தமிழோவியம்
நூல் மதிப்புரை : பெரியாரியல் - வே.ஆனைமுத்து
- அருளடியான்

         
இந்திய வரலாற்றில் காந்தியடிகள் வகிக்கும் இடத்தை தமிழக வரலாற்றில் பெரியார் ஈ.வெ.ராமசாமி பெறுகிறார்.  அவரைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள சாமி. சிதம்பரனாரின் 'தமிழர் தலைவர்' என்ற பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூலும், பெரியார் களஞ்சியம் என்ற பெயாரில் கடவுள், மதம், பெண்ணுரிமை, சாதி-தீண்டாமை  ஆகிய நான்கு தலைப்புகளில் ஒவ்வொரு தலைப்பிலும் இரு தொகுதிகள் வீதம் எட்டு தொகுதிகளும் தான் பெரிதும் பயன்பட்டன. இது தவிர, எஸ்.வி. ராஜதுரையும், வ.கீதாவும் இணைந்து எழுதிய பெரியார்: சுயமாரியாதை, சமதர்மம், எஸ். வி. ராஜதுரை தனித்து எழுதிய 'பெரியார்: மரபும், திரிபும்' போன்ற நூல்களும், நிறப்பிரிகை பத்து ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட 'பெரியாரியம்' என்ற பெயாரிலான கட்டுரைத் தொகுப்பும், சில ஆண்டுகளுக்கு முன் அ. மார்க்ஸ், பெரியாரின் அறியப் படாத பார்வைகளை பெரியார்?' என்ற பெயாரில் ஒரு சிறிய நூலாக வெளியிட்டு இருந்தார்.   பெரியாரின் சிந்தனைகளை, அவர் வாழும் காலத்திலேயே தொகுத்து நூலாக வெளியிட்டவர் திருச்சி வே. ஆனைமுத்து.   அந்த தொகுப்பு தற்போது விற்பனையில் இல்லை. இவர் சில ஆண்டுகளுக்கு முன் 'பெரியாரின் அயல் நாட்டுப் பயணக் குறிப்புகள்' என்ற நூலை வெளியிட்டார்.  டாக்டர் மா. நன்னன் 'பெரியார் கணிணி' என்ற பெயாரில் பெரியாரின் சிந்த்னைகளை மேற்கோள்களாக தொகுத்து வெளியிட்டு உள்ளார்.  புலவர் கோவேந்தனும் இதே தன்மையில் 'தந்தை பெரியார் சிந்தனைக் களஞ்சியம்' என்ற பெயாரில் இரு தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.  எழுத்தாளர் ஞாநி 'அய்யா' என்ற பெயாரில் சென்னைத் தொலைக்காட்சிக்காக பெரியாரைப் பற்றி ஆவணப் படம் எடுத்தார். இதன் திரைக்கதை வடிவத்தை சமீபத்தில் நூலாக வெளியிட்டு உள்ளார்.

பெரியாரை விமர்சித்து எழுதியவர்களில் குணா போன்ற தனித்தமிழ்வாதிகளை ஒரு வகையிலும், ரவிக்குமார் போன்ற தலித்தியவாதிகளை இரண்டாவது வகையிலும், கோ. கேசவன் போன்ற மார்க்சிய ஆய்வாளர்களை மூன்றாவது வகையிலும் அடக்கலாம். இந்த மூன்று தரப்பு விமர்சனங்க்களுக்கும் ஈடு கொடுத்து பெரியாரியவாதிகள் கருத்துக் களத்தில் வெற்றிகரமாகப் பணியாற்றி வருகின்றனர். பெரியாரியவாதிகளும், பெரியாரை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களும் அவசியம் படிக்க வேண்டிய் நூல் தோழர் வே. ஆனைமுத்து எழுதிய 'பெரியாரியல்'. இந்த நூலில், இந்திய வரலாற்றையும், இந்தியாவிலும், அயல் நாடுகளிலும் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதிகளில் வரலாற்றையும் வே. ஆனைமுத்து எழுதியுள்ளார்.  பெரியாரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். சமதர்மம்,  பெண்ணுரிமை தொடர்பாக பெரியாரின் கருத்துக்களை ஆய்வு செய்துள்ளார். பின்னர் சேரன்மாதேவி குருகுல போராட்டம், வைக்கம் கிளர்ச்சி, கோவில் நுழைவுப் போராட்டம், பெரியாரின் இதழியற்பணிகள், வகுப்புவாரி உரிமை, தமிழ் மொழிக்காப்பு போராட்டம், தமிழ் இலக்கியத்துக்கு ஈ.வெ.ராவின் பங்களிப்பு, பெரியாரின் கோட்பாடுகள் பெற்ற செயல் வடிவங்கள் - அரசு ஆணைகள், பெரியாரின் தனித்தன்மைகள் என்ற தலைப்புகளில் பெரியாரின் வாழ்வும், பணிகளும், நிலைப்பாடுகளும் ஆய்வுசெய்யப் பட்டுள்ளன. இவற்றில் 'பெரியாரின் தனித்தன்மைகள்' என்ற அத்தியாயத்தில் உள்ள கருத்துக்கள் இதற்கு முன் எந்த நூலிலும் வெளீயானதில்லை என நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.  ஒவ்வொரு அத்தியாயதின் முடிவிலும் வினாக்கள் இணைக்கப்பட்டுள்ளது,   படநூலைப் போன்ற  தோற்றத்தை தருகிறது.  இந்த நூலின் ஆசிரியரும் இந்த நூலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாட நூலாகச் சேர்க்க தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுகிறார்.

நூலாசிரியரைப் பற்றியப் பின்னட்டைக் குறிப்பு: வே. ஆனைமுத்து, திருச்சிராப்பள்ளி மாவட்டம் பெரம்பலூர் வட்டம் முருக்கன்குடியில் 21-06-1925-இல் பிறந்தார். 1940 முதல் பார்ப்பனரல்லாதார் உணர்வு கொண்டார். 1944 முதல் சுயமாரியாதை-திராவிடர் கழகப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டார். 1946-48 இல் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இடை நிலை வகுப்பில் பயின்றார். சொந்த முயற்சியில் தமிழிலக்கியம், வரலாறு, சட்டம், அரசியல் சட்டம் முதலான துறைகளில் அறிவைப் பெருக்கிக் கொண்டார். 1950 முதல் தந்தை பெரியாருடன் அணுக்கமான தொடர்பும், 1963 முதல் அன்றாடம் அன்னாருடன் கொள்கை பற்றிக் கலந்துரையாடும் வாய்ப்பும் பெற்றவர். பெரியாரின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் ஏறக்குறைய முழுமையாகத் தொகுத்து 'பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்' என்னும் முப்பெருந்தொகுதிகளாக 1974இல் பதிப்பித்துள்ளார். 08-08-1976இல் மார்க்சியப் பெரியாரியப் பெதுவுடைமைக் கட்சியையும், 19-08-1978இல் அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையையும் அமைத்திடக் காரணமானவர். 1978 முதல் இட ஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர். மண்டல் குழு அமையவும், அதன் பாரிந்துரைகள் செயல்படுத்தப் படவும் பெரும்பங்காற்றினார். இப்போது, அனைத்துப் பிரிவினருக்கும் விகிதாசார இடஒதுக்கீடு கோரிப் போராடி வருகிறார். இயக்கத் தோழர்களுடன் வட மாநிலங்களில் பெரியார் கொள்கைகளைப் பரப்பி வருகிறார். 1980-இல் தாம் எழுதிய சிறந்த அய்ந்து ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டுள்ளார். 1974இல் இவரால் தொடங்கப்பட்ட 'சிந்தனையாளன்' தமிழ் ஏடு தொடர்ந்து வெளிவருகிறது. 1994 முதல் ''Periyar Era' என்னும் ஆங்கில மாத ஏட்டைச் சிறப்புற வெளியிடுபவர். 1996 இல் மலேசியாவில் பெரியார் கொள்கைப் பரப்புப் பணியை மேற்கொண்டார்.

நூலின் பெயர்: பெரியாரியல்

ஆசிரியர் : வே. ஆனைமுத்து

விலை: ரூ. 200 (இரு தொகுதிகளும்)

கிடைக்குமிடம்: வே. ஆனைமுத்து
                      19 முருகப்பா தெரு (முதல் மாடி)
                       சேப்பாக்கம்
                       சென்னை-600 005

தொலைப்பேசி: (044) 2852 2862

Copyright © 2005 Tamiloviam.com - Authors