முஹமது நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை ஹதீஸ் என்று குறிப்பிடுவர். தமிழில் ந்பிமொழித் தொகுப்பு என்ற பெயரால் இது அழைக்கப் பட்டாலும், ந்பிவழித் தொகுப்பு என்ற சொல்லே பொருத்தமாக இருக்கும். புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவுது, இபுனுமாஜா, நஸயீ - ஆகியவை பிரபலமான ஆறு நபிவழித் தொகுப்புகள். இவையன்றி ஹாகிம், தாரகுத்னி போன்ற சமகால நபிவழித் தொகுப்புகளும் உள்ளன. இவை முஹமது நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டவர் அல்லது அவர்களது செயலை பார்த்தவர், அதனை வேறொருவரிடம் தெரிவித்தால், அதனைக் கேட்டவர், அவர் சொல்லிக் கேட்டவர் என அந்த சங்கிலித் தொடர் நபிவழி நூலின் ஆசிரியர் வரை இருக்கும். இவை ஹதீஸ் மூல நூல்கள் எனலாம். இப்படி ஹதீஸ்களை தொகுக்க பல விதிமுறைகள் உள்ளன. வரிசைத் தொடரில் இருப்பவருக்கு ஞாபக மறதி இருக்கக் கூடாது. பொய் சொல்பவராக இருக்கக் கூடாது என்பது உட்பட பல நிபந்தனைகள் உள்ளன. இப்படித் தொகுக்கப் பட்ட ஹதீஸ்களிலும் பிற்காலத்தில் வந்த அறிஞர்கள் பல நிபந்தனைகள் மூலம் வடிகட்டினர்.
ஹதீஸ் மூல நூல்களில் இருந்து ஹதீஸ்களை தேர்ந்தெடுத்து அதற்குப் பின் வந்த இமாம்கள் தொகுத்து நூல்களாக வெளியிட்டனர். இப்படி தொகுக்கப் பட்ட நூல்களில் ரியாளுஸ் ஸாலிஹீன், புலூகுல் மராம், அல் முஅத்தா - ஆகியவை புகழ் பெற்றவை.
புலூகுல் மராம் என்ற அரபி மொழியில் உள்ள நபிவழித் தொகுப்பு மூல நூலை தொகுத்தவர் இமாம் ஹஜர் அல் அஸ்கலானி ஆவார். இந்நூலை மவ்லவி எம்.எம். அப்துல் காதிர் உமரி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதில் இருந்து ஒரு ஹதீஸ்:
“ எவனுடைய கரத்தில் என்னுடைய உயிர் இருக்கிறதோ, அவன் மீது ஆணையாக! ஒருவர் தனக்கு விரும்புவதையே தன்னுடைய அண்டை வீட்டாருக்கும் விரும்பாத வரை இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். நூல் : புகாரி, முஸ்லிம் புலூகுல் மராம் ஹதீஸ் எண்: 1487 பக்கம்: 565
நூல் : புலூகுல் மராம் - நபிவழித் தொகுப்பு
ஆசிரியர் : இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ
தமிழாக்கம் : மவ்லவி எம். எம். அப்துல் காதிர் உமரி
வெளியீடு : இஸ்லாமியக் கல்வி வெளியீட்டு நிறுவனம்
முகவரி : 61 அய்யாசாமி தெரு புதுப்பேட்டை சென்னை - 600 002
பக்கங்கள் : 610
விலை: ரூ . 135
|