தமிழோவியம்
தராசு : எது கேவலம்?
- மீனா

தமிழ் படங்களுக்கு ஆங்கில பெயர் வைப்பது கேவலம் - தமிழ் உணர்வு நெஞ்சில் இருந்து வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி. பா.ம.க வைச் சேர்ந்த ஒவ்வொருவரும் சாதாரண தொண்டர்களாகவும் தலைவர்களாகவும் மட்டுமல்லாமல் தமிழ் காவலர்களாகவே மாறி வருவது நல்ல விஷயம் என்றாலும் இவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவை தாக்குவது மட்டும்தான் தங்கள் தலையாய கடமை என்று நினைப்பதுதான் நகைப்பிற்குள்ளாகி வருகிறது.

தமிழை வளர்க நினைப்பவர்கள் முதலில் தமிழில் கையொப்பமிடத் துவங்கலாம் - தமிழைக் கட்டாயப் பாடங்களில் ஒன்றாக மாற்ற வேண்டும் என்று குரல் கொடுக்கலாம், அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடலாம் - கிராமங்கள் நகரங்கள் என்று அனைத்து இடங்களிலும் தமிழை போதிக்கும் கல்விச்சாலைகளை இலவசமாக தங்கள் சொந்த செலவில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளலாம் - முதலில் தங்களுக்கும் தங்கள் பிள்ளைகள் மற்றும் தங்கள் தொழில் நிறுவனங்களுக்கு தூய தமிழில் பெயர் வைக்கலாம். ஆனால் இவை அனைத்தையும் விட்டுவிட்டு தமிழ் திரையுலகம் மீது மட்டும் தொடர்ந்து குற்றம் கூறி வருவது எதற்காக?

சினிமா மற்றும் சினிமா கலைஞர்கள் மீதான எந்த ஒரு விவாதமும் மக்கள் மத்தியில் பரபரப்பாக அலசப்படும். இதன் மூலமாகத் தங்களுக்கு கிடைக்கும் விளம்பரங்களுக்காகவே இவர்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதில் பொது மக்களுக்கு எந்த விதமான மாற்றுக் கருத்தும் இருக்காது. சினிமா பெயரை மட்டும் பிரச்சனையாக்கும் இவர்கள் அதே சினிமாவில் வரும் வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகளைக் கண்டித்து குரல் எழுப்ப மறுப்பதேன்? ஆபாசமும் வன்முறையும் தமிழ் கலாச்சாரத்தின் வெளிப்பாடுகளா? நல்ல தமிழில் பெயரை வைத்துவிட்டு ஆபாசம் மற்றும் வன்முறையின் உச்சகட்டமாக ஏதாவது ஒரு திரைப்படம் இருந்தால் அதைக் குறித்து இவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்புவார்கள்? அல்லது இது நமது பிரச்சனை இல்லை என்று விட்டுவிடுவார்களா?

கடந்த தேர்தலில் ஆளும் கட்சியின் மீதான அதீத வெறுப்பின் காரணமாக மட்டுமே பா.ம.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பெறும் வெற்றியைப் பெற்றனவே தவிர மக்களுக்கு இவர்கள் இயக்கத்தின் மீதான பிடிப்பினால் இல்லை. பா.ம.க தலைவர்களும் உறுப்பினர்களும் ஆக்கப்பூர்வமான வகையில் தமிழை வளர்க முயற்சிகள் மேற்கொண்டால் மட்டுமே அடுத்த தேர்தலில் இவர்களால் இந்த தமிழ் வளர்க்கும் கதையைக் கூறிக்கொண்டு மக்களை எதிர்கொள்ள முடியும். இல்லையென்றால் கதை கந்தல்தான்!!

Copyright © 2005 Tamiloviam.com - Authors