தமிழோவியம்
முத்தொள்ளாயிரம் : 'பாண்டியனைப் பார்க்கக்கூடாது !
- என். சொக்கன்

பாடல் 83

கமலஹாசனின் பழைய படமொன்றில், ஆசாரமான தன் மனைவியைக்குறித்து ஒரு 'சுறுக்' வசனம் சொல்வார், 'இவ பிறக்கும்போதே மடிசாரோடதான் பிறந்ததாக் கேள்வி !'

நகைச்சுவைக்காக எழுதப்பட்ட வர்ணனைதான். என்றாலும், சிலரை ஒரேமாதிரியான (புற / அக) அடையாளங்களுடன் பார்த்துப் பழகிவிட்டபின், அவர்களை வேறுவிதமாய் நினைக்கவே தோன்றாது என்னும் உண்மை இதனுள் ஒளிந்திருக்கிறது !

உதாரணமாக, ஔவையாரின் சரிதமாக சொல்லப்படும் ஒரு வாய்மொழிக் கதையில், அவர் இளமைப் பருவத்தை வெறுத்து, நேரடியாக முதுமைப் பருவத்தை ஏற்றுக்கொண்டுவிட்டதாக சொல்வார்கள் - நம்மால் அந்தக் கதையை மறுபேச்சின்றி ஏற்கமுடிவதற்கு முக்கியமான காரணம், ஔவையை ஒரு சிறுமியாகவோ, இளம்பெண்ணாகவோ இன்றி, அறிவுரைகள் சொல்லும் பாட்டியாகவே நாம் நினைத்துப் பழகிவிட்டதுதான் ! (இங்கே இடைச்செருகலாய் ஒரு விஷயம் - குறுந்தொகையிலும், பிற அகப்பொருள் இலக்கியங்களிலும் கிடைக்கிற பிற 'ஔவை'ப் பாடல்களை(அல்லது, பிற 'ஔவை'களின் பாடல்களை)ப் படிக்கிறபோதும், இன்குலாப் எழுதிய அற்புதமான 'ஔவை' நாடகத்தை வாசிக்கிறபோதும், இந்த பிம்பம் மாறிப்போவது நிச்சயம் !)

இந்த முத்தொள்ளாயிரப் பாடலில், மேற்சொன்ன ஔவையின் கதைபோல, 'என் அம்மா, இளமைப் பருவத்தை முழுதாய்க் கழிக்காமல், நேரடியாக, 'பாட்டி'யாகிவிட்டாளோ !', என்று சந்தேகிக்கிறாள் ஒரு மகள் - ஏன் ? அந்த 'அம்மா'ப் பாட்டி, இவளுடைய காதலுக்கு எதிர்ப்பாக நிற்பதால் ! 'ஒழுங்கா வயசுக் காலத்தில யாரையாச்சும் காதலிச்சிருந்தா, இப்போ நான் படற வேதனை புரிஞ்சிருக்கும் !', என்பது அவளுடைய வாதம் !

பகைவர்களை வென்று, அவர்களின் நாடுகளைக் கைப்பற்றிக்கொண்ட பாண்டியன், மொட்டுகள் பூக்கும் மலர்களால் தொடுத்த புதிய மாலையை அணிந்திருக்கிறான் - வீரமும், கோபமும் பொருந்திய வேலைக் கையில் ஏந்தியபடி, வீதியில் பவனி வருகிறான்.

அவனைப் பார்ப்பதற்காக, வீதிக்கு ஓடி வருகிறாள் இந்தப் பெண்.

ஆனால், அவளுடைய தாய் அவளைத் தடுத்துநிறுத்திவிடுகிறாள், 'பாண்டியனைப் பார்க்கக்கூடாது !', என்று கண்டிப்பாய்ச் சொல்லி, அவளை உள்ளறைக்குள் தள்ளிப் பூட்டிவிடுகிறாள் !

மிகுந்த ஏமாற்றமடைந்த அந்தப் பெண், கண்ணீருடன் தனது தோழியிடம் பேசுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது !

'அழகிய வளையல்கள் அணிந்த, நீண்ட தோள்களையும், வாள்போன்ற கண்களையும் உடைய என் தோழி, நீயே சொல், என் அம்மா செய்தது நியாயமா ?'

இதைக் கேட்ட தோழி, சொல்வதறியாது மௌனித்திருக்க, அவள் தொடர்ந்து பேசுகிறாள், 'பாண்டியனைப் பார்க்கக்கூடாது என்று தடை செய்கிறாள் என் தாய், இவளும் என்னைப்போல ஒரு பெண்தானே ? என் மனதினுள் இருக்கும் உணர்ச்சிகள் அவளுக்குப் புரியாதா ?'

இப்படியாகத் தொடரும் அவளுடைய புலம்பலைத் தடுத்து நிறுத்தி, அவளைச் சமாதானப்படுத்த முயல்கிறாள் அந்தத் தோழி, 'உன் அம்மாவையும் குற்றம் சொல்லமுடியாது தோழி ! அவர்கள் வயதானவர்கள் - இந்த வீடும், வாசலும், தெருமுனையிலிருக்கிற கோவிலும்தான் அவர்களின் உலகம் ! மற்றபடி, நமது வாலிபப் பருவத்தின் காதல் உணர்ச்சிகளெல்லாம் அவர்களுக்குத் தெரியாது !'

'அதெப்படி ? அவர்களும் இந்தப் பருவத்தைக் கடந்துவந்தவர்கள்தானே ?', என்று மடக்குகிறாள் பாண்டியனின் காதலி.

இப்படிச் சொன்ன மறுவிநாடி, அவளுக்கு வேறொரு சந்தேகம் தோன்றுகிறது, 'ஒருவேளை, என்னுடைய அம்மா, குழந்தையாய் இருந்து, வாலிபப் பருவத்தையே பார்க்காமல், நேரடியாக முதியவளாகிவிட்டாளோ ? அதனால்தான், இந்தப் பருவத்துக்கே உரிய இயற்கையான காதல் உணர்ச்சிகளெல்லாம் அவளுக்குப் புரியவில்லையோ ?'

வளைஅவாய் நீண்டதோள் வாள்கணாய் அன்னை
இளையளாய் மூத்திலள் கொல்லோ தளைஅவிழ்தார்
மண்கொண்ட தானை மறங்கனல்வேல் மாறனைக்
கண்கொண்டு நோக்கல்என் பாள்.

(வளை அவாய் - வளையல்கள் அணிந்த
வாள்கணாய் - வாள் போன்ற கண்களை உடையவளே
மூத்திலள் - (இளைஞியாய் இருந்து, பின்னர்) முதுமை அடையாதவள்
தளை - கட்டு
தார் - மாலை
தானை - படை
மறம் - வீரம்
நோக்கல் - பார்க்கக்கூடாது)


பாடல் 84

'பாண்டியனைப் பார்க்கக்கூடாது !', என்று தடை செய்த அன்னை, மகளை வீட்டினுள் அடைத்துப் பூட்டிவிடுகிறாள்.

சிறிய வீடு, அம்மா ஒரு மூலையில், மகளும், அவளுடைய தோழியும் இன்னொரு மூலையில் ! இவர்கள் ஏதேனும் தில்லுமுல்லு செய்கிறார்களோ என்று சந்தேகமாய் முறைக்கிறாள் அம்மா !

ஆனால், அந்தப் பெண்கள் இருவரும் அவளைக் கண்டுகொள்ளவேயில்லை - 'அம்மா' என்று ஒரு ஜீவராசி இந்த வீட்டிலேயே இல்லை என்பதுபோல் அவளை அலட்சியப்படுத்திவிட்டு, அங்கிருந்த உரலை உலக்கை கொண்டு இடிக்கத்துவங்குகிறார்கள், இப்படியே, மற்ற வீட்டு வேலைகளைச் செய்தபடி, தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள் அவர்கள்.

'தோழி, எனக்கு என் காதலன் பாண்டியனைப்பற்றிப் பாடவேண்டும்போலிருக்கிறது !', என்று சத்தமாய்ச் சொல்கிறாள் அந்த மகள், 'அவனைப் பார்க்கக்கூடாது என்றுதானே அம்மா சொன்னாள் ? அவனைப்பற்றிப் பாடக்கூடாது என்று சொல்லவில்லையே !'

'அது சரி !', என்று நமுட்டுச் சிரிப்போடு சொல்கிறாள் தோழி, 'அப்படி என்னதான் பாடப்போகிறாய் ?'

'அவனைப்பற்றிப் பாடுவதற்கு விஷயமா இல்லை ?', என்று பரவசம் கலந்த பெருமைச் சிலிர்ப்புடன் சொல்லிவிட்டு, வரிசையாய் அடுக்குகிறாள் அவள், 'அவனுடைய கொடியின் அழகைப் பாடுவேன், அவனுடைய தேரின் அலங்கரிப்புகளைப் பாடுவேன், புதிதாய்ப் பறிந்த குளிர் மலர்களைத் தொடுத்துச் செய்த அவனுடைய மாலையைப்பற்றிப் பாடுவேன், அவனுடைய அழகிய கிரீடத்தைப்பற்றிப் பாடுவேன், அவன் மார்பில் ஊஞ்சலாடும் முத்து மாலையைப்பற்றிப் பாடுவேன் ! இப்படி இன்னும், இன்னும் பாடிக்கொண்டேயிருப்பேன் !'

இப்போது, தன் அம்மாவை ஒருமுறை பார்த்துக்கொள்கிறாள் அவள், 'இந்தக் கட்டுக்காவலெல்லாம், என்னை வீட்டுக்குள் அடைத்துவைக்கலாம், ஆனால், அவனைப்பற்றி நான் பாடும் நேசத்தின் பாடலை யாராலும் சிறைவைக்கமுடியாது !"


கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்தார் மாறன்
முடிபாடி முத்தாரம் பாடித் தொடிஉலக்கை
கைம்மனையில் ஓச்சப் பெறுவெனோ யானும்ஓர்
அம்மனைக் காவல் உளேன்.

(கொய் - கொய்த / பறித்த
தண் - குளிர்ந்த
தார் - மாலை
தொடி - பூண்
கை - சிறிய
மனை - வீடு
ஓச்சப் பெறுவேனோ - இடிக்கப்படுவேனா)

Copyright © 2005 Tamiloviam.com - Authors