தமிழோவியம்
காந்தீய விழுமியங்கள் : பின்னுரை
- ஜெ. ரஜினி ராம்கி

J Rajini Ramkiசத்திய சோதனை படிப்பதற்கு முன்பே நான் படித்த புத்தகம் சாவியின் 'நவகாளி யாத்திரை'. நாடே சுதந்திரம் கிடைத்த கொண்டாட்டத்தில் இருந்தபோது மகாத்மா காந்தி மட்டும் ஏன் சோகத்தில் பீகார் பக்கம் பாதயாத்திரை போனார் என்கிற விஷயம் ரொம்ப நாளாக என் மண்டையை குடைந்து கொண்டிந்த விஷயம். காந்திஜியை வெறும் அகிம்சாவாதியாகவும், சுதந்திரப்போராட்ட தலைவராக மட்டுமே பள்ளி வாழ்க்கையில் படித்துப் பார்த்துவிட்டு விவரம் தெரிந்த வயதில் மற்ற முகங்களை பற்றியும் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தபோது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. மகாத்மா காந்திஜியை தெரியாதவர்கள் இன்று உலகத்தில் இருக்க முடியாது. ஆனால் அவரது கொள்கைகள்? 

காந்திஜி, ஆன்மீகத்தை வெற்றிகரமாக அரசியலில் புகுத்தியவர் என்பதில் சந்தேகமில்லை. ஆன்மீகம், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கவேண்டும் என்பதுதான் அவரது விருப்பம். இந்தியாவின் ஆன்மா, ஆன்மீகம்தான் என்பதை அடிக்கடி சொல்லிவந்தவர் அவர். தான் சார்ந்த மதத்தின் மீது தீவிரப் பற்றும், மற்ற மதத்தினரை மதிக்கும் மாண்பும் கொண்ட ஓரே தலைவராக காந்திஜியை மட்டும்தான் சொல்ல முடியும். கடவுள் பற்றிய காந்திஜியின் தத்துவார்த்தங்கள், உண்மையான ஆன்மீகவாதியின் குரலைவிட ஆன்ம பலம் கொண்டவை. அரசியலோ, ஆன்மீகமோ, குடும்ப வாழ்க்கையோ எதுவாக இருந்தாலும் தனிமனித ஒழுக்கம் முக்கியமான விஷயமாக இருக்கவேண்டும் என்கிற காந்தீய கொள்கை, காலாகாலத்துக்கும் பொருந்தும்.

மதச்சார்பின்மை என்பதற்கு இலக்கணமாக இருந்து காட்டியவர் காந்திஜி. அவரால் மட்டுமே சிறுபான்மை சகோதரர்கள் உடனிருக்கும்போது ராம நாமத்தின் பெருமையை மக்களுக்கு விளக்கி சொல்ல முடிந்தது. பிரார்த்தனையும், உண்ணாவிரதமும் கடவுளை அடைய வழி என்கிற விஷயத்தை மக்களுக்கு தானே முன்னுதராணமாக இருந்து சொல்ல முடிந்திருக்கிறது. ஆன்மீகவாதிகளாலேயே முயற்சி செய்யப்படாத விஷயம் இது. 

காந்திஜியின் பொருளாதாரக் கொள்கைகள் இன்றுவரை புரிந்து கொள்ளப்படாமலே போய்விட்டனவோ என்கிற சந்தேகம் எனக்கு உண்டு. கதர் நூற்பதை முன்னிறுத்தியதற்கு காரணமே சுதேதி தொழில்கள் சுறுசுறுப்படைய வேண்டும் என்பதற்குத்தான். உள்நாட்டு தொழில்கள் நலிந்துவிடும் என்பதற்காக எதிர்க்கப் போய் இயந்திரங்களுக்கு எதிரானவர் என்கிற அவப்பெயரையும் அவர் வாங்கிக்கொள்ள நேர்ந்தது. பொருளாதார கொள்கைகளையெல்லாம் பரீட்சித்து பார்த்த பின்னர் இப்போதுதானே உள்நாட்டுத் தொழில்களை ஊக்கப்படுத்துவதால் மட்டுமே இந்தியா தன்னிறைவு அடைய முடியும் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறோம்!

ஆதாரக்கல்வி பற்றிய காந்திஜியின் கொள்கைகள் தெளிவானவை. ஆனால் ஆட்சியாளர்களால் கண்டுகொள்ளப்படாமல் போனதுதான் புதிர். முதியோர் கல்வியின் அவசியத்தை அப்போதே சொன்னார். கலை, இலக்கியமெல்லாம் பொழுதுபோக்காக மேம்போக்காக இருந்துவிடாமல் மக்களுக்கு ஏதாவது ஓரு வகையில் பயனாக இருக்கவேண்டும் என்றார். அறிவியல் பற்றி தனக்கு எதுவும் தெரியாதென்று வெளிப்படையாக சொன்னவருக்கு விஞ்ஞானத்தால் நமது பண்பாட்டிற்கு எந்த பங்கமும் வராது என்கிற நம்பிக்கை இருந்தது அவரது தீர்க்கதரிசனத்தை காட்டுகிறது.

தொழிலாளர் நலன் பற்றி பேசும்போது காந்திஜி ஒரு நல்ல கம்யூனிஸ்ட். கிராமப் பஞ்சாயத்துக்கள் பற்றியும் அதிகார பரவலாக்கல் பற்றிய அவரது எழுத்துக்களிலிருந்து அவரது கனவை புரிந்து கொள்ள முடியும். தள்ளாத வயதிலும் தளராது நடைபோட்டு இந்தியா முழுமையும் உலா வந்த இந்தியர்களின் உணர்வுகளை புரிந்து வைத்திருந்தவர்.

காந்தீய விழுமியங்களை எழுத ஆரம்பிக்கும் போதே நான் முடிவு செய்திருந்த விஷயம். பிரபலமில்லாத அல்லது மக்களால் மறக்கடிக்கப்பட்ட காந்தீயக் கொள்கைகளை பற்றி ஆராய்ந்து எழுதி அதன் மீதான விவாதங்களை தொடங்கி வைப்பதுதான் அது. எழுத நினைத்ததில் இருபது சதவீதத்தை கூட
நிறைவேற்றவில்லையே என்று நினைக்கும்போது கசப்பாகத்தான் இருக்கிறது. முயற்சி அரைகுறையாக இருந்தாலும் நாளை பெரும் சித்திரமாக உருவெடுக்க சிறு புள்ளியாக இருந்து உதவும் என்கிற நம்பிக்கை என்னிடம் எஞ்சியிருக்கிறது.

எழுத வாய்ப்புக்கொடுத்த கணேஷ் சந்திராவுக்கும், எழுத தூண்டுகோலாக இருந்த பா.ராகவனுக்கும் எனது நன்றிகள்.  அவ்வப்போது பின்னூட்டங்களின் மூலமும் தனி மடல்களின் மூலமும் என்னை ஊக்கப்படுத்திய தமிழ் இணைய நண்பர்களுக்கும் காந்தீயவாதிகளுக்கும் எனது நன்றிகளும் வணக்கங்களும். மற்றுமொரு
சந்தர்ப்பத்தில் மறுபடியும் சந்திப்போம்!

ஜெய்ஹிந்த்!

Copyright © 2005 Tamiloviam.com - Authors