தமிழோவியம்
திரைவிமர்சனம் : பாசக்கிளிகள்
- மீனா

Prabhu Nayar Muraliகாலம் காலமாய் பார்த்து அலுத்துப் போன கதையை கொஞ்சம் தூசி தட்டி தன்னுடைய வசனத்தால் தூக்கி நிறுத்தப்பார்த்திருக்கிறார் கலைஞர்.

பாசமலரில் பார்த்த அதே அண்ணன் தங்கை பாசக்கதையுடன் கிராமத்தில் இரண்டு குடும்பங்களுக்கிடையே உண்டாகும் பகையும் - பகையின் விளைவால் ஏற்படும் மோதல்களும் தான் பாசக்கிளிகளின் ஒரு வரிக்கதை.

மூத்த அண்ணன் பிரபு, இளைய அண்ணன் முரளி மற்றும் இவர்களின் தங்கை நவ்யா நாயர். அண்ணன் தங்கை பாசத்தை எடுத்துக்காட்டும் ஒரு குடும்பம் இவர்கள் என்றால் பக்கத்து கிராமத்தில் வாழ்பவர்கள் அண்ணன் நாசர், தங்கை ரோஜா மற்றும் தம்பி வினித். இந்த இரண்டு குடும்பத்திற்கும் காலம் காலமாய் நிலவி வரும் பகையை மேலும் தூண்டி விடுகிறார் ரோஜாவின் கணவரான கலாபவன் மணி. ஒரு காலத்தில் நவ்யா நாயரைத் திருமணம் செய்ய விரும்பிய கலாபவன் மணியை கடுமையாகப் பேசி அனுப்பிவிடுகிறார்கள் பிரபுவும் முரளியும். அதை மனதில் வைத்து சமயம் கிடைக்கும் போதெல்லாம் பிரபு குடும்பத்தைப் பழி வாங்கத் துடிக்கிறார் கலாபவன் மணி.

இதற்கிடையே நவ்யா நாயரும் வினித்தும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். தங்கள் காதலை வீட்டிலுள்ளவர்களுக்குத் தெரிவிக்கலாம் என்று அவர்கள் எண்ணும்போது கலாபவன் மணி செய்யும் ஒரு கலகத்தால் ஆத்திரமடையும் முரளி நாசரை அவமானப்படுத்திவிடுகிறார். அதனால் மனம் வெறுத்துப்போகும் நாசர் தற்கொலை செய்து கொள்கிறார். அண்ணன் தற்கொலைக்கு முரளிதான் காரணம் என்று வினித்தின் மனதில் விஷ விதை விதைக்கும் கலாபவன் மணி, பிரபு முரளி இருவரையும் பழிவாங்க அவர்களது தங்கை நவ்யா நாயரைத் வினித்திற்கு திருமணம் செய்துவைக்கிறார். பழிவாங்கும் எண்ணத்தில் திருமணம் செய்து கொண்ட வினித் நவ்யாவை என்ன செய்கிறார்? கலாபவன் மணியின் பழிவாங்கும் எண்ணம் நிறைவேறியதா என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகன் பிரபு என்பதால் அவருக்கு மாளவிகா ஜோடி. மாளவிகாவுடன் டூயட் பாடுகிறார். சண்டை போடுகிறார். அவ்வளவே. மற்றபடி பிரபுவின் நடிப்பில் சொல்லும் படி ஒன்றுமே இல்லை. இதே நிலைதான் முரளிக்கும். பாவம் இரண்டாவது ஹீரோ என்பதால் அவருக்கு ஜோடியும் கிடையாது.. டூயட்டும் கிடையாது. சொன்ன வேலையை அப்படியே செய்திருக்கிறார் நவ்யா நாயர். மற்றபடி முந்தய படங்களைப் போல விசேஷமாக அவரது நடிப்பில் சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை.

நாசர் மற்றும் வினித் இருவரும் வில்லன்களா அல்லது அப்பாவிகளா என்று ஒரு தீர்மானத்திற்கு வர சற்று நேரம் பிடிக்கிறது. கலாபவன் மணியின் வில்லத்தனத்தில் வித்தியாசமாக ஒன்றுமே இல்லை. இனியாவது இவர் தான் நடிக்கபோகும் படத்தின் கதையைக் கொஞ்சம் காது கொடுத்து கவனமாகக் கேட்டால் நல்லது. படத்தில் ரோஜா மற்றும் மாளவிகாவும் இருக்கிறார்கள். வடிவேலு மற்றும் மனோரமா இருவரும் தூயதமிழில் வசனம் பேசுவது கொடுமை.

கலைஞர் மீண்டும் முதல்வரானால் யார் எதற்காக சந்தோஷப்படுவார்களோ தெரியாது.. ஆனால் தமிழ்திரையுலகில் அவரது வசனத்தில் வரும் படங்களைப் பார்ப்பவர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள் (வேலை பளுவில் படத்திற்கு வசனம் எழுதுவதை விட்டுவிடுவார் என்ற நம்பிக்கை தான்). சம்மந்தமே இல்லாமல் வரும் தூய தமிழ் வசனங்களும், கதாபாத்திரங்களுக்கு அவர் வைத்திருக்கும் ஆதிகாலப் பெயர்களும் ஆங்காங்கே வீசும் அரசியல் நெடி கலந்த வசனங்களும்.. அப்பப்பா எப்போது படம் முடியப்போகிறது என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகின்றன.

பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வந்திருக்கும் இயக்குனர் அமிர்தம் மொத்தப்படத்திற்கும் கலைஞரை மட்டுமே முழுவதும் நம்பாமல் ஓரளாவிற்காவது தன்னால் முடிந்த முயற்சிகளைச் செய்திருந்தால் பாசக்கிளிகள் ஒரளவிற்காவது இருந்திருக்கும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors