தமிழோவியம்
அறிவிப்பு : சாகரன் (எ) கல்யாண்
- சிறில் அலெக்ஸ்

Sakaran (a) Kalyanசாகரன் எனக்கு மின் மடல் அனுப்பியிருந்தபோது அவருக்கு நாற்பது வயதாவது இருக்கும் என அனுமானித்திருந்தேன். வேகமும் விவேகமும் நிறைந்த இவர் 29வயது இளைஞர் என்பது  இரங்கற் செய்தியிலிருந்துதான் தெரியவந்தது.

இணையத் தமிழில் இயங்குபவர்கள் வலைப்பதிவுகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். தமிழ் பதிவுகளைத் திரட்டுவதில் முக்கிய திரட்டிகளில் ஒன்றான தேன்கூட்டை உருவாக்கியவர்களில் ஒருவர் சாகரன் எனப்படும் கல்யாண். தேன்கூட்டில் மட்டுமல்லாது முத்தமிழ் மன்றம், மரத்தடி, வலைப்பூ என இணையத் தமிழ் வளர்க்கத் தன் இளமையை செலவிட்டிருக்கிறார் கல்யாண்.

29 வயதில் நான் என்ன சாதித்திருந்தேன் என யோசித்துப் பார்த்தேன் எனக்கென ஒரு வேலையைத் தேடிப் பெற்றிருந்ததைத் தவிற பொது நோக்கில் எதையுமே செய்திருக்கவில்லை. கல்யாண் 'பல வேடிக்கை மனிதர்கள்' சாதிக்காததை சாதித்திருக்கிறார்.

ஒரு குழந்தையோ முதியவரோ இறக்கும்போது சில ஆறுதல்களைச் சொல்லி சோகத்தை குறைக்க முடியும் ஆனால் ஒரு இளைஞனின் மரணம் அதுவும் ஒரு இளம் தகப்பனின் மரணம் சொல்ல இயலா சோகம். நம் வாழ்க்கையின் வெறுமையை உணரத் தகும் நேரங்கள் இவை.

சாகரன் துடிப்பான இளைஞர். தேன்கூடு தளம் துவங்கப் பட்ட நாளிலிருந்து எத்தனையோ தொடர் மாற்றங்களை கண்டுள்ளது. இதுவே இவரின் உற்சாகத்துக்கும், புதிதாக ஏதும் செய்யவேண்டும் என்கிற, இளமைப் பருவத்துக்கேயுரிய துடிப்பிற்கும் சான்று.

வெறும் திரட்டி எனும் அளவில் நின்றுவிடாமல் பெட்டகம் எனும் புதிய சேவையையும் தந்தார். பெட்டகம் வடிவமைத்தபின்பு அவர் அதை வெளியிடுமுன் காண்பித்த சில பதிவர்களில் நானும் ஒருவன். நான் கூறிய கருத்துக்களை அவர் எடுத்துக்கொண்ட விதம் அதற்குப் பதிலளித்த விதமும் எத்தனையோ விஷயங்களை கற்றுக்கொடுத்தன. ஒருவர் பயன்படுத்தும் வார்த்தைகளிலிருந்தே அவரின் குணநலன்களை எளிதில் சொல்லலாம். உரசிப் பார்க்காமலே சொல்லலாம் இவர் தங்கம் என்று

இணையம் சுயபுராணம் பாடுபவர்களின் சொர்க்கமாக இருந்தபோதிலும் தேன்கூடு சேவை பெயர்பெற்றதாக உருவெடுத்தபோதிலும் எந்தவித கர்வம் தொனிக்கும் வார்த்தைகளையும் இவர் உதிர்க்கவில்லை. இவரது கருத்துக்களை நமக்குச் சொல்லும்போதும் ஒரு வேண்டுகோளாகவே வைத்தார்.

பெட்டகம் பற்றி நான் பதிவொன்றை தந்தபோது மிகவும் பாராட்டினார். 'இப்படி ஒரு அரிய சேவையை தந்திருக்கிறீர்களே பதிவர்கள் பயன்படுத்துகிறார்களா?' எனக் கேட்டேன். 'நம் மக்கள் புதுமையை மெதுவாகத்தான் ஏற்றுக்கொள்வார்கள்' என்றார். ஆனாலும் புதுமைகளைத் தருவதை இவர் கைவிடவில்லை.

இத்தனை துடிப்பான செயல்களுக்கும் பலன் எதிர்பார்க்காத சேவைகளுக்கும் இவர் நேரடியாக எந்த பாராட்டும் பெற்றிருப்பார் என நான் நினைக்கவில்லை. ஏனெனில் பல பதிவர்களுக்கும் இவர்தான் தேன்கூடு சேவையை வழங்குகிறார் எனத் தெரிந்திருக்காது. ஆனால் பதிவருலகம் இவரையும் சில நேரங்களில் திட்டித் தீர்க்க தவறவில்லை என்பதும் உண்மை.

மற்றவரை விமர்சிப்பதற்கும், கீழ்த்தரமாக திட்டுவதற்கும் நம்மில் பலருக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்பது வருந்தத்தக்க உண்மை. இவை மனரீதியான பாதிப்புகளை மட்டுமல்லாமல் அது தொடர்பான உடல் ரீதியான பாதிப்புகளையும் தரக்கூடும்.

இளம் வயதில் ஒருவர் மாரடைப்பால் இறந்து போகிறார் என்பது  சாதாரண விஷயமல்ல என்பதை நான் சொல்லத் தேவையில்லை. அவரது மறைவிற்கான மூல காரணம் இன்னும் அறியப்படாத நிலையில் சில அனுமானங்களையே செய்ய இயல்கிறது.

இணையத்தில் உழலும் இளைஞர்கள் பலரும் இரவுத் தூக்கங்களை தவிர்ப்பதும், இயல்புக்கு அதிகம் உழைப்பதும் பழக்கமாகிக் கொண்டிருக்கிறார்கள். தூக்கமும் ஓய்வும் அவசியமானது. இது உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும்.

கல்யாணின் மரணத்துக்கு வேறு காரணங்கள் இருக்கலாம் இருப்பினும் மேற்கூரியவற்றை எண்ணிப்பார்பதில் தவறில்லை.

வாழ்க்கைத்துணையை குறைந்தகால உறவிர்க்குளேயே ஒரு சகோதரி இழந்துள்ளார். தங்கள் வாழ்நாளுக்கும் பெற்ற அப்பாவை குழந்தைகள் இழந்துள்ளன. சாதனைகள் புரிந்து 'சான்றோன்' எனக் கேட்டமாத்திரத்தில் மகனை இழந்திருக்கிறார்கள் இவரின் பெற்றோர் மற்றும் உறவினர். இனிய நண்பனை இழந்திருக்கிறார்கள் பலர். முயற்சியின் முழு உருவமாகத் திகழ்ந்த ஒரு இளைஞரை இழந்துள்ளது நம் சமூகம்.

சாகரன் கல்யாண் அவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் அவரின் குடும்பம் ஆறுதல் பெறுமாறும் நம் நல்லெண்ணங்களை வெளிப்படுத்துவோம். நம்பிக்கையுடன் வேண்டுவோம்.

அவரின் புதுமைக் கனவுகள் அவரோடு போய்விடாமல் பாத்துக்கொள்வது நம் கடமை என எண்ணுகிறேன். இவர்போன்ற இளைஞர்கள் புதைக்கப் படுவதில்லை விதைக்கப் படுகிறார்கள்.

பிகு :

முகம்தெரியாத மனிதர்களுக்காய் பலன் பாராமல் உழைப்பவர்கள் தெய்வங்களுக்குச் சமமில்லையா?

சாகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலி செய்திகளை ஒருங்குறியிலோ அல்லது ஆங்கிலத்திலோ (இயன்றவரை தமிழில் செய்யவும்) அனுப்பவும்.

ஏற்கனவே பதிவிட்டிருந்தால் அதையும் அனுப்பலாம். இவர்குறித்து வந்த பதிவுகளையும் மினஞ்சலில் வரும் செய்திகளையும் தொகுத்து சாகரன் குடும்பத்தாருக்கு சென்னை பதிவர்கள் தர இருக்கிறார்கள்.

sakaraalai@gmail.com

எனும் முகவரிக்கு உங்கள் இரங்கல் செய்திகளை அனுப்பலாம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors