தமிழோவியம்
கட்டுரை : மகிழ்ச்சியாய் வாழ்வது எப்படி?
- மதுமிதா

 

உலகில் வாழும் உயிரினங்களின் இலட்சியங்கள் பலவகையானவை.கடைசி பரிணாமமான மனிதன் வரை இதில் சேர்த்திதான். பிற உயிரினங்களின் மகிழ்வை விடுத்து மனிதனின் மகிழ்வை மட்டும் இங்கே எடுத்துக் கொள்வோம்.மிருகங்களோடு அவனைச் சேர்க்கவேண்டாம்.அவைகளுக்கு சிரிக்கத் தெரியாது.மனிதர்களின் சாபக்கேடான கொலை,கொள்ளை,பாலியல் பலாத்காரம் இவற்றையும் இங்கே கணக்கில் சேர்க்க வேண்டாம், நகைச்சுவை தேவை என்பதால்.ஆறறிவு பெற்று உயர்ந்தவனை இன்னும் மிருகமாகவே நினைக்க மனசாட்சி தடுக்கிறது.எப்படியேனும் ஒரு இருநூறு நூற்றாண்டுகளில் அவன் முயன்று ஜாதி,மத,இன வெறியிலிருந்து மாறிவிடமாட்டானா என்ன?இந்த நம்பிக்கை கூட இல்லையென்றால் பிறகு எப்படி மகிழ்வாய் வாழ்வது?

மனிதனின் அடிப்படைத்தேவைகளைப் பூர்த்தி செய்தாலே மகிழ்வு சேருமெனும் நிலை இப்போது இல்லை. உணவு,உடை,உறைவிடம் இவை மட்டுமே தேவை என்னும் நிலையும் எப்போதோ மாறிவிட்டது.பழங்கள்,கிழங்கு,மாமிசம் உண்டவனின் விருப்பம் வகைவகையான 'பாஸ்ட்புட்' டுக்கு மாறியாகிவிட்டது. இதில் இயற்கை உணவு உட்கொள்பவர்களையும்,பாம்பு,தேள்,நண்டு ஆகியவற்றை விரும்புபவர்களுயும் சேர்க்கவில்லை.

இலை,மரப்பட்டைகளை உடுத்தியவன் இயன்ற அளவில் நாகரீகமாக 'டிரெஸ்ஸிங் ஸ்டைல்' லில் உடுத்த ஆரம்பித்தாகி விட்டது. இங்கே உள்ள  நாடுகளில் வியர்த்துக் கொட்ட இழுத்து மூடி உடை அணிபவர்கள் அதிகமிருக்க,அங்கே உள்ள குளிர் தேசங்களில் குளிரில் முழங்கால் தெரிய  துணிகளை அதிகமணிபவர்களை என்ன சொல்வது? இதில் அரைகுறை உடுப்பணிபவர்களைச் சேர்க்கவில்லை.

குகைகளில்,சமவெளிகளில் வாழ்ந்த நிலைமாறி 'ப்ளாட் சிஸ்டத்' -திற்கு மாறியாகிவிட்டது. இதில் வீதிகளில்,ரோட்டோரங்களில் வீடுகளின்றி வாழ்பவர்களையும்,அரண்மனைகளில் வாழ்பவர்களையும் சேர்க்கவில்லை.குளிருக்கு ஹீட்டர்,வெயிலுக்கு ஏர்கண்டிஷனர் இருக்கிறதே இப்போது.

ஆக இவற்றையெல்லாம் கடந்து விஞ்ஞான வளர்ச்சி,ஆன்மீக வளர்ச்சி,நாத்திக வளர்ச்சி கடந்தும் (இவற்றை சேர்த்தெழுதுவதால் யாரும் கோபித்துக் கொண்டு, விவாதமென்று சர்ச்சைக்கு வந்துவிடக் கூடாது) மனிதன் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி?

ஒருவர் டாக்டராக,இஞ்சீனியராக ஆக வேண்டுமென்பது முந்தைய தலைமுறையின் விருப்பமாக இருந்தது. பாங்க் ஆபீசராக,அரசுஅலுவலராக இருக்க வேண்டுமென்பது அடுத்த விருப்பம்.சினிமா,அரசியல்,ராணுவம்,சேவை,கம்ப்யூட்டர்,வானியல்,ஜோதிடம்,எழுத்து,இசை,நடனம்,ஓவியம்,சிற்பம் என்று பலதரப்பட்ட விருப்பங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவருக்கு விருப்பமாக இருக்கும்.

எந்த விரும்பிய லட்சிய துறையினை எடுத்துக் கொண்டாலும், அதில் சிறப்பாக செயல்பட்டாலும், மகிழ்ச்சியாய் வாழ்வதென்பது தனியான கலை. எனவேதான் வாழ்நாள் முழுமையும் மகிழ்ச்சியாய் வாழவேண்டுமென்பதே அனைவரின் அத்தனை லட்சியத்திற்கும் பின்னான இறுதி லட்சியமாய் இருக்கும். அதற்குண்டான வழிமுறைகள் என்னென்ன? பார்க்கலாம்.

1. பொய் சொல்லக்கூடாது

திருடன் ஒருவன் வலதுபக்க பாதை வழியே போவதைப் பார்த்து விட்டீர்கள் தவிர்க்க இயலாத சூழலில். கையில் கத்தி இருக்கிறது. காட்டிக் கொடுத்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று மிரட்டி விட்டுச் சென்றுள்ளான் திருடன். ஆனால் அவன் திருடன் இல்லை. திருடன் என்று தவறாகக் காவலர்கள் தேடுகின்றனர்.காவலர் வந்து இந்தப் பக்கமாய் திருடன் போனதைப் பார்த்தாயா என்று வலதுபக்கம் காட்டினால்,இந்தப் பக்கம் திருடன் சென்றதைப் பார்க்கவில்லை என்று இடது பக்கம் காட்ட வேண்டும். பொய்யும் சொல்லவில்லை. இப்போது இரு உயிர்களுக்கு சேதமுமில்லை. இந்த டெக்னிக்கை வேறு சிலவற்றுக்கும் உபயோகிக்கலாம். எதற்கெல்லாம் என்று அவரவர்களே யோசித்து முடிவெடுத்து மகிழலாம்.

பொய் சொல்லக் கூடாதென்பதற்கு முக்கிய காரணம் ஒன்றும் இருக்கிறது. நமக்கு மறதி என்பது கொடுப்பினை. முதலில் சொன்ன பொய்யை மேலும் தொடர்ந்து சொல்லும் வல்லமையும் நமக்கு இல்லை. ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் வேறு சொல்ல வேண்டும். கற்பனைத்திறனும் கிடையாது. ஏன் ரிஸ்க் எடுக்கணும். பொய் சொல்லாமலிருப்பது ஏன் பெட்டர் என்பது இப்போது புரிந்திருக்குமல்லவா?

பொய் சொல்லாமலிருந்தால் மகிழ்ச்சி நிச்சயம்.

2. ஒன்றை சொல்லி விட்டால்,சொன்ன சொல்லை காப்பாற்றும் பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

இது பல வழிகளில் பயன் தரும் விஷயம்.ஒரு பணி செய்ய வேண்டுமென்றால் முதலில் இரண்டு பேரிடமாவது இதனைச் செய்யப் போகிறேன் என்று சொல்லி விடவேண்டும். நாமோ பொய் சொல்ல மாட்டோம். பிறகு சொன்ன சொல்லைக் காப்போம். இந்நிலையில் இன்று இந்தப் பணி செய்யப் போகிறோம் என்று முடிவெடுத்தபின் செய்யாதிருக்க இயலாது. ஏனென்றால் அந்த இரண்டு பேர் வந்து என்ன இன்னும் செய்யவில்லையா என்று கேட்டால் எங்கே முகத்தை வைத்துக் கொள்வது. ஆகையினால் ஐந்து நாட்களுக்குள் முடிக்க வேண்டிய பணியென்றால் பத்து நாட்களுக்குள்ளாவது முடித்து விடுவோம்.

இதற்கு சந்திரமுகி திரைப்படம் பார்க்கப் போகிறேன் என்று இருவரிடம் சொல்லி,போனாயா,பார்த்தாயா என்று அவர்கள் வினவ, பத்து நாட்களுக்குள் பார்த்துவிட்டேன் என்று சொல்லும் பணிக்கு உபயோகப்படுத்துவதல்ல இந்த முறை. ஒரு கதை எழுதப் போகிறேன் என்று நண்பர்கள் இருவரிடம் சொல்ல, இருவரும் என்ன எழுதினாயா,எழுதி முடித்தாகி விட்டதா என்று கேட்டு கேட்டே எழுத வைத்து விடுவர். 'இவனெல்லாம் கதை எழுதி' என்று பின்னால்,பின்னால் சொல்வதை இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு நாள் மெகாசீரியல் கதாசிரியராகும் போது மூக்கின் மீது விரல் வைத்து, பிளந்தவாய் மூடாது பார்க்கப் போகிறவர்கள் இவர்கள்தான். நமக்கு செயல், செயல்தான் முக்கியம். ஆக சொன்ன சொல்லையும் காப்பாற்றி, செயலும் நிறைவேறி மகிழ்ச்சி நிச்சயம்.

3.புன்னகையுடன் இருக்க வேண்டும்.

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது வழக்கில் உள்ளது.உறவுகளிடையே பிரச்சினைகள் வரும் போது(நண்பர்களைக் கூட இதில் சேர்த்துக் கொள்ளலாம்) நேரடியாக, அல்லது மறைமுகமாக, சுமுகமாக பிரச்சினையினைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.இல்லை எனும் பட்சத்தில் மூன்றாவது மனிதரிடையே சொல்லும் வழக்கம் அறவே இருக்கக் கூடாது.கண்,கை,வாய்,மூக்கு,நாக்கு என விஸ்வரூபம் எடுப்பதனைத் தடுக்கத்தான்.மௌனமாக இருக்கும் பட்சத்தில் சுலபமாக இடையில் தோன்றும் விவகாரங்களைத் தவிர்க்கலாம். அவர்களை,அடுத்தவரிடம் எதுவும் குறைகூறாத பட்சத்தில் நம் மனமாவது அமைதியாய் இருக்கும்.

இதற்கு எந்த உதாரணமும் சொல்லப் போவதில்லை. நல்ல வேளையாக எதுவும் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் கொட்டிய வார்த்தைகளை எந்தக் கூடையில் அள்ளுவது எந்த தர்மசங்கடத்திலிருந்து தப்பிக்கலாம்.இல்லை என்றால் கூறிய வார்த்தைகளே விரல் நீட்டி குத்தி குத்திக் காட்டி ரணகளப்படுத்திவிடும். ஒரு புன்னகை எல்லாவற்றையும் தீர்க்கும் என்ற நம்பிக்கையோடிருக்கலாம்.அடுத்த ஜென்மம் வரையிலா என கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது.இளிச்சவாய் பட்டம் கிடைத்துவிடுமே என்று எள்ளளவும் தயங்கக் கூடாது.புன்னகை,சிரிப்பு என்று அனுதினமும் பழக்கப் படுத்திக் கொண்டால் அது நாம் அறியாமலேயே அனிச்சைச் செயலாய் எப்போதும் புன்னகைக்க வைத்துவிடும்.மரை கழண்ட லூசா என்றாலும் கேட்காததுபோல் சிரித்த வண்ணம் சென்று விடவேண்டும்.ஆக உறவுகளின் மேம்பாட்டிற்காக புன்னகையோடு இருந்தால் மகிழ்ச்சி நிச்சயம்.

4. மய்யமாய் தலையாட்டுதல்.

வாழ்க்கையின் எதிர்பாராத நேரத்தில், விவாதம் என்று எந்த விஷயத்திலாவது வருவது தவிர்க்கவே இயலாதது.அதுவும் யாரிடம் எந்த கணத்தில் என்ன விவாதம் ஏற்படும் என்பது அறுதியிட்டுக் கூற இயலா சிதம்பர ரகசியம். அதிலும் நம்மை சாட்சியாக வைத்து இரு பிரிவாகப் பிரிந்து எப்போது சர்ச்சை களைகட்டும் என்பதை பிரம்மனாலும் கணிக்க இயலாது. அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் உப்புப் பெறாத விஷயத்திற்கு சர்ச்சை தேவையா என்று அறிவார்த்தமாகப் பேசிவிடக் கூடாது.

உப்பு என்ன அவ்வளவு மட்டமா?உப்பு சத்தியாகிரஹம் தான் வெள்ளையனை வெளியேற்றியது என்று ஒரு பிரிவும், உப்பினால்தான் எல்லா பிரச்சினையும், உப்புச் சத்திற்கு கால் வீங்குதல்,மருத்துவத்தில் இன்னின்ன மருந்துகள் உள்ளன என ஒரு பிரிவுமாய்,சர்ச்சை திசை மாறிவிடும் அற்புதமும் நேரிடலாம். அதனால் அதுபோன்ற தருணங்களில், தொலைக்காட்சியின் நேர்காணலில் கேள்வி கேட்பவர், பதில் பெறுகையில் தலையாட்டுவதுபோல், மய்யமாய் தலையாட்டி வைக்கலாம். அவ்விதம் மய்யமாய் தலையாட்டி வைத்தலால் மகிழ்ச்சி நிச்சயம்.

5. சரி எனல்.

எந்த விஷயமானாலும் 'சரி' என்பது தப்பித்தலுக்குரிய வார்த்தை.சற்று நேரம் சென்ற பிறகு 'சாரி' செய்யத்தான் நினைத்தேன் செய்ய இயலவில்லை என்று கூறி தப்பித்துக் கொள்ளலாம். இல்லை என்னால் முடியாது என்று அந்த நேரமே கூறினால் சர்ச்சையே வலுக்கும். அதைவிட சிறிது நேரம் எடுத்துக் கொள்கையில் செய்ய இயலாதென்ற காரியம் நம்மாலேயே செய்து முடிக்கப் படலாம். அல்லது நமது பரிதாப நிலைக்கு இரங்கி யாராவது ஒருவரால் செய்து முடிக்கப் படலாம்.

உதாரணத்திற்கு துணி தேய்த்து (iron செய்து) வைக்க வேண்டும்.அப்போது வேறு வேலை இருக்கிறது இல்லை என்னால் முடியாது என்று சொல்லக் கூடாது.சரி செய்கிறேன் என்று சொல்ல வேண்டும். பிறகு கரண்ட் இல்லை என்பதால் தேய்க்க இயலவில்லை எனலாம்.வேலை முடிந்ததென்றால் நாமே தேய்த்து வைத்து விடலாம்.சலவைக்காரனிடம் தரலாம்.பாவமே என்று சொன்னவர் தானாகவே தேய்த்துக் கொள்ளலாம். அதை விடுத்து இல்லை என்னால் முடியாது என்கையில் multi options-களைத் தவறவிடுகிறோம். வில்லங்கத்திற்கு நாமே வித்திட்டு விடுகிறோம்.விவகாரமெனும்  அவலம் கோரதாண்டவமாட அறியாமலேயே அனுமதிச்சீட்டளித்து விடுகிறோம்.  ஆகவே சரி என்றால் மகிழ்ச்சி நிச்சயம்.

இதனால் சகல ஜீவராசிகளுக்கும் தெரிவிக்கப் படுவது என்னவென்றால், இது வரையிலும் நன்றாக இருந்த மனுஷன் என்ன இந்தக்கோலமாகிவிட்டார் என்று காதுபடப் பேசினாலும் கலங்கிடவே வேண்டாம்.

இந்தக் கட்டுரை படிக்கவில்லை என்று பொய் சொல்ல வேண்டாம். விடாமுயற்சியாய் எந்த நேரத்திலும் புன்னகைப்பேன் என்று சொன்ன சொல்லைக் காப்பாற்றலாம். மந்தகாசப் புன்னகையுடன் சென்று விடலாம், மய்யமாய் தலையாட்டிக் கொண்டு,சரி என்று ஒப்புக் கொண்டு. மகிழ்ச்சி நிச்சயம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors