தமிழோவியம்
தராசு : போகாத ஊருக்கு வழி
- மீனா

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் மீதான கொலை வழக்கு குற்றச்சாட்டுகள் தகுந்த ஆதாரத்து நிரூபிக்கப்படாததால் அவரையும் அவரது மனைவி மற்றும் டிரைவரையும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்துள்ளது ஐதராபாத் கோர்ட். இதை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்கள் ஆந்திர போலீசார். இதில் விசித்திரம் என்னவென்றால் சுடப்பட்டவர்களே பாலகிருஷ்ணா தங்களைச் சுடவில்லை என்று கூறியிருப்பது தான். இது மட்டுமல்லாமல் போலீசாரால் சாட்சிகள் என்று கூறப்பட்டவர்களில் ஒருவர் விடாமல் அனைவரும் பல்டியடித்து, நடந்தது எதுவும் தங்களுக்குத் தெரியாது என்ற ரீதியில் வாக்குமூலம் அளித்துள்ளார்கள். பணபலம் - அதிகாரபலம் இருப்பவர்கள் சிக்கும் பெரும்பான்மையான வழக்குகளில் நடக்கும் வழக்கமான நிகழ்வுதான் இது.

இந்நிலையில் எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்டு இவ்வழக்கைத் தொடரப்போவதாக அறிவித்துள்ளார்கள் என்பது புரியாத மர்மமாகவே இருக்கிறது. மேலும் இதில் சி.பி.ஐ தலையிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களே நடந்ததை ஒப்புக்கொள்ள மறுக்கும் போது போலீசார் மேற்கொண்டு இவ்வழக்கைத் தொடருவோம் என்று கூறிவது அவர்கள் தங்கள் நேரத்தையும் நீதிமன்ற நேரத்தையும் வீண்டிக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

இந்த வழக்கைப் போல குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் விலைக்கு வாங்கி - தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிப்பது உலகின் அனைத்து நாடுகளிலும் நடக்கும் சகஜமான விஷயங்களின் ஒன்றாகக் கருதப்படும் இக்காலத்தில், ஆந்திர போலீசார் இப்படிப் பொங்கி எழுவது தேவை இல்லாத ஒன்றாகும். போலீசார் தலைகீழாக நின்றாலும் பாதிக்கப்பட்டவர்கள் பாலகிருஷ்ணாவிற்கு எதிராக சாட்சி சொல்லப்போவதில்லை (அவர்களுக்கு அவரால் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போனால் மட்டுமே அவர்கள் உண்மையை ஒப்புக்கொள்வார்கள்).

ஆக இந்த வழக்கில் வீணடிக்கப் போகும் நேரத்தில் போலீசாரும் நீதிமன்றமும் உண்மையாக நீதி கேட்டு காத்திருப்பவர்களை கவனிக்க ஆரம்பிக்கட்டும். நியாயம் கேட்டு காவல் துறை - நீதித் துறையை அணுகுபவர்களின் குறையைத் தீர்க்கட்டும். இந்த வழக்கில் காட்டும் வேகத்தையும் சுறுசுறுப்பையும் மற்ற வழக்குகளிலும் காட்டட்டும். காட்டுவார்களா?

Copyright © 2005 Tamiloviam.com - Authors