தமிழோவியம்
உடல் நலம் பேணுவோம் : வைட்டமின் B6 - பிரிடாக்ஸின்
- பத்மா அர்விந்த்

வைட்டமின் B6 தண்ணீரில் கரையக்கூடிய ஒரு வைட்டமின், மூன்றுவித நிலலகளில் காணப்படுகிறது. பிரிடாக்சின், பிரிடாக்ஸால், பிரிடாக்ஸின் அமின் என்ற வேதிகூட்டுப்பொருட்களாக கிடைக்கிறது. புரதங்கள் செரிமானத்தற்கு தேவையான 100 வித என்ஸைம்களின் செயல் திறனுக்கு  இந்த வைட்டமின் மிக அவசியம்.

நரம்பு மண்டலம், உடலின் எதிர்ப்பு சக்தி இவற்றிற்கும் இந்த வைட்டமின் அவசியம். ட்ரிப்டொபன் எனப்படும் இன்றியமையாத அமினோ அமிலம் நியாசின் எனப்படும் வைட்டமின் ஆ   க மாறவும் பிரிடாக்ஸின் அவசியம் தேவைப்படுகிறது.

திசுக்களுக்கு பிரானவாயுவை எடுத்து செல்ல ஹீமோகுளோபின் அவசியம். அந்த ஹீமோகுளோபினை தயாரிக்க பிரிடாக்ஸின் அவசியம். ஆகையால் பிரிடாக்ஸின் குறைபாடு இரத்த சோகை ஏற்பட காரணமாகிறது.

உடலின் எதிர்ப்பு சக்தி உள்ளே நுழையும் பாக்டீரியா போன்ற நுண்னுயிர்க்கிருமிகளை எதிர்க்க உதவுகிறது. அவ்வாறு நோய்க்கிருமிகளை திறம்பட எதிர்க்க உடலுக்கு சக்தி, சில தாதுக்கள் உதவியுடன் வெள்ளை அணுக்கள் தேவை. இப்படிப்பட்ட வெள்ளை அணுக்கள் உற்பத்தி ஆகும் சில உறுப்புகள் ( Thymus, spleen and Lymphnode) ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கும் பிரிடாக்சின் அவசியம்.

மூளை குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரையின் சக்தியில் மட்டுமே செயலாற்றுகிறது. விரதங்கள் இருக்கும் நாளில் போதிய கார்போஹைடிரேட் எனப்படும் சர்க்கரை இல்லாத போது, கல்லீரலில் சேர்த்து வைத்திறுக்கும் கிளைக்கோஜன் எனப்படும் கூட்டு பொருளை வேதியியல் முறைகளில் சர்க்கரையாக மாற்ற பிரிடாக்ஸின் மிக அவசியம்.

வைட்டமின் B6உம் நரம்பு மண்டலமும்:  நரம்பு மண்டலத்தில்  வலி மகிழ்ச்சி போன்றவற்றை எடுத்து செல்லும் சில புரதங்களான செரோட்டோனின் போன்றவை சுரக்க பிரிடாக்ஸின் அவசியம். இந்த புரதங்கள் நரம்பு திசுக்கள் ஒன்றோடொன்று இணைந்து செய்ல்பட மிக அவசியம். இவற்றின் குறைபாடு ஏற்பட்டால் இழுப்பு, அதிக வலி, அதிக மன அழுத்தம் தலைவலி போன்றவை ஏற்படலாம்.

செரோட்டோனின் போன்ற புரதங்கள் குறைபாடு ஏற்பட்டால், பிரிடாக்ஸின் தனியாக மாத்திரியாக கொடுத்தால் நோயாளிகளுக்கு மிக அதிக அளவில் குணம் ஏற்படுவது இல்லை.ஆனால் அதேசமயம் பிரிடாக்ஸின் உட்கொள்ளாமல் இருந்தால் இந்த நோய் அறிகுறிகள் அதிகம் தென்படுகிறது. இன்னமும் சரியான முறையில் பிரிடாக்ஸின் எந்த அளவு நரம்பு மண்டல செயல்பாடுக்குறைகளை நீக்க உதவ முடியும் என்று ஆராய்ச்சிகள் திட்ட வட்டமாக கூறவில்லை.

மாதவிடாய் காலத்தில் தண்ணீர் சேர்ந்து கொண்டாலோ, வயிற்று வலி இருந்தாலோ பிரிடாக்ஸின் உதவுகிறது. பிரிடாக்ஸின் இயற்கையாகவே நீர் சேர்வதையும் உடலில் ஒருவித மந்த நிலை ஏற்படுவதையும் தவிர்க்க வல்லது.

காசநோய்க்காக உட்கொள்ளும் ஐசோநியசைடு என்ற மருந்து அதிக அளவில் சேர்ந்தால் உடலுக்கு நச்சாக மாறி நரம்பு மண்டலத்தை பாதிக்கும். அவ்வாறாக நச்சாக மாறாமல் தடுக்க பிரிடாக்ஸின் பரிந்துரைக்க படுகிரது. காசநோய்க்கான மருந்துகளோடு பிரிடாக்ஸினும் எடுத்து கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். போலிக் அமிலம் குறைபாடு இருந்தால் ஹோமியோசிஸ்டின் என்ற அமினோ அமிலம் அதிக அளவில் இரத்ததில் சேர்கிறது. இந்த ஹோமியோசிஸ்டின் பிலேட்லெட்டுகள் ஒன்றோடொன்று சேர்ந்து கொள்ளவும், இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு பக்கவாதம் போன்றவை ஏற்பட சாத்தியங்கள் அதிகமாக்குகிறது. இதை தடுக்க பிரிடாக்ஸின் கொடுக்கப்படுகிறது.


B6 அதிகமாக உள்ள உணவு:

பருப்புகள், மீன், இறைச்சி, பழங்கள் காய்கறிகள் இவற்றில் அதிகமாக இருக்கிறது.

ஒருநாளைக்கு எவ்வளவு உடலுக்கு தேவை என்பதையும் பரிந்துரைக்கப்பட்ட அளவையும்  கீழ்க்காணும் பட்டியலில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

வயது ஆண் பெண் கருத்தரித்த பெண்கள் பாலூட்டும் அன்னை
Age 19-50 1.3 mg 1.3 mg - -
Ages 51+ 1.7 mg 1.5 mg - -
All Ages - - 1.9 mg 200 mg

 

எப்போது வைட்டமின் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது?

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இக்குறைபாடு காண்பது அரிதாகும். ஆனால் இன்னும் பொருளாதார வளார்ச்சி அடையாத நாடுகளில் பலருக்கு இக்குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
குறைபாடு ஏற்படும் ஆரம்ப காலங்களில் நோய்க்கான அறிகுறி தென்படுவது இல்லை. அதிக காலத்திற்கு குறைபாடு இருந்தால் தோலில் தடிப்பும் வீக்கமும் ஏற்படுவது நோயின் ஆரம்ப அறிகுறியாகும்.
நாக்கில் புண் ஏற்படுவது, மன அழுத்தம், அதிக குழப்பம், சில சமயம் கைகால் இழுப்பு ஆகியவை ஏற்படக் கூடும்.

அதிக அளவில் மது அருந்துபவர்கள், வயதானவர்கள் இவர்களுக்கு பிரிடாக்ஸின் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். மது பிரிடாக்ஸினை அழித்து வெளியேற்றி விடுவதால் குறைபாடு ஏற்பட வாய்ப்பு அதிகம். அதேபோல சரிவிகித உண்வு உட்கொள்ளாதவர்கள் பிரிடாக்ஸின் சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

ஆஸ்தமாவிற்காக மருந்து எடுத்துகொள்ளும் குழந்தைகள் பிரிடாக்ஸின் தனியாக எடுத்து கொள்ள வேண்டும். தியோபிலின் உடலில் சேர்த்து வைத்துள்ள பிரிடாக்ஸினை அழிக்க வல்லது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors