தமிழோவியம்
தராசு : கட்சி தாவல்
- மீனா

தேர்தலில் ஒன்றாக போட்டியிட்டு விட்டு, தேர்தலுக்கு பிறகு கூட்டணியை விட்டு விலகி வேறு கூட்டணி அமைத்தால், அந்த கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களின் பதவி பறிக்கப்பட வேண்டும் என்று நிர்வாக ஆய்வு கமிஷன் அதிரடியாக சிபாரிசு செய்துள்ளது. நிர்வாகம், அரசியல், நீதித்துறை, தேர்தல் ஆகியவற்றில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி அறிக்கையை வீரப்ப மொய்லி தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஆராய்ந்து வந்தது. அவர்களது தீர்மானங்கள் - சிபாரிசுகள் தான் இவை.

சமீப காலங்களில் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த ஒரு சிபாரிசாக இதை நாம் கருதலாம். இந்திய அரசியலில் தற்போது கூட்டணி அரசியல் நன்றாக காலூன்றி விட்டது. தேர்தலுக்கு முன்பாக ஏகப்பட்ட திட்டங்களுடன் கூட்டணி அமைக்கின்றன. எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் வானத்தை வில்லாக வளைப்போம் - மணலைக் கயிறாகத்திரிப்போம் என்ற ரீதியில் ஏகப்பட்ட வாக்குறுதிகளாஇக் கொடுத்துவிட்டுதான் இவர்கள் தேர்தலை எதிர்கொள்கிறார்கள். இப்படி ஒன்றாக போட்டியிட்டு விட்டு, தேர்தலில் வென்று கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு பாதியிலேயே ஏதாவது ஒரு கட்சியோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளோ அந்த கூட்டணியில் இருந்து விலகி வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது வாக்களித்த மக்களுக்கு இழைக்கும் துரோகம். சந்தர்ப்பவாதம் மற்றும் பதவி ஆசையின் உச்சகட்ட வெளிப்பாடான இந்நிகழ்வால் கூட்டணி அரசின் நிலைத்தன்மை கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இத்தகைய சந்தர்பவாத கட்சித்தாவலை முற்றிலுமாக நிறுத்த முடியாது. ஆனால் நிச்சயம் குறைக்க முடியும். அந்த வகையில் இப்படி பாதியிலேயே கூட்டணி மாறிய கட்சிகளின் சார்பில் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பதவி கட்டாயமாக பறிக்கப்பட வேண்டும். அவர்கள் மீண்டும் தேர்தலை எதிர்கொள்வதுதான் இதற்கான சரியான தீர்வு. இதற்காக அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும். மேலும் கட்சி தாவிய எம்.பி.க்கள் எம்.எல்.ஏக்களின் பதவியையும் உடனடியாக பறிக்க வகை செய்யவேண்டும். அப்போதுதான் பதவி மோகம் கொண்டு ஓட்டு போட்ட மக்களை துச்சமாக மதிக்கும் இந்த அரசியல்வாதிகளின் குணம் மாறும்.

இந்த அறிக்கையை மத்திய அரசு எந்த அளவிற்கு - எவ்வளவு விரைவாக செயல்வடிவில் கொண்டுவரப்போகிறதோ தெரியாது. ஆனால் கூடிய சீக்கிரமே இதை சட்டவடிவமாக்கினால் நாட்டில் அமையும் மத்திய - மாநில அரசுகளின் ஸ்திரத்தன்மை நிச்சயம் அதிகமாகும் என்பதில் சந்தேகமே இல்லை.

Copyright © 2005 Tamiloviam.com - Authors