தமிழோவியம்
திரைவிமர்சனம் : தேவதையை கண்டேன்
- மீனா

காதலில் ஆண்கள் மட்டும் தான் ஏமாற்றுக்காரர்கள் என்றில்லை - பெண்களும் ஏமாற்றுவார்கள். இதுதான் தேவதையை கண்டேனின் ஒருவரிக் கதை.

டீக்கடைப் பையனான தனுஷ் - பணக்கார ஸ்ரீதேவியைக் காதலிக்கிறார். முதலில் கொஞ்சம் தயங்கும் ஸ்ரீதேவி, தனுஷ் தன் மீது வைத்திருக்கும் கண்மூடித்தனமான காதலைப் பார்த்து அவர் காதலுக்கு சம்மதம் சொல்கிறார். இருவரும் திருமணம் பற்றி ஏகப்பட்ட கற்பனைகளுடன் வாழ்கிறார்கள். இந்நிலையில் ஸ்ரீதேவிக்கு ஜுரம் வர - காதலி குணமாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு தனுஷ் சபரிமலைக்குப் போகிறார். அதே நேரத்தில் ஸ்ரீதேவிக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டரான குணால் அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார். ஸ்ரீதேவி தன்னுடைய வாழ்க்கையை குணால் மற்றும் தனுஷ¤டன் கற்பனை செய்து, தனக்குச் சரியான ஜோடி குணால் என்று அவரைத் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார்.

சபரிமலையிலிருந்து திரும்பிவரும் தனுஷ், ஸ்ரீதேவியின் திடீர் மனமாற்றத்தைக் கண்டு அதிர்கிறார். ஸ்ரீதேவியின் மனதை மாற்ற தனுஷ் எவ்வளவோ முயற்சித்தும் பலன் பூஜ்ஜியம். இதனால் மனம் உடைந்து போகும் தனுஷ் - காதலித்து ஸ்ரீதேவி தன்னை ஏமாற்றி விட்டதாக போலீஸில் புகார் செய்ய முயல்கிறார். முதலில் தனுஷை அடித்து நொறுக்கும் போலீஸ் அதிகாரி பொன்னம்பலம் பிறகு மனம் மாறி அவரது புகாரை ஏற்கிறார்.

கோர்ட்டில் முதலில் தான் தனுஷைக் காதலித்ததை மறுக்கும் ஸ்ரீதேவி பிறகு வேறு வழியில்லாமல் உண்மையை ஒப்புக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் தனுஷைக் கல்யாணம் செய்துகொள்ளவும் சம்மதிக்கிறார். இதற்கு தனுஷின் பதில் என்ன என்பதே படத்தின் முடிவு.

டீ விற்கும் பையனாக தனுஷ். அப்பாவி ஏழை இளைஞர். சமீபகாலத்தில் தனுஷிடம் பார்த்திராத அருமையான நடிப்பு. அனைத்துக் காட்சிகளிலுமே இவரது நடிப்பு சூப்பர். என்ன.. காட்சிகளில் மட்டும் கண்டினியூட்டியை கொஞ்சம் கவனித்திருக்கலாம். ஒவ்வொரு சீனிலும் ஒவ்வொரு விதமாகத் தோன்றுகிறார்.

காதலுக்கும் யதார்த்தத்திற்கும் நடுவே சிக்கித் தவிக்கும் கேரக்டரில் ஸ்ரீதேவி. நடிப்பில் பெரிய அளவில் சாதிக்க இயலாவிட்டாலும் குறைந்தபட்சம் முயற்சி செய்ததற்காகவே பாராட்டலாம்.

படத்தில் காமெடியில் மட்டுமல்லாமல் குணசித்திர நடிப்பிலும் அசத்தியிருப்பவர் கருனாஸ். ராஜீவ் - பாத்திமா பாபு. வழக்கமான அப்பா அம்மா. அவ்வளவே. படத்தில் பொன்னம்பலம் இருந்தும் வழக்கமான வில்லத்தனம் எதுவும் இல்லை. குணாலைப் பற்றி என்ன சொல்ல? ஏதோ இரண்டு காட்சிகளில் தலையைக் காட்டிவிட்டு போகிறார். அவ்வளவே!!

சமீபகால படங்களிலிருந்து வித்தியாசமான கதை - திரைக்கதை அமைத்த இயக்குனர் பூபதிபாண்டியன் பாராட்டப்பட வேண்டியவர் என்றாலும் படத்தில் ஏகப்பட்ட லாஜிக்குகளை கோட்டை விட்டிருக்கிறார். தேவாவின் இசையில் பாடல்கள் கேட்ட டியூனில் இருந்தாலும் அழகே பிரம்மனிடம் பாட்டு மட்டும் சூப்பர். மொத்தத்தில் தேவதையை கண்டேன் பாராட்டப்பட வேண்டிய புதிய முயற்சி. ஆனாலும் இயக்குனர் கதை திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

Copyright © 2005 Tamiloviam.com - Authors