தமிழோவியம்
அரும்பு : சக்தி சக்திதாசனின் அரும்பு
-

'அரும்பு'

மற்றவர்களால் அங்கீகரிக்கப்பட்ட முதல் படைப்பை யாரும் மறக்க முடியாது. அப்படி ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு படைப்பு இருக்கும்.  அந்த படைப்பு பற்றிய ஒரு மலரும் நினைவு தான் இந்த அரும்பு.

தங்களுக்கு முகவரி தந்த / மீண்டும் எழுதத்தூண்டிய / பலரால் பாராடப்பட்ட / பலரால் கிழிகப்பட்ட முதல் படைப்பு எது ? எந்த தளத்தில் எழுதினீர்கள் ? (கைஎழுத்து பத்திரிகை, குழுமம், அச்சு இதழ், வலைப்பதிவு, ஃபோரம், மின்னிதழ்...)

முதன் முதலில் வெளிவந்த போது எப்படி உணர்ந்தீர்கள் ? மற்றவர்கள் விமர்சித்த  போது எப்படி உணர்ந்தீர்கள் ? அந்த விமர்சனத்தின் தாக்கம் தங்களை எப்படி மாற்றியது ?

இப்படி பல எழுத்தாளர்களை கேட்டோம். அவர்களின் பதில்கள் இனி வாரந்தோறும்.

இந்த  வாரத்தில்..


சக்தி சக்திதாசன்

எனது படைப்பு கொடுத்த இனிப்பு

ஒரு எழுத்தாளளின் அரங்கேற்றம் எப்போது நடைபெறுகிறது ? மிகவும் ஆழமான கேள்வி. இதன் விடையை நான் என்னுள்ளே தேடிய கணங்கள் பல, விடை காண நிலையில் கேள்விகள் மனதில்  தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

நான் எப்போது எழுத ஆரம்பித்தேன் என்பது எனக்கு இன்றுவரை புதிராக இருக்கிறது. எழுத்து என்னும் பெயரில் எதை எதையோ கிறுக்கி அதை நானே படித்துப் பார்த்துச் சிலவேளைகளில் பூரிப்பும், சிலவேளைகளில் சலிப்பும் அடைந்து விட்டு மெதுவாக புத்தகங்களுக்கடியில் புதைத்து வைக்கும் ஞாபகம் எனது மனதில் இன்றும் வாடாத மலராக விரிந்த வண்ணமாக இருக்கிறது.

என்னப்பா ? எழுத்தாளன் என்கிறான் அப்புறம் எப்போது எழுதத் தொடங்கினேன் என்று தெரியாது என்கிறான்? என்ன குழப்புகிறானே ! என்று எண்ணுவது போல் தெரிகிறது. இன்றுவரை நான் என்னை ஒரு எழுத்தாளன் என்றோ இல்லைக் கவிஞன் என்றோ எண்ணியதே கிடையாது. நான் ஒரு சாதாரண மனிதன், இம்மனிதன் வாழ்வில் நடந்த, நடக்கின்ற, பார்த்த, பார்க்கின்ற சம்பவங்கள், நிகழ்வுகள் உள்லத்தில் ஏற்படுத்தும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை தமிழில் வடித்து பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டதன் விளைவு எழுத்துக்களாகப் பரிணமித்தன.

நான் எழுதுவது எல்லாம் ஒரு சிறந்த படைப்பாக வரும் என்று எண்ணி நான் என்றுமே எழுத அரம்பிப்பது கிடையாது. அதனால் தான் எப்போது எழுதத் தொடங்கினேன் என்று தெரியாது குறிப்பிட்டேன். கவியரசர் கண்ணதாசனின் பாடல்களில் அடியோடு என் மனதைப் பறிகொடுத்தவன் நான். பாடலின் இசையை, அதன் வரிகளை ரசித்த பின் தான் ரசிப்பது என் வழக்கம். பாடலில் இருக்கும் இசையைக் களைந்து விட்டு நிர்வாணமான வரிகளுக்குள் என் நினைவை மேய விடுவேன், அதிலிருக்கும் அர்த்தங்களுக்குள் என்னை அழுத்தி, கவியரசரின் அற்புதமான ஆற்றலை வியந்து அதிலே மயங்குவேன். இப்படித்தான் எனது எழுத்தார்வம் அத்திவாரமிட்டத்து என்று எண்ணுகிறேன்.

ஈழத்திலே வாலிபப் பருவத்திலே கன்னியரின் பின்னே அமைதிப்படையாய் வலம் வரும் அந்த வயதுக்குரிய நிகழ்வின் போது என்னெஞ்சத்தில் பூகம்பத்தை உருவாக்கினாள் ஒரு கன்னி. அந்தக் கன்னியைச் சந்தித்ததும், என் மனம் அவளையே சிந்தித்ததும், அந்தச் சிந்தனை என் நினைவில் தித்தித்ததும் என் முதல் கவிதையை எழுதத் தூண்டியது போலும். கண்டதும் காதல், அந்த வயதில் வரும் விழிகளின் மோதலினால் ஏற்படும் ஒரு சலசலப்பு என்பதை அறியாததினால்,

கண்கள் அவளைப் பார்த்ததும்
காதல் நெஞ்சில் கொண்டதும்
தூங்கக் கண்கள் மறந்ததும்
ஏங்க நெஞ்சம் நினைந்ததும்

என்று என்னை எழுதத் தூண்டியது. எழுதி விட்டு திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்து பூரித்தேன். ஏதோ நானே கண்ணதாசன் போலவும், எனது கவிதையினால் அந்தக் கன்னி மயங்கி தன்னை மறந்ததாகவும் எண்ணிக் கற்பனை உலகில் பறந்தேன்.
ஆனால் அந்தக் கவிதையை யாருக்குமே காட்டப் பயந்தேன். அதுதான் புத்தகத்துக்கடியில் போய்ப் புதைந்த முதலாவது கவிதை என்று எண்ணுகிறேன். எனது உயிர் நண்பனுக்குக் கூட நான் கவிதை எழுதினேன் என்று சொல்ல வெட்கப்பட்டேன். அவனும் நானும் கண்ணதாசன் பாடல்களைப் பற்றி, என் மனதைக் கவர்ந்த அந்தக் கன்னியைப் பற்றி, அவன் மனதைக் கவர்ந்த ஒரு கன்னியைப் பற்றி விவாதித்த வேளைகளில் கூட எனது புத்தகங்களுக்கடியிலிருக்கும் புதையல்களைப் பற்றி நான் அவனுக்குச் சொல்லவேயில்லை. ஏன் அப்படி வெட்கப்பட்டேன் என்று இப்போது கூட எனக்குக் காரணம் புரியவில்லை.

இப்படிப் பல கன்னிக் கவிதைகள் புதையல்களாகப் போய் தம்மை மறைத்துக் கொண்டன. அவற்றில் பலதை என் மனம் மறந்தும் போனது. ஆனால் அந்த அனுபவங்கள் கொடுத்த சிலிர்ப்பு. அந்த உணர்வுகள் கொடுத்த கணநேர காதல் கனவு ஈடில்லாதவை. பொன்னான பொழுதை மண்ணாக்கிய குற்றத்துக்காக புலம் பெயர் தண்டனை கிடைத்தது எனக்கு. புலம் பெயர்ந்தாலும், மனம் என்னமோ தமிழையையும், கவிதையையும் மறக்கவேயில்லை. தொடர்ந்து எனது இங்கிலாந்து மாணவ வாழ்க்கையில் சொல்லமுடியாத பல இடர்கள் ஏற்படும் போதெல்லாம், கவிதைகள் புத்தகங்களுக்கடியில் புதைக்கப்பட்டுக் கொண்டேயிருந்தன.

அப்போதுதான் என் வாழ்க்கையில் விடிவெள்ளியாக, என் இதயத்தின் அன்பு தீபமாக வந்தாள் என் மனைவி. மனைவி என்னும் ஸ்தானத்தை அடையும் முன்னர் காதலி என்னும் அந்தஸ்தில் அவளுக்காக நான் வரைந்த காதல் கவிதைகள் ஆயிரம், அவற்றில் சில பத்தை நான் அவளுக்குக் காட்டியதும் உண்டு. ஆரம்பத்தில் எனது கவிதைகளைக் கண்டு இது நான் தான் எழுதினேனோ என்று சந்தேகிப்பாளாம், அதைச் சோதிப்பதற்காக ஒருநாள் எனக்குத் தானே ஒரு தலைப்பைக் கொடுத்து அதைப் பற்றி ஒரு கவிதை வரையச் சொன்னாள்.

அதைக் கண்டதும் தான் எனது கவிதையார்வத்தைப் பற்றி அவளுக்குப் புரிந்தது. அதுவே எனக்கும் ஒரு பெரிய உந்து சக்தியாக விளங்கியது என்றே சொல்ல வேண்டும். அன்று எனது மனைவியின் பிறந்த தினம். ஒரு ஞாயிற்றுக்கிழமை. காலையில் எழுந்ததும் எனது மனைவி சமையலறையில் காபி போட்டுக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே மேஜையின் முன் உட்கார்ந்திருந்த என் மனதில் அந்த ஞாயிற்றுக்கிழமை, காலை அற்புதமான சூரிய ஒளியுடன் விளங்குவது ஒரு உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தியது. ஒரு காகிதத்தில் கிறுக்கினேன்

வடிவான ஞாயிறு இது விடியும்போதே ஒளிருது .... என்று ஆரம்பிக்கும் ஒரு கவிதை. அதைப் பார்த்ததும் எனது மனைவி திகைத்து விட்டாள். அற்புதமான கவிதையாக இருக்கிறதே என்று பாராட்டினாள். மனம் பூரித்தது. திரும்பத் திரும்பப் படித்தேன்.

ஆனால் எதையுமே நான் எந்த இதழ்களுக்கோ பிரசுரிக்க அனுப்பவில்லை. அட நான் எழுதியதை யார் பிரசுரிக்கப் போகிறார்கள் என்று எண்ணிப் பேசாமல் இருந்து விடுவேன். ஆனால் அவ்வப்போது நான் சிறு காகிதத் துண்டுகளில் எழுதும் கவிதைகளைச் சேர்த்துச் சேர்த்து வைப்பாள் என் மனைவி. எழுத்தில் மிகவும் அதிகமாக ஈடுபட முடியாமல் போனதிற்கு அப்போது இருந்த வாழ்க்கைச் சிக்கல்களும் ஒரு காரணமாக இருந்தது. வாழ்வில் அடிமட்டத்திலிருந்து அல்லல் பட்டுக் கொண்டிருந்த வேளை, மைந்தன் பாலகனாக இருந்த சம்யம் அவனை நன்றாக வளர்த்து எடுக்க வேண்டிய கடமை எனப் பல பொறுப்புக்கள் எழுத்து என்னும் இதய்த்துக்கு இன்பமளிக்கும் வேலையை கொஞ்சம் தள்ளிப் போட வேண்டிய நிலையை உருவாக்கியது என்று கூடச் சொல்லலாம்.

வாழ்க்கையில் கொஞ்சம் ஸ்திரமடைந்த நிலையை அடைந்த பின்புதான் எழுதுவதற்கு அவகாசம் கிடைத்தது.  தமிழ் இணைய உலகம் தான் எனக்கு எழுத்து உலகினுள் ஒரு முகவரியைத் தேடித்தந்தது. அதற்காகவே நான் எனது வாழ்க்கையில் எனது கைகளுக்கு எழுதும் சக்தி இருக்கும்வரை தமிழ் இணைய உலகத்திற்காக எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும் என்னும் வைராக்கியத்தை ஏற்படுத்தியது.

இணைய இதழில் தான் எனது எழுத்து முதன் முதலில் அச்சு வடிவம் பெற்றது. ஆமாம் "திண்ணை " இணைய இதழ் தான் எனது வளர்ச்சிக்கு முதல் படியிட்டது. எனது முதலாவது பிரசுரமாகிய கவிதை,

மறுபிறவி எடுத்தால்

பள்ளி செல்ல வழியின்றித் தவிக்கும் சிறுவனவன்
துள்ளித் திரியும் வயதில் சுண்டல் விற்கும் நிலை
கல்வியின் மதிப்பு அறியா மனிதர் கடித்துத் துப்பும்
கடலைக்காக காத்து நிற்கும் ஏழைக் கூட்டம் ஒன்று
நிதியமைச்சர் வீட்டு விருந்தின் பின் வீசியெறியும் எச்சில் இலையின்
பொருளாதாரத்தில் வாழ்க்கை நடத்தும் கூட்டம் ஒன்று
படிக்கும் மாணவரின் எதிர்காலத்தைச் சிதைத்து போதை மருந்தை
பணமாய் மாற்றும் நயவஞ்சகரின் கூட்டமொன்று
காதல் பேசி கலர் கலராய் கனவுகள் காட்டி பின்னர்
கசக்கி எறிந்து விட்டு கைவீசி நடக்கும் இதயமற்றோர் கூட்டம் ஒன்று
இதுதான் எமது நாகரீக உலகமென்றால் எனக்கு
இனியும் ஒரு பிறப்பு உண்டென்றால் இறைவா
மனிதனாய் பிறக்கும் வரம் மட்டும் வேண்டாம் என்றும்
மனதினில் நன்றியைச் சுமக்கும் நாயாய் என்னைப் படைத்து விடு

இந்தக் கவிதையை இணைய இதழான திண்ணையில் அச்சு வடிவத்தில் பார்த்ததும் எனது கண்கள் பனித்தன. மனம் பூரிப்பால் துள்ளியது. திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தேன்.  இதயவீணையில் ஆயிரம் ஆனந்த ராகங்கள் அலைபாய்ந்தன.

கட்டுரை வடிவில் எனது முதலாவது படைப்பு வெளிவந்தது "தமிழோவியம்" இதழிலேயேயாகும். நான் வாழ்க்கையில் சந்தித்த ஒரு வயதான மனிதரைப் பற்றிய ஒரு கட்டுரை. முதன் முதலில் திண்னையில் எனது கவிதையைக் கண்டது எந்தவகையான ஆனந்தத்தை அடைந்தேனோ, அதே வகையான ஆனந்தம் எனது  முதலாவது கட்டுரையைத் தமிழோவியத்தில் கண்டதும் மனதை ஆக்கிரமித்தது. இதயத்தில் தூங்காமல் உறுத்திக் கொண்டிருந்த ஆசை, தாகம் உயிர் வடிவம் கொண்டு எழுந்து என் கைகளில் தவழ்ந்த அந்த நாளை நான் எப்போதுமே மறக்க மாட்டேன். ஆமாம் "தமிழ்ப்பூங்கா" என்னும் சிற்றிதழ் எண்ணத்தில் கருக்கொண்டு, கணணிப் பிரதியாக முதன் முதலில் வெளிவந்து நண்பர்கள் மத்தியில் தவழ்ந்து நான்கு வருடங்களுக்கு மேலாகிறது.

கன்ணிப்பிரதியாக வெளிவந்த அந்த முதலாவது பிரதி என் கைகளில் தவழ்ந்த நாள், எனது மைந்தன் தாயின் கருவறையிலிருந்து வெளியே வந்து என் கைகளி தவழ்ந்தபோது கொடுத்த அந்த இன்பச் சிலிர்ப்பை, இனிய அனுபவத்தை எனக்குக் கொடுத்தது.

அன்ரு எனது மனதின் இலட்ச்சிய தகாமகா இருந்த அந்த இலவச பிரதி , இன்ரும் இரண்டு மாதங்களுக்கொருமுறை மின்னஞ்சல் இலவசப் பிரதியாக இணையத்தின் வழியாகத் தவழுவது என்னெஞ்சத்தில் வற்றாத நதி தவழும் உணர்ச்சியைத் தூண்டுகிறது. என் எழுத்து வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த மற்றொரு இணைய இதழ் நிலாச்சாரலும், அதன் ஆசிரியர் நிலாவும் மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கிறார்கள். நிலாச்சாரலில் வந்த எனது பேட்டிகளின் தொடர், மற்றும் கண்ணதாசன் எனும் காவியம், குறள் தரும் கதை என்னும் தொடர்கள் எனக்கு வாசகர்கள் மத்தியில் பல பாராட்டுதல்களை பெற்றுத் தந்திருக்கின்றன.

தாம் எத்தனையோ பெரிய பிரபல்யத்தை அடைந்திருந்தாலும் எழுதும் அனௌத்துக்கும் ஊக்கம் கொடுத்து ஆதரவு நல்கும் கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் வாலி, கவிஞர் புகாரி, எழுத்தாளர் வெங்கடேஷ், ஊடகவியலாளர் மாலன், கவிஞர் புகாரி, நண்பர் ரவி தமிழ்வாணன், நண்பர் லேனா தமிழ்வாணன், ஈழத்து ஊடகவியலாளர் அப்துல் ஹமீது என எனது வளர்ச்சிக்குக் காரணமாயிருந்தவர்கள் அனைவரையும் ,இகவும் நன்றியுணர்வுடன் எண்ணிப்பார்க்கிறேன். இதைத் தவிர இன்னும் எத்தனையோ இணைய இதழாளர்கள் எனது படைப்பை தமது இணைய இதழ்களில் பிரசுரித்து வளர்ச்சிக்கு உறுதுணை புரிகிறார்கள்.

நான் எழுதும் அனைத்தையும் படித்து, எனக்கு மின்னஞ்சல் மூலம் பாராட்டு அளித்து ஊக்கமளிக்கும் அன்பு வாசகர்கள் பலர். அவர்களை எண்னும்போது என்னெஞ்சம் மிகவும் பூரிப்படைகிறது. இவையனைத்துக்கும் மேலாக என் வாழ்க்கையில்  அன்பு மனைவியாக, அருமை நண்பியாக சோ¡ர்வடையும் வேளைகளில் ஊக்கமளித்து, தட்டிக்கொடுத்து படைப்புக்களை ஊக்குவிக்கும் என் மனைவி மைதிலி எனது எழுத்து உலகத்தின் ஆணிவேர். எழுத்து என்பது ஓர் ஆழி, அதன் ஒரு கரையில் ஓரமாய்ச் சொட்டும் ஒரு துளிதான் நான். இந்த உடலில் உயிர் ஒட்டியிருக்கும் நாள்வரை ஏதாவது ஒரு மூலையில் அந்த ஆழியில் கலக்கும் ஒரு துளியாக நான் சொட்டிக் கொண்டிருப்பேன் என்ற நினைப்பு ஒன்றுதான் எனது மனதுக்கு இதமளிக்கும் நினைவு.

தமிழைப் பாடுவேன் ! தமிழைப் பாடுபவர்களைப் பாடுவேன் !

Copyright © 2005 Tamiloviam.com - Authors