தமிழோவியம்
தராசு : பாட்மின்டனின் பரிதாப நிலை
- மீனா

ஒருகாலத்தில் இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கிதான். ஆனால்  கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. முக்கியமாக பாட்மின்டன் விளையாட்டின் நிலை மிகப் பரிதாபமாக உள்ளது. ஒலிம்பிக்ஸ் தகுதி சுற்றுப் போட்டிகள் உட்பட அடுத்து வரும் தொடர்களுக்காக இன்று துவங்கவிருந்த பயிற்சி முகாமை இந்திய பாட்மின்டன் சங்கம் பந்து இல்லாததால் ரத்து செய்துள்ளது.

உலக கிரிக்கெட் வாரியங்களிலேயே இந்திய கிரிக்கெட் வாரியம் தான் மிகவும் பணக்கார வாரியம் என்ற பெயர் பெற்றுள்ள கிரிக்கெட் விளையாட்டிற்குத்தான் மத்திய அரசும் மாநில அரசும் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிவருகிறுகின்றன. மேலும் 20-20 உலக கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு கோடி கணக்கில் பரிசு மழை கொட்டியது. ஆனால் அதற்கு சில மாதங்களுக்கு முன்பு ஆசியக் கோப்பையை வென்ற ஹாக்கி அணியை ஒருவருமே கண்டுகொள்ளவில்லை.

ஹாக்கியின் நிலையே அப்படி என்றால் பாட்மின்டன் நிலையைப் பற்றி சொல்லவே தேவையில்லை. போதிய நிதிவசதி (பந்து வாங்க) இல்லாததால் பாட்மின்டன் பயிற்சி முகாமை ரத்து செய்துள்ளது இந்திய பாட்மின்டன் சங்கம். இன்னும் ஒரு சில மாதங்களில் ஒலிம்பிக்ஸ் துவங்க உள்ள இந்நிலையில்  ஒலிம்பிக் தகுதி சுற்றுப் போட்டிகள் இன்னும் ஐந்து மட்டுமே மீதமுள்ளது. இவை அனைத்திலும் பங்கேற்றால் மட்டுமே நான்கு அல்லது ஐந்து வீரர்கள் பீஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியும். பயிற்சி முகாமே ரத்தாகியுள்ள இந்நிலையில் ஒலிம்பிக்கில் நாம் பங்கேற்பது நடக்காமல் போக வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக இந்திய பாட்மின்டன் சங்கத் தலைவர் வி.கே.வர்மா கூறியுள்ளார்.

இந்திய அரசாங்கத்திற்கும் விளம்பர நிறுவனங்களுக்கும் ஒரு வேண்டுகோள். கிரிக்கெட் விளையாட்டிற்கும் அது சார்ந்த வீரர்களுக்கும் என்ன மரியாதை வேண்டுமானாலும் கொடுங்கள். அது பிரச்சனை இல்லை. ஆனால் அதே நேரத்தில் மற்ற விளையாட்டுகளையும் சற்று கவனியுங்கள். உலகின் குட்டியூண்டு நாடுகள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு பதக்கப் பட்டியலில் இடம் பெறும்போது 110 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவால் ஒலிம்பிக்கில் 1 பதக்கம் கூட பெறமுடியாமல் போவதற்குக் காரணமே சரியான வீரர்களைக் கண்டெடுக்காததும் - அவர்களுக்குத் தேவையான பயிற்சியும் உபகரணங்களும் கிடைக்காததுதான். சரியான வாய்ப்பும் தேவையான வசதிகளும் கிடைத்தால் கிரிக்கெட் வீரர்களை விட பல மடங்கு உலகப்புகழைப் பெற நம் இளம் வீரர்கள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே இந்த மாற்றாந்தாய் போக்கை சற்று கைவிட்டுவிட்டு மற்ற விளையாட்டுகளின் மீதும் அரசு கவனம் செலுத்த ஆரம்பிக்கவேண்டும். இல்லையென்றால் திறமையான வீரர்களை இழந்த கஷ்டம் நம்மை காலத்திற்கும் விடாது.

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors