தமிழோவியம்
கட்டுரை : தரைவாழ் தாரகைகள்
- சிறில் அலெக்ஸ்

Aamir Khanஆமிர் கானின் 'தாரே ஜமீன் பர்' இந்திய சினிமாவின் அதிமுக்கிய படைப்புகளில் ஒன்றாய் மிளிர்கிறது. குழந்தைகளுக்கான கேளிக்கைகளே அரிதான இந்தக் காலத்தில் குழந்தைகளை முன்வைத்து சிறியவர்கள் இரசிக்கும் வகையிலும் பெரியவர்கள் சிந்திக்கும் வகையிலும் ஒரு காவியத்தை தந்திருக்கிறார் ஆமிர். நாம் கேட்க மறந்த சில கேள்விகளை, பெறத் தவறிய அல்லது பெற்றும் மறந்துவிட்ட சில படிப்பினைகளை தாரே ஜமீன் பர் கோடிட்டுக் காட்டுகிறது.

நம் கல்வி முறையை வசை பாடாதவர்கள் இருக்கவே முடியாது. படித்த அனைவருமே அதால் 'பாதிக்கப்பட்டவர்கள்' (Victims). நன்றாகப் படித்து தேறியவர்களும் கடைசி பெஞ்ச் கனவான்களும் ஒத்துப் போகும் ஒரு விஷயம் 'நம்ம எஜுகேஷன் சிஸ்டமே சரியில்லப்பா' என்பதுதான். ஆனாலும் வருடா வருடம் ஞானிகளையும் மேதைகளையும் உலகம் புகழும் மென்பொருள் வித்தகர்களையும் வளர்த்தெடுப்பது நம் கல்வி முறைதான். இதில் எதுவும் குழப்பம் இருப்பதாய் தெரியவில்லை.

தாரே ஜமீன் பர் 'எஜுக்கெஷன் சிஸ்டம்' குறித்த கேள்விகளை முன்வைக்கவில்லை. படத்தின் அடிப்படையே நம் கல்வி முறைதான் என பலர் நினைப்பது தவறான புரிதல். இது  குழந்தைகளின் கல்வி குறித்த படம் என நினைப்பதுவும் படத்தின் நோக்கத்தை குறுக்கிவிடுவது போலாகும்.

சிறுவர்களின் மீது அதிக தாக்கம் ஏற்படுத்தக் கூடிய இரு பெரும் பாத்திரங்கள் குறித்த திரைப்படம் இது. பெற்றோர், ஆசிரியர்கள். இவர்கள் ஒரு குழந்தையைப் புரிந்து கொள்வதில் இருக்கும் குறைபாடுகளைச் சொல்கிறது படம்.  தம் எதிர்பார்ப்புகளை குழந்தைகளின் புத்தகப் பைக்களுக்குள் வன்மையாகத் திணிக்கும் சமூகத்தை, அதன் குடும்ப பிரதிநிதிகளான பெற்றோரை முதலில் சாடுகிறது படம்.

ஒரு மாணவன் குறித்த தன் கடமை உயர்ந்த பீடங்களிலிருந்து போதிப்பதோடு முடிந்துவிடுகிறது என நினைக்கும் ஆசிரியர்களை கொஞ்சம் அவன் பெஞ்ச் வரைக்கும் இறங்கி நடக்கச் சொல்கிறது படம். பழக்கமில்லாத அன்னியர்களின் பிரச்சனைகளைக் கண்டு ஏளனம் செய்யாமல், தீர்ப்பிடாமல், பரிதாப 'உச்' களோடு நின்றுவிடாமல் ஆதாயங்களின்றி அதைக் களைய முனையும் ஒரு மனிதனை ஹீரோவாகக் காண்பிக்கிறது படம். தாரே ஜமீன் பரின் கேள்விகள், படிப்பினைகள் இவர்களைச் சுற்றியே.

நல்ல பள்ளியில் அட்மிஷன் வாங்கி நன்கொடையும் கட்டணமும் கட்டி ஒரு ட்யூஷன் வசதி செய்து விட்டால் குழந்தை தானாக வளர்ந்து விடும் எனும் மரம் நட்டு உரம் போடும் பழக்கம் நம் பெற்றோர்களிடம் உள்ளது. ஒரு மரம் வளர்ப்பதற்கும் ஒரு குழந்தை வளர்ப்பதற்குமான வித்தியாசம் என்ன என்பதைச் சுட்டிக் காட்டுகிறது தாரே ஜமீன் பர்.

குழந்தைகள் மீதான நம் அக்கரை நம் கனவுகளை முன்வைத்ததா அல்லது அவர்களின் விருப்பங்களை, இயல்புகளை, திறமைகளை முன்வைத்ததா? இது பெற்றோருக்கான கேள்வி.

அடுத்ததாக ஆசிரியர்கள். பொதுவாக ஒரு பிரச்சனையை அணுகும் போது அப்பிரச்சனைக்கு காரணமான பெரிய அமைப்பை, ஆளை குறை சொல்லி விட்டு தப்பிச் செல்வது எளிது. கடை நிலை ஊழியர் ஒருவரை ஏன் லஞ்சம் வாங்குகிறீர்கள் எனக் கேட்டால் 'சார்.. நம்ம எலக்ஷன் சிஸ்டத்துல ஒருத்தர் எம்.எல்.ஏ ஆகணும்னா லட்சக் கணக்குல செலவு செய்யணும். அப்படி செஞ்ச செலவ ஈடு கட்ட அவங்க லஞ்சம் வாங்குறாங்க. அவங்களப் பாத்து அவங்க கீழிருக்கிர அதிகாரிங்க அப்புறம் நாங்க' இது போன்ற பதில்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் தந்து விட்டு அந்தப் பிரச்சனை குறித்த தன் பங்களிப்பை மறைத்து விடுவது எளிது. 'இந்தியாவ்ல பாப்புலேஷன் ஜாஸ்தி சார்' துவங்கி 'விதி சார் விதி' வரைக்கும், நம்மை தவிர மற்ற ஏதாவதுதான் இருக்கும் பிரச்சனைகளுக்கு காரணம் என ஒதுங்கிக் கொள்கிறோம்.

இது போன்ற நம்பிக்கைகளால்தான் இந்தப் பிரச்சனைகளிலிருந்து நம்மை விடுவிக்க அவதார புருஷர்களாலும், சூப்பர் ஹீரோக்களாலும் மட்டுமே முடியும் எனும் எண்ணமும் நமக்கு வந்துவிடுகிறது. இந்தியன் தாத்தா, ஒரு நாள் முதல்வன், அன்னியன் என்பவை எல்லாம் இந்த எதிர்பார்ப்புகளின் விளைவே.

ஒரு துறையில் இருக்கும் குறையை களைய அதன் அடிமட்ட உறுப்பினர்களாலும் முடியும். ஒட்டு மொத்தமாக இல்லையென்றாலும் தன்னைச் சுற்றிய வட்டத்தில் ஒரு அலையை, தாக்கத்தை செய்ய இயலும். இதை வலியுறுத்திக் காண்பிக்கிறது ஆமிர் கானின் ஹீரோ பாத்திரம்.

நம் ஆசிரியர்களிடம் பொதுவாகக் காணக் கிடைக்கிற குணம் நன்றாகப் படிக்கும் மாணவர்களைக் குறித்து மகிழ்வது, பெருமை கொள்வது மற்றவர்களை வெறுப்பது அல்லது கவனிக்காமல் விடுவது. ஒரு ஆசிரியரின் திறமை நன்றாய் படிக்கும் மாணவன் வழியே தெரிய வருவதில்லை, அவன் எப்படியும் நன்றாய் படித்து விடுவான். ஒரு ஆசிரியரின் திறமை நன்றாய் படிக்காத மாணவனை தேற்றி எடுப்பதிலேயே வெளிப்பட முடியும்.

எந்தக் கல்வி முறையிலும் மாணவரைப் பொறுத்த மட்டில் ஆசிரியர்தான் முதன்மையானவர். அவர் சரியாக செயல்பட்டாலே போதுமானது. அழுக்காயிருக்கும் கரும்பலகைக்குத் தரும் கவனிப்பைக் கூட படிப்பு வராத குழந்தைகளுக்குத் தருவதில்லை பல ஆசிரியர்கள்.

சுய சிந்தனையை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் எத்தனைபேர்? ஒரு பேச்சுக்காவது இந்த செய்யுளைக் குறித்து உங்கள் கருத்து என்ன என ஒரு விவாதத்தை உருவாக்க நம் ஆசிரியர்கள் முன்வருவார்களா? இந்த அறிவியல் கோட்பாட்டை சாதாரண வாழ்க்கையில் எப்படி பொருத்தி பார்க்கலாம் எனும் கட்டுரையை வரையச் சொல்லும் ஆசிரியர்கள் எத்தனை பேர்?

சினிமா ஹீரோக்கள் தவிர்த்த நிஜ வாழ்க்கையில் நல்ல ஆசிரியர்களை முன்வைத்து மற்றவர்கள் எப்படி இருக்கலாம் எனும் படிப்பினையை பெறலாம். சென்னை லொயோலாவில் ஃபாதர் கஷ்மிர் எங்களுக்கு பாடம் எடுத்தார். வாரம் இரு முறை மதியம் அவர் வகுப்பு வரும் அப்போதெல்லாம் தமிழ் வழி கல்வி கற்றவர்களுக்கு மட்டுமாய் பாடம் எடுப்பார். மற்றவர்கள் விரும்பினால் வந்தால் போதும். இவர் பொருளாதாரக் கொள்கைகளை கற்றுத்தந்தார். அவற்றில் எனக்கு ஈடுபாடு இருந்தது அவ்வப்போது அவர் நிகழ்த்தும் விவாதங்களில் சிரப்பாய் பங்களிப்பேன். ஒருமுறை பரிட்சைத் தாள்களை அவர் தரும்போது மொத்த மதிப்பெண் விடைகளுக்கான தனி மதிப்பெண்களை விட அதிகமாயிருந்தது. அவரிடம் சென்று கேட்டேன். 'ஃபாதர் டோட்டல் அதிகமாயிருக்கிறது' அவர் சொன்னார் 'மீதி மார்க் நீ வகுப்பில் விவாதங்களில் பங்கெடுத்ததற்கு' என்று.

நான் 10ஆம் வகுப்பு படித்தது ஒரு மீனவ கிராமத்தில் இருந்த பள்ளியில். அங்கே ஆங்கிலம் சொல்லித் தந்த ஆசிரியையின் பெயர் ராணி டீச்சர். அந்த மீனவ கிராமத்துப் பிள்ளைகளுக்கு 'இதுகளுக்கு எதுக்கு இங்க்லீஷ்' என நினைக்காமல் மிக அருமையாகச் சொல்லித் தந்தார். The பயன்படுத்தும் 10 இடங்கள் எனப் பட்டியலிடுவார், இது போல பல பட்டியல்கள். இவர் அந்த கிராமத்துப் பள்ளியில் நடத்திய ஆங்கிலப் பாடம் என்னை  பின்னாளில் சென்னை லொயோலாவின் ஆங்கில பத்திரிகைக்கு எடிட்டர் ஆக்கியது.  பரிட்சை பேப்பர் தரும்போது 'உனக்கு மொழி பெயர்ப்பு சிறப்பா வருது இலக்கணம் வரல' என்பது போல தனிப்பட்ட வழிகாட்டுதல்கள் செய்வார்.

ஷெண்பகப் பெருமாள் என நாகர் கோவில் கார்மல் பள்ளியில் அறிவியல் பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒருவர். அவர் இயன்றவரை வகுப்பறையில் ஆய்வுகளைச் செய்து காட்டுவார். அதன் பின் ஒரு எளிய வாசிப்பிலேயே பாடம் புரிந்துவிடும். நம் பள்ளிகள் பலவற்றிலும் ஆய்வுக் கருவிகள் வெறும் காட்சிப் பொருட்களாக மட்டுமே வைக்கப்பட்டிருப்பது உண்மை. இது சிஸ்டத்தின் குறைபாடா?

இதை விட பெரிதாய் நம் ஆசிரியர்களிடம் எதையும் நான் எதிர் பார்க்கவில்லை. சரியாய் படிக்காத மாணவர்களிடம் பரிவு. அவர்களின் முன்னேற்றத்தை ஒரு சாதனைக்குரிய சோதனையாய் எடுத்துக் கொள்வது. தன் பணி முறையில் தொடர்ந்து மாற்றங்களை, முன்னேற்றங்களை உருவாக்குவது. வகுப்பறையை அவ்வப்போது உரையாடல் களமாக்கி சுய சிந்தனையை தூண்டுவது.

தாரே ஜமீன் பர் தரும் மூன்றாவது படிப்பினை இன்று மிகத் தேவையான ஒன்று. பரிட்சயமில்லா அன்னியர்களின் குறைகளைக் கண்டு ஒதுங்கி ஓடாமல், ஏளனம் செய்யாமல் பலனை எதிர் பாராமல் உதவி செய்வது. பைபிளில் ஒரு வசனம் உள்ளது 'பலனை எதிர் பார்த்து செய்யும் உதவியில் என்ன இருக்கிறது பாவிகள் கூட அதை செய்கிறார்களே' என. பலனை எதிர் பாராமல் உதவி செய்வதில் மட்டுமே மனிதம் மிளிர்கிறது. அது தலைவர்களுக்கும் தியாகிகளுக்கும் சினிமா ஹீரோக்களுக்கும் மட்டுமே சாத்தியம் என நினைப்பவர்கள் தாங்கள் அப்படி அறிமுகமில்லா மனிதர்களிடம் பெற்ற உதவிகளை நினைத்துப் பார்த்தேனும் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொள்ளலாம்.

நம் ஊரில் குழந்தைகளுக்கென கேளிக்கைகள் தேவையான அளவு இல்லை என்கிற கவலை எனக்குண்டு. சீனியர்களோடு சேர்ந்து சீரியலில் யாருக்கு எத்தனை பொண்டாட்டி எனும் கணக்குகளைப் போட்டுக்கொண்டு நேரம் போக்கும் நம் இளைய சமுதாயத்தின் கேளிக்கைக்காக மட்டுமின்றி அவர்களின் கேள்வியாகவும் ஒலிக்கிறது தாரே ஜமீன் பர்.

அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப் (பா)படம். அதன் உள்ளோடும் உணர்வுகளைப் புரிந்துகொள்ள மொழி தடையில்லை.

படம் முடியும் போது நம் கண்கள் பனிக்கின்றன. அந்தக் கண்ணீர் நாம் நடந்த் பாதைகளைக் குறித்த ஏக்கமாய் மட்டுமின்றி நம் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த ஆக்கமாய் மாற வேண்டும். அப்போது மீண்டும் குழந்தைகள் தரை மீது தாரகைகளாகலாம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors