தமிழோவியம்
நையாண்டி : காதல் படம் பற்றி என்ன யோசிக்கிறார்கள்
- திருமலை ராஜன்

காதல் படம் குறித்து சமீபத்தில் தீம் திரிகிட இதழில் வந்த விமர்சனம், பின்வரும் நையாண்டியை எழுதத் தூண்டியது. காதல் படம் பார்த்தவர்கள் பின்வரும் நக்கல்களை ரசிக்க முடியும்.

சமீபத்தில் வந்த காதல் படத்திற்கு போணி நடத்தும்  தாம் தப டபா வில், ஆ மா சாமி எழுதிய விமர்சனத்துக்கு, சிறந்த நகைச்சுவைக் கட்டுரைக்கான விருது கிடைத்ததையும், அதைப் படித்து விட்டு ஏராளமான வாசகர்கள் வயிற்று வலியால் அவதிப் பட்டதையும் அறிந்திருப்பீர்கள்.  அதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் பலரும் அந்தப் படத்தைப் பற்றி அவர்கள் பார்வையில் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்கள், அவற்றில் சில இங்கே:

ஒடிப் போயி கல்யாணத்தைக் கட்டிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் ஜோடி:  நாங்களும் இப்படியே ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக் கிடலாம்னு இருக்கோம். இந்தப் படத்தைப் பார்த்த பின்பு யார் வந்து கூப்பிட்டாலும், முக்கியமா சித்தப்பாக் காரங்க வந்து கூப்பிட்டா திரும்புறது இல்லன்னு முடிவு பண்ணியிருக்க்கோம். அப்புறம் இந்த திண்டிவனம், விழுப்புரம், பாண்டிச்சேரி பஸ்கள், தேவி தியேட்டர் எல்லாம் அட்வான்ஸ் புக்கிங் பண்ணி வைச்சிருக்கோம்.
 
ஓடிப் போயி கட்டிக்கிட்ட ஜோடியில் கணவன்:  இந்தப் படத்தைக் கொஞ்சம் முன்னாடி ரீலீஸ் பண்ணியிருக்கூடாதா? ஓடிப் போகாமலேயே பயந்துகிட்டு இருந்திருப்பேனே. இப்ப இந்த ராட்சசிகிட்ட இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே. யாராவது சித்தப்பாக் காரன் வந்து இவள மட்டும் கூட்டிக்கிட்டுப் போயிட்டான்னா நல்லா இருக்கும்.
 
பெண்ணைப் பெற்ற அப்பா ஒருவர்:  வீட்டிலே இருக்குற ஸ்கூட்டி, கீட்டியெல்லாம் வித்திட்டேன். இனிமே பஞ்சர் ஒட்டுறதுக்கூட சைக்கிள் கடை பக்கம் ஒதுங்கக் கூடாதுன்னு கண்டிஷனா பொண்ணுகிட்ட சொல்லிட்டேன். வீட்டு வாசல்ல எவனாது ஹார்ன் அடிச்சிட்டு பைக்ல போனான்னாலே மனசு கடந்து பதறுது. எதுக்கும் இனிமே என் தம்பிகிட்டே கொஞ்சம் நல்லபடியா நடந்துகிடனும் ஆபத்துக்கு உதவுவான், தம்பியுடையான் படைக்கு அஞ்சான்னு சும்மாவா சொன்னாங்க.
 
 
மெக்கானிக் கடை உதவிப் பயன்கள்:  இனிமே மெக்கானிக் அண்ணங்க கிட்ட எவ்வளவு சீக்கிரமா வேலை கத்துக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமா வேலையை எல்லாம் கத்துக்கிடனும், எப்ப ஓடிப் போவாய்ங்களோ? யார் கண்டது?
 
 
மெக்கானிக் கடைக்கு வருபவர்கள்:  இந்தக் கடைக்காரப் பொடியன்கள் காபி, டீ, கலர்னு எத வாங்கிட்டு வந்து கொடுத்தாலும் கண்டிப்பா குடிக்கக் கூடாது. கொஞ்சம் வயசான மெக்கானிக் இருக்கிற கடையிலதான் பஞ்சர் ஒட்டக் கொடுக்கணும்.
 
 
ஓயின் கடை உரிமையாளர்கள்:  இனிமே மெக்கானிக் கடைகளில் இள வயசுப் பயன்களை வேலைக்கு வச்சுக்கக்கூடாதுன்னு கோரிக்கை வைக்கப் போறோம், வேணும்னா எங்க கடையிலே எங்க கண் முன்னாடி ஊத்திக் கொடுக்கிற வேலையை மட்டும் பார்த்துகிடட்டும். அப்புறம் வீட்டிலே கேபிள் கனெக்ஷன் எல்லாம் எடுத்துட்டோம். கட்டப் பஞ்சாயத்து நடத்த வேற இடம் தேடிக் கிட்டு இருக்க்கோம்.
 
 
தி க வீரமணி:  கடவுள் சாட்சியா வைச்சி கல்யாணம் பண்ணிகிட்டவன் நிலைமையப் பாத்திங்க இல்ல. இதைத்தான் ஐயா அன்றைக்கே கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டின்னு சொல்லியிருக்கார். அதைத்தான் சிம்பாலிக்கா கடைசி சீன்ல ஐயா சிலை முன்னாடி காட்டுமிராண்டியா மாறி அந்தப் பய அலையறதாக் காட்டியிருக்காங்க. நல்ல படம்.
 
 
தி க எதிர்ப்பாளர்:  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மசூதிக்குப் பின்னால் சிறிதாகக் காண்பித்திருக்கிறார் இயக்குனர் சாலாஜி. மேலும் ஈ வே ரா சிலையை வேறு காண்பிக்கிறார். காதலுக்கு ஆதரவு தருபவராக கிறிஸ்துவரையும் எதிர்ப்பவர்களாக ஹிந்துக்களையும் காண்பித்து ஹிந்துக்களை கொடுமையானவர்களாக சித்திரிக்க முயல்கிறார் சாலாஜி. ஆதலால் இந்தப் படத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
 
 
இயக்குனர் செல்வராகவன்:  என்னத்தப் படம் எடுத்திருக்காங்க. அந்தப் பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடியே அட்வான்சா தன்னைக் கொடுக்கிறதாக் காட்ட வேண்டாம்? இல்லாட்டி கூட, அந்தப் பொண்னோட வீட்டுக் காரன் நீ அந்தப் பயனையும் கட்டிக்கன்னு சொல்றாப்பில புரட்சிகரமா காட்டக்கூடாது? நான்னா சோனியா அகர்வாலப் போட்டு சூப்பரா எடுத்திருப்பேன்.
 
 
ரஜினி ரசிகர்கள்:  எங்க தலைவர் படம்னா கல்யாண மாப்பிள்ளை கூட பொண்ண விட்டுட்டு ரசிக்கிறாப்ல எடுத்திருக்காங்க. இருந்தாலும் அந்த ஓடிப் போற ஜோடிங்க ரெண்டும், தலைவர் படத்த ரசிக்காம, தங்களப் பத்தி நினைக்கிறது கொஞ்சம் கூட சரியில்ல. பஸ்ஸ¤ல போறப்ப வருற தலைவர் படத்த முழுக்க முழுக்க காண்பிக்காமல் படம் எடுத்த சாலாஜி ஒழிக.
 
 
செயின்ட் மேரீஸ் பள்ளி கன்னியாஸ்திரீகள்:  அடப்பாவி சாலாஜி, எங்க பள்ளிக்கூடத்தில படிக்கிற பொண்ணு கலெக்டரா வர மாதிரி கதை வச்சிருக்கம்னுட்டு கடைசில ஓடிப் போற மாதிரி எடுத்திருக்கியே? கர்த்தர் உன்னை மட்டும் மன்னிக்கவே மாட்டார்.
 
 
லலிதா ஜுவல்லர்ஸ்:  நல்ல வேளை கடைய நல்லாக் காட்டினாங்க. ஆன கடைக்கு முன்னாடி நாய் விக்கிற பையன், நம்ம கடையில வந்து தாலி வாங்குற மாறிக் காட்டவில்லை. இல்லாட்டி, அபசகுணமா இருக்குன்னு நாளைக்கு எவன் வந்து தாலி வாங்குவான்.
 
 
பெப்சி:  பெப்ஸியோட மூத்திரத்த கலந்தும் குடிக்கலாம்னு எவ்வளவு அருமையா காண்பிச்சிருக்காங்க. இதுவரை பெப்சின்னா மூட்டைப் பூச்சி மருந்துன்னு நினைச்சிகிட்டிருந்தாங்க. இனிமே மூத்திர ஞாயபகம்தான் வரும். மக்க்ளை ஒரு வழியா பூச்சிக் கொல்லி மருந்து நினைப்புலே இருந்து திசை திருப்பிட்டாரு பாலாஜி. எப்பத்தான் பெப்புஸின்னா குளிர்பானம்னு நினைக்கப் போறாய்ங்களோ? பன்னு கூடத்தான் கோக் ஒத்துப் போகும்னு கோக்கை மட்டம் தட்டியிருக்காரு, தாங்கிஸீ சாலாஜி.
 
 
கோக்கு:  நல்ல வேளை பெப்சிய மூத்திரத்தோட காண்பிச்சு, பெயரைக் கெடுத்திட்டாங்க. இனிமே மக்களுக்கு பெப்ஸின்னா மூத்திரம்தான் ஞாபகத்துக்கு வரும். தாங்ஸ¤ சாலாஜி. திண்டிவனம், விழுப்புரம், பாண்டி பஸ் ஓனர்கள்: இந்தப் பட புன்ணியத்திலே திண்டிவனம், விழுப்புரம் போற நைட், அதிகாலை நேர பஸ்ஸெல்லாம் எப்பவும் ஓடிப் போற ஜோடிங்களாலே ·புல்லா ஓடுது. கூடுதல் பஸ்கள் கூட விடப் போறோம். வாழ்க சாலாஜி.

தியேட்டர் ஓனர்கள்:  எப்பவும் காத்தாடும் ரெண்டாம் ஆட்ட ஷோக்கள் எல்லாம் இப்ப ஹவுஸ்·புல்லா ஓடுது. அதிகாலைக் காட்சி வேறக் காட்டுறதுக்கு அரசாங்கத்திடம் அனுமதி கேட்டிருக்கோம். இந்த பஸ் ஓனருங்கதான் அது கிடைக்க விடாம தகறாரு பண்ணுறாங்க. செகண்ட் ஷோ அரங்கு நிறைந்த காட்சியா ஓட வழிபண்ணிய சாதல் படம் வாழ்க.
 
கேர்·பிரீ தயாரிப்பாளர்கள்:  ரெண்டு நாள் தூங்காமல் அலைஞ்சாலும், கேர்·பிரீ அணிந்த பெண்கள், களைப்பின்றி கானாப் பாடலுக்கு டப்பாங்குத்து ஆடலாம்னு காண்பிச்சிருக்காங்க. இனிமே சேல்ஸ் பிச்சிக்கிட்டுப் போயிடும்.

மான்ஷன் வாசிகள்:  இப்பெல்லாம் யாரும் போத்தி படுத்தே தூங்க முடியல. ஆளாளுக்கு வந்து திறந்து பாத்துட்டுப் போறாங்க. மொட்டை மாடிலே தினமும் ஒரு ஓடிப்போன கல்யாண ரிஷப்ஷன், அதுக்கு மொய்யின்னு ஏகப்பட்ட தொந்தரவு வேற. பேசாம பிளாட்பாரத்துக்கு ஓடிப் போயிறலாமான்னு பாக்குறோம்.
 
டிவிஸ் ஸ்கூட்டி ஏஜென்சி:  ஜோடிங்க உங்க ஸ்கூட்டிலியேதான் சென்னை வரைக்கும் ஓடப் போறதா காட்டப் போறம்னு சொல்லிட்டு இப்படி பஸ்ஸில ஓட வைச்சு ஏமாத்திடாங்களே. ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்தா அடிக்கடி மெக்கானிக் கடைக்குப் போய் பிள்ளைங்க எல்லாம் ஓடிப் போயிரும்னு நினைச்சு பொண்ண பெத்தவங்க எல்லாம் ஸ்கூட்டி வாங்குறத வேற நிறுத்திப் பிட்டோம். ஒழிக சாதல்.
 
தமிழக அரசு அறிவிப்பு:  காதல் பாடம் பார்த்து உருகிய நம் மாண்புமிகு டாக்டர் புரட்சி தலைவி அன்னை முதல்வர் அவர்கள், தாயுள்ளத்துடன் ஓடிப் போகும் ஜோடிகள் படும் அவலத்தைக் கண்டு, நெக்குருகி, பின்வரும் புரட்சிகரமான முடிவுகளை எடுத்துள்ளார்கள் என்பதை பெருமிதத்துடன் அறிவித்துக் கொள்கிறோம். ஏற்கனவே குவய்த் நாட்டிலிருந்து ஓடி வந்த ஒரு காதல் ஜோடியினை நமது அன்னை, எப்படி அரவணைத்து, அன்புள்ளத்துடன் ஆதரித்தனர் என்பதை நாடே அறியும்.  இனிமேல் ஒயின் கடைகள் அனைத்தையும் அரசாங்கமே நடத்தும். கந்து வட்டி ஒழிக்கப் படும். ஒயின் ஷாப் அதிபர்கள் ஓடிப் போகும் ஜோடிகள் மீது ஏவப்படும் அராஜகங்கள் இத்துடன் ஒழிக்கப்படும்.
 
இரவு நேர திண்டிவனம் பஸ்ஸில் ஓடிப்போகும் ஜோடிகளுக்கு கட்டணச் சலுகை வழங்கப்படும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors