தமிழோவியம்
தராசு : ரயில்வே பட்ஜெட்டும் மத்திய மந்திரியும்
- மீனா

இந்த ஆண்டிற்கான மத்திய ரயில்வே பட்ஜெட் சமர்பிக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் மத்திய ரயில்வே அமைச்சரான லாலுபிரசாத் யாதவ் எப்போது ரயில்வே அமைச்சக அலுவலகத்திற்கு வரப்போகிறார் என்று காத்திருக்கிறார்களாம் அதிகாரிகள். அவரோ தன்னுடைய சொந்த மாநிலமான பீகாரில் தன் மனைவியை மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர்த்தும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். எனவே பட்ஜெட்டை பிரதமர் மேற்பார்வையில் அதிகாரிகள் தயாரித்து வருகிறார்களாம்.

எந்த பட்ஜெட்டாக இருந்தாலும் அதை அதிகாரிகள் தயாரிப்பார்கள். சம்மந்தப்பட்ட அமைச்சர் பட்ஜெட்டைப் பற்றி துறை அதிகாரிகளிடம் விளக்கமாக பேசிவிட்டு அதைப் பாராளுமன்றத்தில் சமர்பிப்பார். இது வழக்கம் தான் என்றாலும் லாலு விஷயத்தில் அதிகாரிகள் தயாரித்து தரப்போகும் பட்ஜெட்டை இவர் வெறுமனே பாராளுமன்றத்தில் போய் படித்துவிட்டு வரப்போகிறார் - மற்றபடி ரயில்வே பட்ஜெட்டிற்கும் இவருக்கும் எந்த சம்மந்தமும் இருக்கப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

நிதித்துறை தவிர மத்திய அரசில் தனியாக பட்ஜெட் சமர்பிக்கும் அளவிற்கு பெரிய துறை ரயில்வே துறை. உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் ரயில்வே துறையில் பணியாற்றுகிறார்கள். 100 கோடி மக்களின் போக்குவரத்தையும் அவர்கள் சம்மந்தப் பட்ட சரக்குகளையும் கையாள்வது ரயில்வே நிர்வாகம். இத்தகைய பெரிய துறையின் அமைச்சராக உள்ளவருக்கு இந்திய ரயில்வே பற்றி என்ன தெரியும் என்று யாராவது யோசித்துப் பார்த்தால் பூஜ்ஜியம் தான் விடையாகக் கிடைக்கும்.

மன்மோகன் சிங் மற்றும் சிதம்பரம் போன்றவர்கள் தயாரிக்கும் பட்ஜெட்டில் நிச்சயம் அவர்களது தலையீடு இருக்கும். அவர்கள் பொருப்பு வகித்த - வகிக்கும் துறை சம்மந்தப்பட்ட தெளிவான சிந்தனை அவர்களுக்கு இருப்பதே இதற்கான காரணம். பீகாரில் அராஜக அரசாங்கம் நடத்துவதைத் தவிர ஒன்றுமே தெரியாத லல்லு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சரானது ரயில்வே துறை செய்த துரதிஷ்டம். அதை விடக் கொடுமையான விஷயம் - என்ன படிக்கிறோம் என்பதை கொஞ்சமும் உணராமல் அவர் படிக்கப் போகும் ரயில்வே பட்ஜெட்.

வரும் காலத்திலாவது துறையைப் பற்றி நன்கு தெரிந்த ஒருவர் அந்தத் துறைக்கு மந்திரியாக வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுவதைத் தவிர நாம் வேறு என்ன செய்யப்போகிறோம் இந்த நிலை மாற ?

Copyright © 2005 Tamiloviam.com - Authors