவது பெரிய செயல் என்றும் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதில் துரியோதனனும் ஒருவன். காந்தாரியைப் போல் ஒரு பெண் தாயாக வாய்த்தும், இவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான்?

இராஜ்யத்தை மட்டும் நினைத்திருந்தான் என்றால் பெரிய தவறு ஏதும் ஏற்பட்டிருக்காது. பெண்மையை மதிக்காததால் பெரும் தீங்கு இவனை சூழ்ந்து வருகிறது. இதிலிருந்து எவ்வளவு நாள் தப்பித்து வாழப் போகிறான்? என்னால் முடிந்ததைச் செய்கிறேன். பிறகு காலம் தான் வழிகாட்ட வேண்டும்.'

திருதராஷ்டிரன்: "சபையோர்களே! மாமந்திரி விதுரன் கூறிய வார்த்தைகளைக் கேட்டிருப்பீர்கள். 'அபிப்பிராயங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன; ஆனால் முடிவு மன்னருடையது' என்று கூறினார். அரசர் யதேச்சையாக முடிவெடுப்பது என்றால், பின் பல கருத்துகளைக் கேட்க வேண்டியது இல்லை. ஆக பல கருத்துகளை கேட்டு ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டியது மன்னனின் கடமை ஆகிறது.

நேற்று சபையில் நடந்தவற்றிற்கு பொறுப்பு துரியோதனனுக்கா அல்லது யுதிஷ்டிரனுக்கா என்று தீர்மானிக்கப்படுவதற்காக சொக்கட்டான் ஆட்டம் என்று தீர்மானித்தோம். அந்த தவறுகளுக்கு, குற்றங்களுக்கு தண்டனை வனவாசம் என்றும் கூறினோம். தவறான வழியில் இந்திரப்பிரஸ்த்தத்தை இந்த ஹஸ்தினாபுரத்து அரசு அடைய விழைகிறதா? என்ற கேள்வி எழலாம். இது பற்றி இங்கு கூடியிருக்கும் சான்றோர்களும் கல்விமான்களும் கருத்து தெரிவிக்கவில்லை.

நான் முன்பு கூறியது போல, அரச குடும்பம் இரு பிரிவுகளாக பிரிந்து மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படக் கூடாது என்று இருக்கலாம். இப்போது விதுரர் கூறியது போல் இந்திரப்பிரஸ்த்தம் யுதிஷ்டிரன் ஆளுகையிலும் இல்லை, திருதராஷ்டிர மன்னன் ஆளுகையிலும் இல்லை. சொக்கட்டான் ஆட்டம் முடிந்து, சபையில் இது தெரிய வரும்.

ஆட்டத்தில் யுதிஷ்டிரன் தோற்றால், தண்டனையாக பன்னிரண்டு ஆண்டு வனவாசமும், ஒரு வருட அஞ்ஞாதவாசமும் செய்ய வேண்டும். அஞ்ஞாதவாசமும் உண்மையில் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதற்காக அந்த ஒரு வருடத்தில் அவர்கள் வெளிப்பட்டால் மறுபடியும் வனவாசம் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது வரை இந்திரப்பிரஸ்த்தம், ஹஸ்தினாபுரத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். யுதிஷ்டிரன் திரும்பி வந்ததும், அவனிடம் இந்திரப் பிரஸ்த்தம் ஒப்படைக்கப்படும்.

அதே போல் துரியோதனன் தோல்வியடைந்தால் அவனும் இதே போல் வனவாசம் மேற்கொள்ள வேண்டும். தண்டனைக் காலத்தில் இளவரசன் என்ற முறையில் எந்த சலுகைகளும் தரப்படமாட்டாது. அரச குடும்பத்தை சேர்ந்தவன் என்ற முறையில் சில சலுகைகள் வழங்கப்படும். ஹஸ்தினாபுரத்தின் இளவரசாக யாரை முடி சூட்டுவது என்று பிறகு தீர்மானிக்கப்படும். இப்போது விதுரரே, காய்களை சோதித்து ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்."

விதுரர் நினைக்கிறார்: 'மன்னர், முதல் நாள் பகடைக் காயில் சூது இருந்ததை உணர்ந்து இன்று உலோகத்தில் காய் செய்து ஆட அனுமதித்திருக்கிறேன் என்கிறார் போலும். அதே சமயம் துரியோதனன், "சுத்த செம்பினால் காய்கள் செய்யப்பட்டிருக்கின்றனவா? என்று மட்டும் சோதித்து ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்று அவசரப்பட்டான். காயை அரச குடும்பத்தின் கௌரவத்திற்கு ஏற்ப தங்கத்தினாலோ, அல்லது வெள்ளியினாலோ செய்யவில்லையே - ஏன்? முந்திக் கொண்டு துரியோதனன் செம்பு என்று சொன்னதின் மூலம் இவனுக்கு இது முன்பே தெரிந்திருக்கிறது என்றாகிறது. 'செம்பு என்று மட்டும்' என்று வேறு கூறினான். வேறு எதையோ மறைக்க நினைத்து என்னை மற்றது என்ன? என்று சிந்திக்க செய்துவிட்டான்.

ஆமாம்! செம்பில் துர்தேவதைகளை ஏவலாம். சகுனி எதையும் செய்யக் கூடியவர். என்னால் 'செம்பா?' என்று மட்டும் தான் சோதிக்க முடியும். யுதிஷ்டிரன் இதை அறிவானா? "தங்கள் உத்திரவு பெரியப்பா" என்று அவையில் அவன் கூறிய போது ஆட்டம் இழந்து வனவாசம் போவதற்கு முன்பாக "தாங்கள் உத்திரவு இட்டால் இப்போதே வனவாசம் போகத் தயார்" என்பது போலத்தான் அவன் மனநிலை இருக்கிறது என்று தெரிகிறது. எது எப்படியோ! நேற்று நடந்தவற்றிற்கு நேர்மாறாக, மன்னர் ஏனோ என் மூலம் அவை நடவடிக்கைகளை நடத்த தீர்மானித்து விட்டார். என்னால் முடிந்த வரை எனக்கு தெரிந்த தர்ம நியாயங்களை முன் வைத்து, இரு அரசுகளும் தனித்தனியாக செயல்பட ஒரு வழியை சொல்லிவிட்டேன்.

இப்போது துரியோதனன் தோற்றால் நல்லது. அவன் செய்த அக்கிரமங்களுக்கு, வனவாசம் ஒரு தண்டனையாய் அமையும். அதே சமயம் பல வருட வனவாசம், அவனை சிந்திக்க வைத்து நல்வழிப் படுத்தலாம். ஆண்டவன் சித்தம் எப்படியோ?"

விதுரர் (சபையிலிருந்த பொற்கொல்லரைப் பார்த்து): "சபை நடவடிக்கைகளை இதுவரை கவனித்திருப்பீர்கள். அரசர் பகடைக் காய்கள் உலோகத்தில் செய்ய உத்திரவு இடப்பட்டுள்ளது என்றார். அதே சமயம் இளவரசர் துரியோதனன், சுத்த செம்பில் செய்யப்பட்டுள்ள காய்கள் என்ற விபரத்தை தெரிவித்திருக்கிறார். அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் விளையாட பகடைக்காய்கள், சொக்குத் தங்கத்திலோ அல்லது சுத்த வெள்ளியிலோ செய்திருக்கலாம் என்று பொற்கொல்லரான தாங்கள் நினைக்கலாம். செம்பு இரு விதமாக உபயோகப்படும். துர்தேவதைகளை விரட்டும் யந்திரத் தகடுகள் செய்வதற்கும், ஆலயங்களில் புனித கங்கை நீரை அபிஷேக தீர்த்தமாய் கொண்டுவருவதற்கு குடங்கள் செய்யவும், உயர்வாய் மதித்து செம்பை உபயோகிப்பார்கள். இப்போது, பொற்கொல்லரே! இந்த காய்கள் சுத்த செம்பினால் செய்யப்பட்டவையா? என்று சோதித்து சபையில் அறிவித்து விடுங்கள்."

பொற்கொல்லர் (மனத்தினுள்): 'மகா மந்திரி விதுரர் ஒரு வார்த்தையில் காய்களை சோதித்து சொல்லும் என்று கூறியிருக்கலாம். ஒருக்கால் அரச சபை பொற்கொல்லரை பார்த்து செம்பை சோதிக்க சொல்லப்படுகிறதே என்று தான் எண்ணிவிடக் கூடாது என்று மந்திரி செம்பின் உயர் உபயோகங்களையும் எடுத்துக் கூறுகிறார் போலும். அரச கட்டளையை நிறைவேற்றுவது தான் எனது கடமை'.

யுதிஷ்டிரர் (மனத்துள்): 'சித்தப்பா, செம்பைப் பற்றி பொற்கொல்லருக்கு விபரம் கூற தேவை என்ன? இதில் எனக்கு ஏதோ சொல்ல விழைகிறார். செம்பு துர்தேவதைகளை விரட்டும். புண்ணிய தீர்த்தம் கொணர குடமாகும். இருவித உபயோகம் என்றாரே? துர்தேவதைகளை வயப்படுத்த செம்பு உபயோகமாகும் என்பதையும் யோசி என்று சொல்லாமல் சொல்கிறார். எனக்குப் புரிகிறது. நேற்று விளையாட்டில் வினையாக இரண்டு காய்களை சகுனி உபயோகப்படுத்தினார். அதை திரௌபதி அறிந்தே அழித்தாள். இன்றும் வினையாக செம்பில் செய்த காய்களை வைத்து விளையாடி வெல்ல நினைக்கிறார் சகுனி. இந்த வினையை எப்படி அழிப்பது?

நேற்று மாலை சகாதேவன், பார்வையைப் பற்றி அழகாகக் கூறினான். எதையும் கண்ணால் சரியாகப் பார்ப்பது; அதே சமயம் மற்றவர்கள் தங்கள் கண்ணில் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும் பார்ப்பது; கண்களால் மட்டும் பார்க்காமல் புத்தியோடு பார்ப்பது அல்லது மனத்துடன் சேர்ந்து பார்ப்பது என்று பார்வையின் இலக்கணம் சொல்வது போல், ஆல், இல், ஓடு, உடன் என்ற ஆரம்ப அடிப்படை இலக்கண உருவுகளைக் கொண்டே பெரிய உண்மையை சொல்லிவிட்டான். இப்போது நான், கண்ணால் பார்ப்பதோடு, துரியோதனன் சகுனி கண்ணில் பார்க்க வேண்டும். புத்தியோடு பார்க்க வேண்டும்; அத்தோடு மனத்துடன் பார்க்க வேண்டும்.

இதோ பொற்கொல்லர் காயை சோதித்து சபையில் அறிவித்து விட்டார். துரியோதனன், சகுனி இவர்கள் கண்ணில் பார்ப்பது அடுத்தது. துரியோதனன் கண்ணில் அபரிமித நம்பிக்கைதான் தெரிகிறது. அத்துடன் குதூகலமும் தெரிகிறது. ஆக அவன், 'நிச்சயம் யுதிஷ்டிரன் தோற்றுப் போவான், வனவாசம் செல்வான்; இந்திரப் பிரஸ்த்தம் நமது ஆளுகையில் வரும்' என்று தான் எண்ணி குதூகலிக்கிறான் என நினைக்கத் தோன்றுகிறது.

ஆசைப்பட்டவனுக்கு அவன் ஆசையை பூர்த்தி செய்தால் திருப்தி ஏற்படும். அதே சமயம் பொறாமையுள்ளவனுக்கு, எதிராளி படும் கஷ்டம் தான் திருப்தி தரும். வயிறு நிறைய உண்ணவேண்டும் என ஆசைப்படுபவனுக்கு, உண்ண உணவு அளித்தால் அவன் ஆசை நிறைவேறும். கண்ணில் திருப்தி தரும். அதே சமயம் வயிற்று வலிக்காரன் மற்றவனைப் பார்த்து பொறாமைப்பட்டால் என்ன செய்வான்? அவன் பொறாமை அடுத்தவன் உண்ணும் சோற்றில் மண்ணை அள்ளிப் போடும் அவன் குணத்திலிருந்து தெரியவரும். துரியோதனன் பார்வையைப் போல் தான் சகுனியின் பார்வையும் இருக்கிறது. ஆனால் சகுனி தன் கபடத்தை மறைப்பதற்காக நேராகவே பார்ப்பதில்லை.

சித்தப்பாவின் சொற்களை புத்தியைக் கொண்டு அறியும் போது துர்தேவதையை எதிர்பார்த்து ஆடு என்று கூறுகிறார் எனத் தெரிகிறது. இதோ, துரியோதனன் தன் சார்பில் மாமா சகுனி ஆடுவதற்கு காய்களை எடுத்துக் கொடுக்கிறான். காய்களின் பளபளப்பைப் பார்க்கும் போது, இப்போதுதான் புதிதாக உலைக் களத்திலிருந்து வந்தது போல் இருக்கிறது.'

சகுனியின் கையில் காய்கள். யுதிஷ்டிரர் மேலும் யோசிக்கிறார்: 'இப்போது மனத்தினால் பரந்தாமனை சிந்தித்து காய்களைப் பார்க்க வேண்டும். நிச்சயம் உண்மை கண்ணில் படும்.'

ஒரு நொடி கண்மூடி தியானித்து சகுனியின் கை காய்களைப் பார்க்கிறார் யுதிஷ்டிரர். துர்தேவதைகள் காயில் கட்டுண்டு இருப்பது கண்ணில் தெரிகிறது. யுதிஷ்டிரர் பார்வை பட்டதும் அந்த துர்தேவதைகளின் முகத்தில் ஒரு தெளிவு. யுதிஷ்டிரர் மனத்தால் அந்த துர்தேவதைகளுடன் பேச ஆரம்பிக்கிறார்.

யுதிஷ்டிரர்: 'ஏன் இப்படி?'

துர்தேவதைகள்: 'நாங்கள் என்ன செய்ய முடியும்? நல்ல மனிதர்களுக்கு, பட்டம் பதவி என்று வந்ததும், மமதையில் மனம் குழம்பி தவறுகள் பல செய்ய ஆரம்பிப்பது போல எங்களுக்கும், உபசாரங்கள் பலிகள் செய்ததும், மகிழ்ந்து மமதையின் காரணமாக நிலை மறந்து, கட்டுப் படுகிறோம். தேவதைகளாக இருந்த நாங்கள் துர்தேவதைகள் என்ற பட்டத்தையும் பெறுகிறோம். இப்போது சகுனி சொன்னபடி ஆடுவது தவிர வேறு வழி கிடையாது. தங்கள் பார்வை பட்டதும் கன்றிய உடலில் சற்று நிம்மதி. மனமும் அமைதி அடைகிறது. அவ்வளவுதான்.'

யுதிஷ்டிரர்: 'உங்கள் எல்லோரையும் விடுவிக்க என்ன செய்ய வேண்டும்?'

துர்தேவதைகள்: 'எங்களை விடுவிப்பதற்கு தாங்கள் வனவாசம் போக வேண்டும்'

யுதிஷ்டிரர்: 'எனக்கு தெரிகிறது. வனவாசம் ஒரு பொருட்டு அல்ல. ஆனால் என் புண்யபலன்களைக் கொடுத்தால் சகுனி ஆடுவதற்கு முன்பே விடுதலை பெறுவீர்கள் அல்லவா?'

துர்தேவதைகள்: 'நாங்கள் நிரந்தர விடுதலை பெற தாங்கள் புண்யபலன்களை கொடுத்து உதவலாம். அதே சமயம் இதுவரை சகுனி செய்த உபசாரங்களுக்கு சகுனி ஆட்டத்தில் ஜெயம் பெற வேண்டும்; அதன் முடிவு தங்கள் வனவாசம். சகுனி தோற்றால் தன் கழுத்தை அறுத்து வைத்து விடுவதாய் கொடிய சபதம் செய்திருக்கிறார். அந்த இக்கட்டிலிருந்தும் விடுதலை பெற வேண்டும்.'

யுதிஷ்டிரர்: 'நான் வனவாசம் போகிறேன். இந்த வனவாசத்தில் பல நன்மைகள் ஏற்படும். முதலில் நீங்கள் தண்டனையிலிருந்து விடுபடுவீர்கள். இரண்டாவது சகுனி, பிராணத்தியாகம் செய்ய வேண்டியது இல்லை. கடைசியாக அதி முக்கியமாக சகோதரர்களை கொல்லும் பாபம் என் உடன் பிறப்புகளான, பீமனுக்கும், அர்ச்சுனனுக்கும் ஏற்படாது. தேவதைகளே, தவறாக கூறியதற்கு மன்னிக்கவும். பீமன் மட்டும் தான் சகோதரனைக் கொன்றவனாவான். அர்ச்சுனன், சகோதரன் நண்பனைக் கொன்றவனாவான். அவசரத்தில் வாக்கில் தவறாய் வந்துவிட்டது. என்னை மன்னியுங்கள்.'

துர்தேவதைகள் (மிகவும் நடுங்குகின்றன): 'தங்கள் உயர்ந்த குணத்திற்கு மன்னிப்பு தேவையில்லை.'

யுதிஷ்டிரர்: 'பின் ஏன் இப்படி நடுங்குகிறீர்கள்?'

துர்தேவதைகள்: 'தேவ ரகசியம் கண்முன் தெரிகிறது. நாங்கள் மௌனமாய் இருப்பதே சிறந்தது (கர்ணன் யுதிஷ்டிரனின் மூத்த சகோதரன் என்று தேவதைகளுக்கு தெரிகிறது)'

யுதிஷ்டிரர்: 'சொல்லக் கூடியது ஒன்றுதானா?'

துர்தேவதைகள்: 'யுதிஷ்டிரரே மன்னியுங்கள்! அதைச் சொல்ல எங்களுக்கு அனுமதியில்லை. தேவரகசியத்தை நாங்கள் பகிர்ந்து கொள்ள முடியாது.'

யுதிஷ்டிரர்: 'என் கண்முன்னே உள்ளவற்றையே சரியாக புரிந்து கொள்ள முடியாத போது நான் தேவ ரகசியத்தை அறிய முயல மாட்டேன். அதைப் பற்றி சிந்திக்கவும் மாட்டேன், கவலை வேண்டாம்.'

துர்தேவதைகள்: 'யுதிஷ்டிரரே! இந்த பெருந்தன்மைக்காகவாவது, நாங்கள் பன்னிரண்டு வருடம் வனவாசம் செய்யும் போது காட்டில் மரமாயும், செடி கொடிகளாயும் இருந்து சேவை செய்வோம்.'

யுதிஷ்டிரர்: 'ஆகா! உங்கள் வாக்கு சத்திய வாக்கு. விருக்ஷங்கள் என்பது உத்தமமான பிறவி. தனக்கென வாழாது, பிறர்க்காகவே வாழும் உயிர் என்பது மரங்கள் தான். எந்த இடத்தில் விதைக்கப் படுகிறதோ அந்த இடத்திலேயே, அந்த மண்ணிலேயே வளர்வது அவற்றின் பண்பு. தவிர காட்டுத்தீ வந்தாலும், நின்ற இடத்திலேயே நின்று, எரிந்து மடியுமே தவிர ஓடி ஓளிவதில்லை. அதன் கம்பீரமும், பிறந்த மண்ணின் மீது கொண்ட பற்றும் சொல்லி முடியாது. அதே போல் அதன் இலைகளை கால்நடைகளுக்கு உணவாகத் தருகிறது. எல்லோருக்கும், சுவை தரும் பழங்களையும் தருகிறது. யோகிகளும், ஞானிகளும் அந்த பழங்களை விரும்பி உண்டு மகிழ்கிறார்கள். கனி தரும் மரங்களில் பல ஜாதிகள் இருந்த போதும், அவற்றின் உத்தமமான, கனிதரும் குணத்தை ஒரு போதும் மாற்றிக் கொள்வதில்லை.

Copyright © 2005 Tamiloviam.com - Authors