தமிழோவியம்
திரைவிமர்சனம் : திருப்பாச்சி
- மீனா

தன் தங்கை மீது பாசமலர் சிவாஜி ரேஞ்சிற்கு பாசம் வைத்திருக்கும் அண்ணன், அவள் நல்வாழ்விற்காக எதையும் செய்யத் துணிகிறார் - செய்து முடிக்கிறார்.. இதுவே திருப்பாச்சியின் ஒருவரிக் கதை.

திருப்பாச்சிக்கு பக்கத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் அருவாள் பட்டறை நடத்தி வருபவர் விஜய். இவரது தங்கை மல்லிகா. தங்கைக்காக எதையும் செய்யக்கூடிய அண்ணன். தன் ஊரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாததால் தங்கையை கொஞ்சம் மார்டனான ஊரில் தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற திடமான முடிவில் இருக்கிறார் விஜய். இந்நிலையில் சென்னைவாசியான ஒருவர் மல்லிகாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார். மாப்பிள்ளை ஊர் சென்னை என்றதுமே கல்யாணத்திற்குச் சம்மதிக்கும் விஜய், திருமணம் முடிந்ததும் தங்கையை சென்னையில் விட்டுவிட்டு வர தன் நண்பணோடு கிளம்புகிறார்.

சிங்காரச் சென்னைக்கு வந்தபிறகுதான் பட்டண வாழ்கையின் உண்மையான சுகதுக்கங்கள் விஜய்க்கு புரிகிறது. சென்னையில் நடக்கும் சில அக்கிரமங்களைப் பார்த்துக் கொதிக்கும் விஜய், அங்கே ரெளடிகளால் தன் உயிர் நண்பன் கொல்லப்பட்டவுடன் புயலாக மாறுகிறார். தங்கையை கிராமத்தில் விட்டுவிட்டு சென்னைக்குத் திரும்பும் விஜய், அராஜகம் செய்து கொண்டிருக்கும் ரெளடிகள் அனைவரையும் தேடித் தேடி கொலை செய்கிறார். அதை வதம் என்று குறிப்பிடுகிறார். இதில் அவரது பே¡லிஸ் நண்பன் யுகேந்திரன் விஜய்க்கு உதவி செய்கிறார். முடிவில் தங்கை குழந்தையுடன் சென்னைக்குத் திரும்பும் போது அமைதியின் மறு உருவமாகத் திகழ்கிறது சென்னை!! அவ்வளவே!!

ஒப்பனிங் சீனில் இருந்து அச்சு அசலாக ரஜினி ஸ்டைலை பின்பற்றியிருக்கிறார் விஜய். நடை, உடை, டயலாக் என்று கிட்டத்தட்ட எல்லாமே ரஜினி ஸ்டைல் தான். ஆரம்ப காட்சிகளில் கொஞ்சம் காமெடி பண்ணும் விஜய் பாதிப்படத்திலிருந்து பயங்கர சீரியசான ஆளாக மாறிவிடுகிறார். விளைவு ஏகப்பட்ட சவால் - சண்டை..  இடையிடையே திரிஷாவுடன் நாலு டூயட்.  தனியாளாக நின்று ஏகப்பட்ட வில்லன்களை ஒழித்துக்கட்டிகிறார். அதுவாவது பரவாயில்லை என்றால் ரமணா ஸ்டைலில் வசனம் பேசுவது ரொம்ப ஓவர்.

அப்பாவியான கிராமப் பெண் முகம் மல்லிகாவிற்கு இயற்கையாகவே அமைந்திருக்கிறது. அண்ணே அண்ணே என்று அவர் உருகுவதும், அண்ணன் மீது பாசமழை பொழிவதும், ரெளடிகளால் தானும் தன் கணவரும் தாக்கப்படும் நேரத்தில் விஜயிடமிருந்து வரும் போன் காலை அவர் சமாளிக்கும் விதம் என்று பல இடங்களில் சபாஷ் பே¡ட வைக்கிறார். படத்தின் உண்மையான ஹீரோயின் இவர்தான். இனி கோடம்பாக்கத்தின் அபிஷியல் தங்கையாக இவர் மாறாமல் இருந்தால் சரி!

த்ரிஷா - ஒரு பஸ் டிக்கெட்டின் பின்னால் எழுதக்கூடிய அளவிற்குத்தான் இவருக்கு படத்தில் டயலாக். தமிழ் படங்களுக்கு ஹீரோயின்கள் நாலு பாட்டிற்கு டூயட் பாட மட்டுமே தேவை என்ற நிலை என்று மாறுமோ தெரியவில்லை. இவர் நிலையே இப்படி என்றால் இவரது பாட்டியாக வரு எம்.என்.ராஜத்தின் நிலை என்றவென்று சொல்ல வேண்டியதில்லை.

கோட்டா சீனிவாசராவ், பசுபதி என்று படத்தில் மூன்று முக்கிய வில்லன்கள். வில்லத்தனத்தில் ஒன்றும் புதிதாக இல்லை. விஜயின் நண்பராக வரும் பென்சமின் நல்ல தேர்வு. விஜயன், லிவிங்ஸ்டன், மனோஜ்.கே.ஜெயன் என்று ஏகப்பட்டவர்கள் படத்தில்.

மணிஷர்மா, தினா, தேவி ஸ்ரீ பிரசாத் - மூன்று இசையமைப்பாளர்கள் படத்தில். இருந்தாலும் அதே டப்பாங்குத்து பாட்டுகள் தான். எதுவும் மனதில் நிற்கும் ரகமில்லை. ஸ்டண்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷ். ஒளிப்பதிவாளர் சரவணின் கேமரா அருமை. இயக்குனர் பேரரசு பாதிப் படம் வரை கதையை யோசித்திருக்கிறார். பிற்பாதியில் படத்தில் கதை ஒன்றும் இல்லாததால் சண்டை மூலமே படத்தை ஓட்ட முடிவு செய்திருக்கிறார். சிங்காரச் சென்னையில் ரெளடிகளைத் தவிர வேறு யாருமே இல்லாத¨தப் போல காட்டியிருப்பது ரொம்ப ஓவர். தயாரிப்பாளர் செளத்ரி இயக்குனரிடம் கதையே கேட்கவில்லை போலிருக்கிறது. மொத்தத்தில் திருப்பாச்சியில் பாராட்ட ஒன்றும் இல்லை. குற்றம் சொல்ல நிறையவே இருக்கிறது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors