தமிழோவியம்
சிறுவர் பகுதி : நம்பிக்கைதாங்க வாழ்க்கை !
- மூர்த்தி

இறைவன் ஒரு மலை உச்சியில் அமர்ந்து இருப்பதாகவும் அவர்மேல் மிகுந்த பக்தி கொண்டு அவரை காண வந்தவர்களுக்கு காட்சி தந்து அருள் பாவிப்பதாகவும் ஊர் முழுதும் பேசிக் கொண்டார்கள். பெரிய பெரிய பக்திமான்களும் மலையேறத் தொடங்கினர். அதனைக் கண்டு வேலனும் மகிழ்ச்சி கொண்டு இறைவனைக் காணப் புறப்பட்டான். 

வேலன் யாருடனும் கூட்டு சேர்ந்து செல்லாமல் தனி ஒருவனாக மலையேறினான். இறைவனைக் காணப்போகும் உற்சாகம் மனம் முழுதும். மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினான். இறைவனைச் சந்தித்து தன் கஷ்டங்களை எல்லாம் போக்கி இன்ப வாழ்வு பெற அவன் மனம் ஏங்கியது! 

வளைவுப் பாதைகளில் அவன் நீண்ட நெடு நேரம் ஏறிச் செல்லும்போது இர்ட்டி விட்டது. திடீரென பாதையில் ஏதோ கால்தடுக்க தடுமாறி மலையில் இருந்து பள்ளத்தில் உருண்டான். உருண்டோடிச் செல்லும் வழியில் ஏதோ ஒரு மரக்கிளையின் கொம்பைப் பற்றிக் கொண்டு தொங்கினான். உடல் முழுதும் காயம். உடம்பெல்லாம் வலி. இறைவனை துணைக்கு அழைத்தான்.

"அய்யோ ஆண்டவா! உன்னைக் காணவந்த எனக்கு நீ தரும் தண்டனை நியாயமானதுதானா? என்னைக் காப்பாற்று!" என அழுது புலம்பினான். 

அவனின் அழுகுரல் கேட்ட இறைவன் மலை உச்சியில் இருந்து இறங்கி வந்து 'குழந்தாய் பயப்படாதே! நானிருக்கிறேன். தைரியமாக உன் கையை விடு. நான் காப்பாற்றுகிறேன்!" என்று கூறினார்.

"அய்ய... ஒன்னை நம்பி நான் கைய விட்டா மலைலேர்ந்து கீழ உழுந்து சாக வேண்டியதுதான்! அப்டியே அலாக்கா என்னை கைத்தாங்கலா எறக்கி பாதைல வுடு!" என்று மறுத்தான். சொல் கேட்காத வேலனை எண்ணி நொந்த இறைவன் அவனை அப்படியே விட்டு விட்டு மீண்டும் மலை உச்சிக்கே போய் விட்டார்!

பனியில் இரவு முழுவதும் விடிய விடிய கைவலிக்க உடல் நோகத் தொங்கிய வேலன் பொழுது விடிந்ததும் கீழே பார்த்தான். அவன் தொங்கிய மரக்கிளைக்கு இரண்டு அடிக்கு கீழே மலை உச்சிக்குச் செல்லும் பாதை ஒன்று இருந்தது.

இறைவனின் சொல்கேட்டு அவன் கையை விட்டு இருந்தால் இரண்டு அடிதான் என்பதால் அடிபட்டிருக்காது. இரவு முழுதும் துன்பப் பட்டிருக்க வேண்டியதில்லை. அவன் மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்து இருக்கலாம்.

நீதி : நம்பிக்கைதாங்க வாழ்க்கை !

Copyright © 2005 Tamiloviam.com - Authors