தமிழோவியம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : நுணங்கிய கேள்வியர் ஆதல்!
- எஸ்.கே


அடுத்தவரிடம் நம் எண்ணங்களை முழுவதுமாகவும், முறையாகவும் கொண்டு சேர்ப்பதில் வெற்றியடைய வேண்டுமானால் நாம் மெற்கொள்ள வேண்டிய வழிமுறைகளில் சிலவற்றை என் முந்தைய கட்டுரையில் உங்கள்முன் வைத்திருந்தேன். இப்போது இந்தத் துறையில் இன்னும் சிறப்பாக எப்படி நம் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

பீட்டர் ட்ரக்கர்  (Peter Drucker) என்னும் மேனேஜ்மெண்ட் துறையின் குரு, "இன்னொருவர் சொல்வதை முழுவதும் காது கொடுத்துக் கேட்டாலே போதும், இந்த உலகத்தில் பாதிப் பிரச்னைகள் தீர்ந்துவிடும்" என்கிறார். Communication-ல் கேட்பது (listening) என்பதன் முக்கிய பங்கு பற்றி முன்னமையே குறிப்பிட்டிருந்தேன். "வாயுணர்வை" விட "செவியின் சுவையுணர்வது" தான் முக்கியம் என்று வள்ளுவரும் உரைத்திருக்கிறார். நம்மைப் படைத்த கடவுளுக்கே தெரியும், பேசுவதைவிட கேட்பதுதான் மிகச் சிரமமான செயல் என்று. அதனால்தான் ஒரே ஒரு வாயும், ஆனால் இரண்டு காதுகளும் வைத்து நம்மைப் படைத்திருக்கிறான் என்கிறார்கள் பெரியோர்!

ஒரு குழந்தை பள்ளியிலிருந்து திரும்பி வந்தவுடன், அந்தக் குழந்தை தன் மனத்தில் மிக முக்கியமாகக் கருதும் அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றி பெற்றோருடன் பங்கிட்டுக் கொள்ளத் துடித்துக் கொண்டு (குதித்துக் கொண்டும்) நிற்கிறது. ஆனால் தந்தையோ டி.வியில் ஒரு மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு குழந்தை எதிரில் நிற்பதே மனத்தில் பதிவாகவில்லை. அம்மாகாரியோ யாருடனோ டெலிஃபோனில் பேசுபேசென்று பேசிக்கொண்டிருக்கிறாள்! நீங்கள் எவ்வளவு பொருட்செலவில் அக்குழந்தைக்கு டிரெஸ் வாங்கிக் கொடுத்திருந்தால் என்ன, எவ்வளவு பெத்தப் பேர்கொண்ட ஸ்கூலில் சேர்த்திருந்தால் என்ன, எல்லாம் வீண். குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்க்கிற கவனமும், ஈடுபாடும், பரிவும், ஒத்துணர்வும் கிடைக்கவில்லையெனில் அதன் மனம் பெருமளவு பாதிப்புக்கு உண்டாகும்.

இன்னொருவர் சொல்வதை செவிமடுக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய சிலவற்றை இங்கே கொடுத்திருக்கிறேன் :

 • முழுக்கவனத்துடன் கேட்பது என்பது ஒரு ஈடுபாட்டுடன் செய்யவேண்டிய செயல். அதற்கு மனமும், உடலும் நன்கு உழைக்க வேண்டும்.
 • ஒருவரின் பேச்சைக் கேட்கும்போது கவனம் சிதறக்கூடாது. அப்படி மனம் வேறெங்கோ சஞ்சாரம் செய்யத் துவங்கினால், நம் உடல் இருக்கும் நிலையை சிறிது மாற்றி முகத்தை பேசுபவர்பால் திருப்பி கவனத்தை நேர்முகப் படுத்த வேண்டும்.
 • இன்னொருவர் பேசி முடிப்பதற்கு முன்னால், பேசப்படும் பொருளின்பால் உங்கள் ஈடுபாடும் வெளிப்பட வேண்டும் என்கிற உந்துதலால், (அல்லது பிறரிடம் எடுத்துரைக்கக்கூடிய அளவில் உங்களிடம் ஏதாவது முக்கிய கருத்து ஒன்று வெளிவரத் துடித்துக் கொண்டிருப்பதால்,) உங்கள் வாய் முந்திரிக் கொட்டை போல் செயல்பட எத்தனிக்கும். அதனைக் கட்டுப் படுத்த வேண்டும். அடுத்தவரின் உரை முடிந்த பின்னால்தான் நீங்கள் வாய் மெஷினை "ஆன்" செய்ய வேண்டும். அதுவரை காது மெஷின் தான் வேலையில் ஈடுபட வேண்டும்!
 • பிறரின் உரையை நீங்கள் கவனமாக செவி மடுக்கிறீர்கள் என்பதை அவருக்கு அறிவிக்கும் வகையில் உங்கள் முகத்தாலும், கண்ணாலும், சொற்களாலும் மற்றும் உடலாலும் எதிர்வினைகளைத் தெரிவித்துக் கொண்டிருங்கள். அப்போதுதான் அந்த உரையாடலில் உங்கள் பங்களிப்பு ஏற்கப்படும். அது வெறு "உம்" கொட்டலாக மட்டும் இருக்கலாம். தலையாட்டலாக இருக்கலாம். அல்லது "அதுதான் சரி", "ரொம்ப சரி", "வெரி குட்", "நல்லது", "பின்ன!", "அப்புறம்" போன்ற சொற்களாகவும் இருக்கலாம். சில சமயம் நீங்கள் ஒரு புன்சிரிப்போ, அல்லது "கலகல"வென்ற சிரிப்போ அளிக்க வேண்டியிருக்கலாம். சிலர் கேட்கப்பட்ட முக்கியமான சொல்லைத் திருப்பிச் சொல்வார்கள் ("ஷயர்" படிக்கப்படும் போது செய்வது போல). எப்படியோ, அந்த இடத்தின் தேவைக்கேற்ப அவை பொருத்தமாக அமைய வேண்டியதுதான் முக்கியம்.
 • சொல்லப் பட்டவை உங்களுக்கு முழுவதும் புரியவில்லையென்றால், அல்லது மேல்விவரம் தேவைப் பட்டால், கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்வது தான் முறையானது.
 • என்ன சொல்லப் படுகிறது என்பதில் மனம் கொள்ளாமல், சொல்பவரைப் பற்றிய அயிப்பிராயத்தை மட்டும் வைத்து கேட்பவற்றை வடிகட்டாதீர்கள். முழுவதுமாகக் கேட்டு, ஆராய்ந்து முடிவெடுத்தல்தான் முறை.
 • உரையாடலின் பாதியில் விவாதத்தில் ஈடுபடாதீர்கள். உரையாடல் தடம் புரண்டுவிடும். கசப்பு தான் மிஞ்சும்.
 • வெறும் சொற்களை மட்டும் கேட்காதீர்கள். சொற்களின் உட்கருத்துக்களை, உள்ளடங்கிய உணர்வுகளை, கவலைகளை, ஏக்கங்களை, எதிர்பார்ப்புக்களை - எல்லாவற்றையும் உள்வாங்கி, அதற்கேற்ப பின்னூட்டங்களை அளியுங்கள்.
 • எண்ணங்களை எடுத்துரைப்பதில் சிலருக்கு சில சிரமங்கள் இருக்கலாம். அதனால் கேட்பவற்றை குறைத்து மதிப்பிட்டுவிடல் கூடாது.
 • அடுத்தவரின் கூற்றில் பொதிந்திருக்கும் உள்ளர்த்தங்களை விழிப்புடன் அறிந்து கொள்ளுங்கள். சில குறிப்பிட்ட சொற்கள், சொல்லப்படும் வேகம், அழுத்தம் ஆகியவை பல உண்மைகளை வெளிக்கொணரும் வன்மை வாய்ந்தவை. அவற்றை இழத்தல் கூடாது.
 • கேட்பவற்றை மேம்போக்காகப் பொருள் கொண்டு, அதன் அடிப்படையில் முடிவுகள் மேற்கொண்டு செயல்படத் தொடங்காதீர்கள். அவற்றில் பொதிந்திருக்கும் கரு என்ன என்பதையும், சொல்லாமல் விடப்பட்டவை யாவை என்பதையும் கூர்மையாக அறிதல் வேண்டும். சில சமயம் untold story தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். "திரைக்குப் பின்னால்" என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
 • அதற்காக இல்லாத ஒரு பொருளை நீங்களாக assume செய்து கொள்ளாதீர்கள்.


பொதுவாக அடுத்தவரிடம் உரையாடும்போது அவருக்கும் நமக்கும் ஏதாவது இணைப்பு, பொதுவான ஆசைகள், பற்றுக்கள் இது போன்று ஏதாவதொரு தொடுப்பை (பாலத்தை) உறுதிப் படுத்தினால் ஒரு நல்லுறவான சூழ்நிலையில் அந்த உரையாடல் அமையும், அதனால் சம்பத்தப் பட்ட எல்லோரும் பயன் பெறுவர்.

Kare Anderson என்னும் பயிற்சியாளர் அளிக்கும் அறிவுறைகள் :-

 • இன்னொருவருடன் உரையாடும் போது, அவருடைய பக்கத்தில் நின்று கொண்டோ அமர்ந்தோ (sidle) இருங்கள். எதிரெதிரே இருக்காதீர்கள். ஏனென்றால் அப்போதுதான் மனிதர்களின் மனங்கள் பல விதங்களில் ஒத்துப் போகிறது. பெரும்பாலும் அமர்வுகளைவிட, ஒருவர் பக்கலில் ஒருவர் நடந்து கொண்டே விவாதிக்கப்படும் விஷயங்களில்தான் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு உடன்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை ஆராய்ச்சிகள் மூலம் கண்டறிந்திருக்கிரார்கள். (பெண்கள் பெரும்பாலும் எதிரெதிரே அமர்ந்துதான் பேசுவார்கள். ஆண்கள் பக்கலில்தான் அமர்வார்கள் என்கிறார்கள் இத்துறை நிபுணர்கள்!)
 • ஒரு விஷயத்தில் பத்து நிமிஷங்களுக்கு மேலும் விவாதம் செய்யப் பட்டு ஒரு முடிவும் எட்ட முடியவில்லையென்றால், அங்கே வாதிக்கப்படும் பிரச்னையின் உண்மையான உருவம் பேசப்படவில்லை என்று பொருள். அந்த விவாதம் தொடர்வதால் யாதொரு பயனும் இல்லை. பிரச்னையின் அடித்தளமான சொரூபத்தை கண்டறிந்து அதனை விவாதிக்க வேண்டும்.
 • நம்மிடம் சொல்லப்படும் பொய்யுரைகளை முதலிலேயே கண்டறியுங்கள். பேசுபவர்களின் முகம், பேசும்போது அது போகும் போக்கு, கண்களின் அலைபாயும் தன்மை, உடல் காட்டும் சிக்னல்கள் எல்லாவற்றையும் குறிப்பாகக் கவனித்துப் பகுத்தறிதல் வேண்டும்.
 • நீங்கள் சொல்வதை குறிப்பாக, ஐயத்துக்கோ, வேறு பொருள் கொள்ளவோ இடமிலாமல் உறுதியாகத் தெரிவியுங்கள். பொதுவான சொற்களைத் தவிர்த்து "இதுதான்" என்று நிச்சயத்துடன் உணரும்படியாக உரைத்தல் அவசியம். சிறு குழந்தைகள் இந்த விஷயத்தில் சரியாக உணர்த்துவார்கள். அவர்களுக்கு பொதுவான சொற்களில் நம்பிக்கை கிடையாது. "இன்னது வேண்டும்" என்று அறுதியிட்டுச் சொல்லி விடுவார்கள். வயது ஏற எறத்தான் "பூசி மொழுகி" சுற்றி வளைத்துப் பேச ஆரம்பிக்கிறோம்!
 • உடை, செண்ட், சுத்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள்.
 • யாரையாவது புகழ வேண்டுமானால், அவரைப் பற்றி நல்லபடியாக யாரிடம் கூறினால் அந்த புகழப்படும் நபருக்கு நன்மை விளையுமோ, அவரிடம் சொல்லுங்கள். இதனால் நட்பு பலப்படும். உங்களைப் பற்றிய புரிதல் சிறப்பாக அமையும்.

சரி, நேர்காணல், பொதுக் கூட்டங்களில் பேசுவது, Presentations இது போன்ற தருணங்களில் கடைப் பிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றி இனிவரும் வாரங்களில் காணுவோம்!

Copyright © 2005 Tamiloviam.com - Authors