தமிழோவியம்
ஆன்மீகக் கதைகள் : நீங்கள்தான் என் குரு!
-

துறவி ஒருவர் கடவுளைக் காண விரும்பித் தவம் இருந்தார். நீண்டகாலம் ஆயிற்று. கடவுள் காட்சி தரவில்லை. எனவே அவருக்குத் தவத்தில் ஆர்வம் குறைந்துவிட்டது. அவர் மனம்
பணத்தை நாடியது.

வழியில் ஒரு திருடனைக் கண்டார். அறிமுகமாயிற்று. திருடன் துறவியிடம், "என்னுடன் வாருங்கள். கிடைப்பதில் ஆளுக்குப் பாதி" என்றான்; துறவி சம்மதித்தார்.

பகலிலேயே அரண்மனைக்குள் நுழைந்து. இருவரும் அரண்மனையில் திருடப் போனார்கள். நந்தவனத்தில் போய் ஒளிந்து கொண்டனர்.

நேரம் கடந்தது. திருடன் சுற்றுப்புறத்தைப் பொறுமையுடன் உற்றுநோக்கிக் கொண்டிருந்தான். துறவியிடம் பொறுமையில்லை. "எத்தனை நேரம் இப்படிக்காத்திருப்பது?"

அதற்குத் திருடன் "இரவு வரட்டும். பொறுமையாக இருங்கள்" என்றான்.

மெல்ல மெல்ல இருள் கவிந்தது. அதன்பிறகும் திருடன் கிளம்பவில்லை. ஒருவழியாக நள்ளிரவு பன்னிரெண்டு அடித்தது. உடனே, திருடன் சுறுசுறுப்பு அடைந்தான். கிளம்பத்
தயாரானான்.

ஆனால், துறவியால் கிளம்ப முடியவில்லை. காத்திருந்து காத்திருந்து களைத்துப் போய்விட்டார். அவர்தன் நிலையை எண்ணிப் பார்த்தார். பல உண்மைகள் புரிந்தன.

சட்டென்று, "குருதேவா!" என்றவாறு திருடனின் கால்களில் விழுந்துவிட்டார். திருடன் விழித்தான்.

"திருட்டுத் தொழில்தான் என்றாலும் நீங்கள், அதில் காட்டும் தீவிரக் கவனத்தையும், மன ஒருமைப்பாட்டையும், நான் எனது தவத்தில் காட்டவில்லை. காரியசித்திக்கு உண்மையான வழி, ஒன்றுபட்ட மனமும் பொறுமையும்தான் என்பதை, நீங்கள் எனக்கு, இப்போது புரியவைத்து விட்டீர்கள், எனவே நீங்கள்தான் என்குரு" என்று கூறிவிட்டு, மீண்டும் தவம் செய்யக் கிளம்பிவிட்டார் துறவி.

Copyright © 2005 Tamiloviam.com - Authors