தமிழோவியம்
மஜுலா சிங்கப்புரா : தீயினில் வளர் சோதியே!
- எம்.கே.குமார்

'ஒரு சிறு விதைக்குள்ளே எப்படி ஒரு மாபெரும் சந்ததியின் பசி தீர்க்கும் மரம் இருக்கிறதோ அது போலத்தான் நமக்குள்ளே கிடக்கின்றன சாதிக்கவேண்டிய விஷயங்கள்' என்கிறார் மகான் அரவிந்தர். மனிதனின் மனமும் ஒரு விதைதான். எதைப்போட்டீர்களோ அதுவாகவே தான் அது வளரும். 'அதுவேதான் அது' என்றாகிப்போகும். 'தன்னம்பிக்கையையும் சாதிக்கும் மனப்பான்மையையும்' விதைகளாக்கிக்கொண்டு முளைவிட முயன்றால் அது தரும் பலன்களை நாம் மட்டுமல்ல நமது சந்ததியினரும் பகிர்ந்துகொள்வார்கள்; பசியாறி மகிழ்வார்கள். காலம் காலமாய் அதனைப் பின்தொடர்ந்து வருபவர்களும் அதை மனதில்கொள்வார்கள். உண்டு மகிழ்வார்கள் சரி; உண்டு மகிழ்ந்தவர்கள் அப்படியே உறங்கிவிடலாமா? உண்டு, உறங்கி, மகிழ்ந்து, கழிந்து, இறந்துபோய்விட்டால் அடுத்த தலைமுறை உணவுக்கு என்ன செய்யும்?

இந்திய சுதந்திரத்தின் இன்றைய நாட்களில் சொகுசாக அப்படி உண்டு உறங்கிப்போய்விட்டவர்கள் எத்தனை பேர்? ஒரு நிமிடம் எண்ணிப்பார்ப்போமா?

 Lee kuan Yew சிங்கப்பூருக்கு 1819 ஜனவரியில் முதல் விதையை விதைத்தார் 'ரா·ப்பிள்ஸ்'. வழக்கம் போல 'கிழக்கிந்திய வாணிபக் கம்பெனி' இவருடைய நெற்றியிலும், 'வியாபாரம் செய்யவே இவர் அங்கு வருகிறார்' என்று எழுதித்தான் இவரையும் அனுப்பிவைத்தது. நெற்றியில் எழுதி இருந்தது சரி, மனதில் அவர் என்ன எழுதியிருந்தார் என்ற கேள்விக்கு, பதவி ஆசை பிடித்திருந்த 'ஜோகூர் துங்கு சுல்தான்' சகோதரர்களைப் பிரித்து உறவை முறித்து, பகைமை வளர்த்து, '1819 பிப்ரவரி 6-ல்' சிங்கப்பூரை ஆங்கிலேய காலனியாக்கினார்' என்பதை சொல்லியா நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்?

முகத்தில் வியாபாரக்களையும் முதுகில் 'நாடு பிடிக்கும் கலை'யையும் அவர் சுமந்து வந்தாலும் அன்று அவர் போட்ட விதை ஒரு 'துறைமுக சதுப்புநில கழிவார'க் காட்டை 'நாடு' என்ற நிலைக்குக் கொண்டு வந்தது. கட்டளையிடுவதற்கு ஆங்கிலேயர்களுக்கும், அடிபணிந்து அடிமாடாய் பாடுபடுவதற்கு இந்தியர்களுக்கும் சொல்லியா தரவேண்டும்? விதையை ஆழமாக ஊன்றினார் ரா·ப்பிள்ஸ். அதற்கு உறுதுணையாய் பாடுபட்டார்கள் இந்திய விடுதலைக்குற்றவாளிகள். சாலை போட்டார்கள்; காடுகளை அழித்து ரோடுகளை அமைத்து நாடு என்ற ஒன்றைக் கண்டார்கள். ஆக 'ரா·ப்பிள்ஸ்' வந்தார்; நாடு வந்தது.

நாடு என்று பெயர் வைத்துவிட்டால் போதுமா? தானாய் வளர்வதற்கு அது, தாவரமா என்ன? நிலையற்ற ஆட்சி கொண்டதாய், அயோக்கியர்களும் சுயநலவாதிகளும் ஆளுமை கொண்டதாய், உணவுப்பஞ்சத்திலோ இனச்சஞ்சலத்திலோ இன்னும் மூழ்கிக்கொண்டிருந்திருக்கவேண்டிய ஒரு நாட்டை, 'அடிமை விதை'யானாலும் ஆரோக்கியமான விதையை விதைத்து பாதையைக் காட்டினார்கள் ஆங்கிலேயர்கள். இந்தோனேசியாவாலோ மலேசியாவாலோ புருனே அரச குடும்பத்தாலோ ஏன் மீண்டும் ஆங்கிலேயர்களாலோ இன்னும் அடிமையாகவே கிடந்து வறுமைச்சூழலில் இன்றும் வாடிக்கொண்டிருக்கவேண்டிய நிலையை முறித்து 'இரண்டாம் விதை'யை சிங்கப்பூருக்குள் இன்னும் ஆழமாய் ஊன்றினார் திரு. லீ குவான் யூ அவர்கள்.

சிங்கப்பூருக்கு இரண்டாம் விதையை விதைத்த லீ குவான் யூ அவர்களின் (இன்னொரு விதையின்) ஆரம்ப காலம் எப்படி இருந்தது என்பது பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.

மத்திய சீனாவின் மஞ்சள் ஆற்றுப்பகுதிகளில் 'சங்' (SUNG) பரம்பரையின் வழி வந்தவர்கள் 'ஹான் சீனர்கள்' (HAN CHINEASE). சீன கலாசாரத்திலும் அதன் வாழ்க்கை முறைகளிலும் தீவிரம் கொண்ட அவர்கள் அப்பகுதியில் தங்களுக்கெதிரே நிகழ்ந்த வாழ்க்கைப் பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் பிழைப்புத் தேடியும் தெற்கு சீனாவின் ·பியூஜியன், குவாண்டாங் மற்றும் ஜியான்ஜி பகுதிகளுக்கும் மற்ற பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்தனர். அவ்வாறு 'தீவிர கலாசாரம் மற்றும் சீனாவின் முதுபெரும் ஒரு மொழியின் வழி' இடம்பெயர்ந்தவர்கள் 'ஹாக்கா'க்கள் (விருந்தினர்கள், GUEST FAMILIES) என்று அழைக்கப்பட்டனர். இவர்களின் இடம்பெயரல் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்தது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சீனாவுக்குள்ளேயே ஆரம்பித்த அவர்களின் இடப்பெயர்ச்சி பிறகு உலகின் எல்லா நாடுகளுக்கும் மெதுவாக வளர்ந்தது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும், தைவான், மலேசியா சிங்கப்பூர் ஆகியவைகளுக்கும் அது விரிந்தது.

அவ்வகையில் 1846ல் பிறந்த 'லீ போக் பூன்' என்றொரு 'ஹாக்கா' (hakka chinease) சீன ஆடவர், சீனாவின் குவாண்டாங் பகுதியிலிருந்து பிழைப்புத் தேடி ஓடி வந்தார். வந்தவர் சிங்கப்புராவில் கடை வைத்துக்கொண்டிருந்த ஒரு 'ஹாக்கா' கடைக்காரர் மகளை 1870ல் மணம் புரிந்தார். நிறைய செல்வங்களைச் சேர்த்த பிறகு பனிரெண்டு வருடங்கள் கழித்து மனிதர் ஊர் திரும்ப எண்ணியபோது சிங்கப்புராவில் பிறந்து வளர்ந்த அப்பெண் அவரோடு வர விரும்பவில்லை. தனது குழந்தைகளோடு சிங்கப்புராவின் காட்டுப்பகுதி ஒன்றுக்குச்சென்று மறைந்துகொண்டாராம்! 'லீ போக் பூன்' அதற்கெல்லாம் கவலைப்படாமல் அவர்களை விட்டு விட்டு 'குவாண்டாங்' திரும்பிவிட்டார்.

அப்படி மறைந்து தன் குழந்தைகளோடு வீட்டுக்குத் திரும்பி வந்த அப்பெண்ணுக்கு சிங்கப்பூரும் சிங்கப்பூர்காரர்களும் என்றென்றும் நன்றி சொல்லிக்கொள்ள வேண்டும். அந்தப்பெண்மணிதான் திரு. லீ குவான் யூ அவர்களின் கொள்ளுப்பாட்டி. அவரை விட்டுவிட்டு மீண்டும் சீனாவுக்குச்சென்று திருமணம் செய்துகொண்ட 'லீ போக் பூன்' என்பவர் தான் 'லீ குவான் யூ' அவர்களின் கொள்ளுத்தாத்தா.

அந்தக்குழந்தைகளில் மூத்தவரான திரு. லீ கூன் லியாங் (லீ குவான் யூ அவர்களின் தாத்தா) சிறிதுகாலம் படித்துவிட்டு, சீனவர் ஒருவர் நடத்திய கப்பல் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து இந்தோனேசியாவின் 'ஜாவா' பகுதியைச் சேர்ந்த பெண்ணொருத்தியை 1899-ல் திருமணம் செய்துகொண்டார். மிகப்பெரும் தனவந்தராய் வாழ்ந்த இவர் அக்காலத்திலேயே சுமார் நூற்றைம்பதாயிரம் வெள்ளியை அன்பளிப்பாகக் கொடுத்து 1928-ல் 'ரா·ப்பிள்ஸ் காலேஜ்' என்று மிகப்பெரிய கல்வியாளர்களையும் அறிஞர்களையும் இன்று பெற்றெடுத்த அக்கல்விக்கூடத்தை கட்ட அன்று உதவியிருக்கிறார்.

தனது மனைவி மற்றும் மகனோடு ஜாவாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த அவர் ஆங்கிலேய மற்றும் ஐரோப்பியக்கரர்களுடன் ஏற்பட்ட பழக்கங்களின் காரணமாக அவர்களைப்போலவே வாழ்க்கை முறையையும் அமைத்துக்கொண்டவர். இத்தகைய செல்வந்தருக்கு மகனாகப் பிறந்தவர்தான் திரு. 'லீ சின் கூன்' நமது சிங்கைச் சூரியனின் தந்தை.

லீ குவான் யூ அவர்களின் தாத்தா ரப்பர் தோட்டங்களிலும் அது சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டார். நல்ல நிலையில் போய்க்கொண்டிருந்த அவரின் அத்தொழில், ஒரு கட்டத்தில் சரட்டென்று பள்ளத்தில் விழ மிகப்பெரிய தனவந்தரின் வாழ்க்கை சரிய ஆரம்பித்தது. அதுவரை அவர் வீட்டிலேயே வாழ்ந்து வந்த அக்குடும்பம், அதற்குப்பிறகு லீ குவான் யூ அவர்களின் 'அம்மா வழி தாத்தா' வீட்டிற்கு இடம்பெயர்ந்தது.

அம்மா வழி தாத்தா படிக்காதவராயினும் வசதி கொண்டவராம். இரண்டு முறை மனைவியைப் பறிகொடுத்த அவர் முன்றாம் முறையாக இரு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டாராம். அப்பெண்ணுக்கு முதலில் பிறந்தவர் 'மேடம் சுவா ஜிம் நியோ' (திரு. லீ குவான் யூ அவர்களின் அம்மா). அதற்குப்பிறகு சில குழந்தைகளைப் பெற்றெடுத்த அப்பெண்மணி கடைசிக்குழந்தையின் பிரசவத்தின் போது இறந்துவிட, அக்குழந்தைகளோடும் தனது கணவர் மற்றும் மகன்களோடும் அக்குடும்பத்திலேயே வாழ்ந்தாராம் லீ குவான் யூ அவர்களின் தாயார்.

ஒரு செல்வந்தராக, மேல்நாட்டு நாகரிகம் கொண்டவருடைய பேரனாக தான் வளர்ந்ததிலும், ஒரு செல்வந்தரின் மகனானாலும் மிகுந்த கட்டுப்பாடுடன் வாழ்ந்த தன் தந்தைக்கு மகனாக தான் இருந்ததிலும், செல்வங்களை இழந்த நிலையில் கூட்டுக்குடும்பத்தில் சிலகாலங்கள் என வாழ்வின் அனைத்து கஷ்ட நஷ்டங்களையும் திரு. லீ குவான் யூ அவர்கள் சிறுபிராயத்திலேயே அனுபவித்து உணர்ந்திருக்கிறார்.

இரு தாத்தா குடும்பங்களும் ரப்பர் தொழிலில் வெற்றிக்கொடி நாட்ட, ஆரம்பத்தில் செல்வங்கள் சூழ்ந்து கிடந்த அக்குடும்பத்தில், 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி திரு. லீ குவான் யூ பிறந்திருக்கிறார். தனக்குப் பிறந்த அத்தலைமகனுக்கு பெற்றோர்கள் நல்ல பெயராகத் தேடிக்கொண்டிருந்த போது அவற்றில் ஞானம் பெற்ற நண்பரொருவர் சொன்ன பெயர்தான் 'குவான் யூ.' (லீ என்பது குடும்பப்பெயர்!) 'லீ குவான் யூ' என்ற அப்பெயரின் அர்த்தம் என்ன தெரியுமா? முதல் அத்தியாத்தின் மூலம்தான் அது - 'ஒளியும் வெளிச்சமும்!'

விதைகளில் விருட்சம் இருக்கலாம்; இங்கே வெளிச்சமும் இருந்திருக்கிறது!

(தொடரும்!)சிங்கப்பூர் டைம்ஸ் 2015 இதழிலிருந்து.

ஜனதா தள ஏ பி பிரிவின் தலைவர் அறிக்கை!

சென்னை. பெப் 2. முதல்வர் அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை குறித்தான எதிர்க்கட்சிகளின் போக்கு கண்டிக்கத்தக்கது என்று ஜனதா தளத்தின் (ஏபி) தலைவர் அறிக்கை விட்டுள்ளார்.

'முதல்வருக்கும் மாநில காவல்துறை மேலதிகாரிகளில்' சிலருக்கும் நடந்ததாகச் சொல்லப்படும் சில ஆண்டுகளுக்கு முந்தைய 'பாலியல் குற்றங்களை' தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக, உத்திரப்பிரதேச, மகாராஷ்டிர மாநில உயர்நீதி மன்றங்களும் அதனைத்தொடர்ந்து உச்சநீதி மன்றமும் அண்மையில் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் சாயம் போன அவ்வழக்கை இப்போது கையில் எடுத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் புது விளக்கம் கொடுப்பது பற்றி முதல்வர் ஒரு காரமான அறிக்கை வெளியிட்டார். அதில், 'தான் எப்போதுமே தவறு செய்ததில்லை எனவும் சூழ்நிலை அத்தகைய தருணங்களை உருவாக்கி தான் சூழ்நிலைக் கைதியாக மட்டுமே இருக்க நேர்ந்ததையையும் விளக்கி அது அறியாமல் எதிர்க்கட்சிகள் மக்களின் கவனத்தைத் திசை திருப்ப கூச்சல் போடுவதாக' கூறியுள்ளார்.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து, இரண்டாண்டுகளுக்கு முன் 'தேசியக்கூட்டணியில்' இருந்தவரும் அதற்கு முன் 'சமயச்சார்பற்ற கூட்டணியில்' இருந்தவரும் தற்போதைய 'மூன்றாவது அணியில்' இருப்பவருமாகிய ஜனதா தள(ஏபி பிரிவு) தலைவர், 'முதல்வர் நேற்று கூட தன்னிடம் அதுபற்றிப் பேசியதாகவும் அதற்கும் அவருக்கும் சம்பந்தமேயில்லை என்றும் எதிர்க்கட்சிகளின் இப்போக்கு ஜனநாயகத்திற்கும் ஜனநாயக சட்டங்களுக்கும் விரோதமானது' என்று இன்டெர்னெட்டில் விடுத்துள்ள மின் அறிக்கை ஒன்றில் அவர் கூறியுள்ளார்.

இவர் இரண்டாண்டுகளுக்கு முன் பிரிந்த 'பொதுவுடமை தேசிய ஜனதா (ஓ பிரிவு) கட்சி'யிலிருந்து பிரிந்து வந்து 'பொதுவுடமை ஜனதா கட்சி (ஏபி பிரிவு)' என்ற பெயரில் புதுக்கட்சி ஆரம்பித்துள்ளார். 'இதுதான் உண்மையான ஜனதா கட்சி' என்றும் அவர் அவ்வறிக்கையில் கூறியிருக்கிறார்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors