தமிழோவியம்
திரைவிமர்சனம் : ஆதி
- மீனா

Aadhiபடம் என்னவோ விறுவிறுப்பாக ஆரம்பிக்கிறது. பீச்சில் அழகாக ஓடிக்கொண்டிருக்கும் த்ரிஷாவிடம் பேச்சுக்கொடுக்கிறார் சக ஓடும் பார்ட்டியான முன்னாள் போலீஸ் அதிகாரி தேவன். பேச்சோடு பேச்சாக தேவனைப் போட்டுத் தள்ளிவிட்டு அநாயாசமாக நடக்கிறார் த்ரிஷா. கல்லூரியில் படிக்கும் அழகு தேவதையாக வருபவர் அவ்வப்போது தன் மாமா நாசருடன் சேர்ந்து எதிரிகளை உளவு பார்க்கிறார். "நம்ம குடும்பத்தை அழிச்ச அவங்களை அழிக்காம விடமாட்டேன் மாமா!" என்று அடிக்கடி டயலாக் பேசுகிறார். சரி மொத்த கதையும் த்ரிஷாவைச் சுற்றித்தான் நடக்கப்போகிறதோ என்று நினைக்கும் போதே விஜய் அறிமுகம். அப்பா மணிவண்ணன், அம்மா சீதா, அன்பான தங்கை என்று அழகான குடும்பத்திற்கு சொந்தக்காரர். சென்னைக் கல்லூரியில் படிக்க டெல்லியிலிருந்து பிடிவாதமாக விஜய் கிளம்ப, அவரைத் தனியே அனுப்ப மனமில்லாத மொத்த குடும்பமும் சென்னைக்கு குடிபெயர்கிறார்கள்.

த்ரிஷா படிக்கும் அதே கல்லூரியில் சேரும் விஜய்க்கு ஆரம்பம் முதலே த்ரிஷா மீது ஒரு ஈர்ப்பு தோன்றுகிறது. ஒரு கட்டத்தில் வில்லன் கோஷ்டியைச் சேர்ந்த ஒருவனைத் தீர்த்துக் கட்ட த்ரிஷாவும் நாசரும் முயன்று கொண்டிருக்கும் வேளையில் நடுவில் வரும் விஜய் வில்லனை போட்டுத் தள்ளுகிறார். விஜய்க்கும் வில்லன் கோஷ்டிக்கும் என்ன பகை என்பதிலிருந்து ஆரம்பிக்கிறது பிளாஷ்பேக்.

நேர்மையான போலீஸ் அதிகாரி பிரகாஷ்ராஜ். அவரது மகன் விஜய். பிரகாஷ்ராஜின் தம்பி நாசர், அப்பா விஜயகுமார், தங்கை அவர்களது குடும்பம், குழந்தைகள் என்று பெரிய கூட்டுக் குடித்தனம். வில்லன் சாய்குமாருடன் பிரகாஷ்ராஜ் மோத, அதனால் பிரகாஷ்ராஜின் மொத்த குடும்பத்தையும் அழிக்கிறார் சாய்குமார். அதிலிருந்து தப்பிக்கும் நாசரும் த்ரிஷாவும் ஒரு பக்கம் பிரிய, அநாதையாக தவித்துக் கொண்டிருக்கும் விஜயை வளர்க்கிறார்கள் மணிவண்ணன், சீதா தம்பதிகள். தங்கள் குடும்பத்தை அழித்த வில்லனைப் பழிவாங்க தனித்தனியாக புறப்படும் விஜய்யும் த்ரிஷாவும் ஒரு கட்டத்தில் தாங்கள் இருவரும் யார் என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள். வழக்கம் போல வில்லன் கோஷ்டியினர் விஜய், த்ரிஷா யார் என்பதைத் தெரிந்து கொண்டு நாசரைக் கொன்றுவிட்டு த்ரிஷாவைக் கடத்திச் செல்கிறார்கள். விஜய்க்கும் சாய்குமாருக்கும் இடையே நடக்கும் மோதலில் வில்லன் கொல்லப்பட.. கதை அவ்வளவே...

காலம் காலமாக பார்த்து அலுத்துப்போன கதை. விஜய் நன்றாக சண்டை போடுகிறார், டான்ஸ் ஆடுகிறார், காதல் காட்சிகளில் வெளுத்து வாங்குகிறார் என்றாலும் நடிப்பில் புதிதாக ஒன்றுமே இல்லை. ஒரே மாதிரி நடிப்பதை விஜய் எப்போது மாற்றிக்கொள்வாரோ தெரியவில்லை.

த்ரிஷாவின் அறிமுகம் என்னவோ சூப்பர் தான். ஆனால் அதற்குப் பிறகு அவரை வழக்கமான கதாநாயகியாக ஆக்கிவிட்டார் இயக்குனர். இருந்தாலும் த்ரிஷாவின் மற்ற படங்களில் அவரது நடிப்பிற்கு ஆதியில் அவரது நடிப்பு எவ்வளவோ தேவலை.

கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கும் கேரக்டர் பிரகாஷ்ராஜ். அருமையான நடிப்பால் அசத்துகிறார். நாசருக்கு பெரிய அளவில் நடிக்க வாய்ப்பு கொடுக்காதது ஏனோ? ஏதோ ஒப்புக்கு வந்து போவதைப் போலத் தோன்றுகிறது. விவேக் தாதாவாக அறிமுகமாகும் காட்சி மட்டுமே ஓக்கே. மற்றபடி அவரது நகைச்சுவையில் புதிதாக ஒன்றும் இல்லை.

அறிமுக வில்லன் பிரபல கன்னட நடிகர் சாய்குமார். வில்லத்தனத்தில் புதிதாக ஏதாவது ரசிக்கும்படி செய்யப்போகிறார் என்று பார்த்தால் புஸ் என்று அனைவரது எதிர்பார்ப்பிலும் மண்ணை அள்ளிப்போடுகிறார். விஜய் யார் என்பதைக் கண்டுபிடித்து அவரை அழிக்கத் துடிக்கும் சாய்குமார் வீட்டிற்கே தான் அடித்துப்போட்ட அவரது ஆட்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்து போட்டுவிட்டு மணிக்கணக்கில் உட்கார்ந்து பக்கம் பக்கமாக டயலாக் பேசிவிட்டுப் போகிறார் விஜய். ஆனால் சாய்குமார் என்னவோ வைத்தகண்வாங்காமல் விஜயைப் பார்த்துக்கொண்டு சும்மா நிற்கிறார். அடிக்க வரும் தன் ஆட்களையும் தடுத்துவிட்டு விஜயைப் பற்றி புகழ்ந்து தள்ளுகிறார். என்ன லாஜிக்கோ?

கதையில் ஏகப்பட்ட ஓட்டைகள் இருப்பதை இயக்குனர் ரமணா எப்படி கவனிக்கத் தவறினாரோ தெரியவில்லை. பயங்கர வேகத்தில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் வண்டியிலிருந்து ஏதோ சாதாரண காரிலிருந்து இறங்குவதைப் போல இறங்குகிறார்கள் ஹீரோவும் வில்லனும். அதைப் போலவே விஜய்யின் முதுகில் மணிக்கணக்கில் தீ பற்றி எரிகிறது. மனிதர் கண்டு கொள்ளவே இல்லை.. ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின் இந்த சண்டைக் காட்சிகளை இயக்கும் போது தூங்கிவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இயக்குனர் ரமணா கதையைத் தான் தெலுங்கிலிருந்து சுட்டுவிட்டார். திரைக்கதையிலாவது கொஞ்சம் அக்கறை காட்டியிருக்க வேண்டாமோ?

கதை, திரைக்கதை எல்லாம் புஸ்வாணம்.. இதற்கு ஆறுதலாக இருப்பவை வித்யாசாகரின் இசையும் செளந்தர்ராஜனின் கேமராவும் தான். மொத்தத்தில் ஆதி ரசிகர்களின் எதிர்பார்பில் பாதியைக் கூட நிறைவு செய்யவில்லை என்பதே உண்மை.

Copyright © 2005 Tamiloviam.com - Authors