தமிழோவியம்
கட்டுரை : ஆண்கள் படைத்த உலகை அழிப்போம்
- செல்வன்

 
"உரிமை என்பது பிச்சையல்ல. அதை கேட்டுப் பெறாதே. எடுத்துக்கொள்" என்றார் காரல் மார்க்ஸ். உண்மைதான். நமக்கு சொந்தமானதை அடுத்தவன் வைத்திருந்தால் புரட்சி செய்துதான் அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நாம் வாழும் உலகம் ஆண்களால் படைக்கப்பட்ட உலகம். இந்த உலகில் வாழ பெண்களுக்கு மூச்சு திணருகிறது. நுகத்தடியில் பூட்டப்பட்ட பசுவாய் பெண்ணினம் வாடுகிறது. அதை பிணைத்திருக்கும் சங்கிலிகள் கற்பனையானவை,ஆண்களால் சுமத்தப்பட்டவை என்பதை அவ்வினம் உணர்ந்தால் அது வீறு கொண்டு எழும்.

பெண் உடல் வலு குறைந்தவள் என்ற வாதமே தவறு.அவள் உடல் வலு குறைவாக ஆக்கப்பட்டாள் என்பது தான் உண்மை.16 இன்ச் கர சுற்றளவுடன் ஆண் தோள் தட்டி நின்றால் "ஆகா" என மற்ற ஆண்கள் கைதட்டுவார்கள்.16 இன்ச் கரத்தை ஒரு பெண் உருவாக்கி காட்டினால் முகம் சுழிப்பார்கள். மதகுருவிலிருந்து, காதலன் வரை நாலா பக்கமும் இருந்து புத்திமதிகள் பறக்கும்.

பெண்கள் உருவ அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என இந்த ஆணாதிக்க சமுதாயம் விதிமுறைகளை உருவாக்கி வைத்துள்ளது. அந்த விதிகளுக்கு கட்டுப்பட்ட பெண்கள் கொடி இடையும், மெல்லிய தோள்களும் பெற மெனக்கெடுகிறார்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அந்த விதிகளுக்கு கட்டுப்பட்டு பெண்ணினம் உடல் வலு குறைந்து ஆணுக்கு அடிமையாய் போய்விட்டது.

ஆணுக்கு சமமான உரிமை பெறுவது தான் பெண்ணுரிமை என்பது தவறான வாதம். எந்த ஆணுக்கு சமமான உரிமையை பெண் பெற வேண்டும்? கறுப்பின பெண்களுக்கு கறுப்பின ஆண்களுக்கு சமமான மரியாதை கொடுத்தால் அது போதுமா? கறுப்பின ஆண்களுக்கே சம மரியாதை கிடையாது. ஆக பெண்விடுதலை என்பது சமூக ஏற்றத்தாழ்வுகள் மறைந்தால் தான் காரிய சாத்தியமாகும்.

நாம் வாழும் உலகம் ஆண்களால் படைக்கப்பட்டது. கடவுளை கூட ஆணாய் கற்பனை செய்தவர்கள் தான் ஆண்கள். கடவுளின் பூமியில் அவதாரம் எடுத்தபோதும் ஆணாய் தான் பிறந்தார். கடவுளை நேரில் தரிசித்த மகான்கள் பெரும்பாலும் ஆண்கள். அனைத்து மத ஸ்தாபகர்களும் ஆண்கள். சட்டம் இயற்றுவோர், மன்னர்கள் அனைவரும் ஆண்கள். இப்படி ஆண்களால் படைக்கப்பட்ட இந்த உலகில் புஜபல பராக்கிரமமே பிரதானம்.

கொலைகள் நிரம்பிய,யுத்தமும் வன்முறையும் நிரம்பிய,பெண்ணினத்தை கீழே போட்டு மிதித்த ஒரு உலகை ஆண்கள் சிருஷ்டித்து அதில் வாழ பெண்களை வற்புறுத்துகிறார்கள். இவ்வுலகில் தொழப்படும் கடவுள் ஆண்தான்.

ஆணுக்கு பதில் பெண்கள் உலகை படைத்திருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். அன்பும் அருளும் நிரம்பிய உலகமாக அது இருந்திருக்கும். அதில் போர்கள் இருந்திருக்காது. படுகொலைகள் இருந்திருகாது. தாய்மையும் அன்பும் பொங்கி வழியும் உலகமாக அது இருந்திருக்கும்.

அத்தகைய உலகம் இனி சாத்தியமில்லை என்றாலும் ஆண்கள் படைத்த இவ்வுலகில் வாழ்வதும் சாத்தியமில்லை. ஆண்கள் படைத்த உலகை அடியோடு அழித்துவிட்டு புதிதாக ஒரு பொன்னுலகம் படைக்கபடவேண்டியது அவசியம்.

மேற்கெங்கும் அத்தகைய உலகங்கள் வேகமாக படைக்கபடுகின்றன. அங்கே பெண் ஆணின் அடிமை அல்ல. சம உரிமை படைத்த தோழி. உலகை செதுக்கும் சிற்பியராக ஆணும் பெண்ணும் அங்கு கரம் கோர்த்து செயல்படுகின்றனர்.

மேற்கே சுதந்திர கதிரவன் உதித்துவிட்டான். கிழக்கேயும் அவன் கதிர்கள் பரவத்தொடங்கிவிட்டன. ஆண்களால் படைக்கப்பட்ட இவ்வுலகம் அழியத் தொடங்கிவிட்டது.

தனியொருத்திக்கு உரிமை தராத இந்த ஜெகத்தை விரைந்து அழித்திடுவோம். ஆணும் பெண்ணும் சமமாய் வாழும் புதிய பொன்னுலகம் விரைவில் படைப்போம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors