தமிழோவியம்
தராசு : புஷ் வருகையும் இந்தியாவின் நிலைப்பாடும்
- மீனா

bushமார்ச் 1 ஆம் தேதி இந்தியா வருகை தரும் அமெரிக்க அதிபர் புஷ்ஷின் வருகையால் அணுசக்தி தொடர்பான பல விஷயங்கள் குறித்த இந்தியாவின் நிலைப்பாடுகளில் எவ்வித மாறுதல்கள் ஏற்படப்போகின்றன என்பதை இடதுசாரிக்கட்சிகள் மட்டுமல்லாமல் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அணுசக்தி தொடர்பான திட்டங்களில் இந்தியா அவசரப்பட்டு எவ்விதமான ஒப்பந்தங்களிலும் கையெழுத்து போட்டுவிடக்கூடாது என்பதில் இந்திய விஞ்ஞானிகளும் பல அரசியல் கட்சிகளும் மத்திய அரசை நிர்பந்தித்து வருகிறார்கள்.

"அமெரிக்காவிடம் இந்தியாவின் நலனையும் சுயமரியாதையையும் காங்கிரஸ் அரசு அடகு வைத்துவிட்டது" என்று குற்றம் கூறியிருக்கும் இடதுசாரிக்கட்சிகள் அணுசக்தி துறையில் நம்நாடு முன்னேறுவதை அமெரிக்கா தடுக்கப்பார்க்கிறது என்றும் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு ஒவ்வொரு நாளும் இந்தியா மீது புதிய நிர்பந்தங்களை விதிக்கத்தொடங்கிவிட்டது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

ஒரு காலத்தில் இந்தியாவை ஒரு விரோதி நாடாகவே பார்த்துவந்த அமெரிக்காவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டு இந்திய அமெரிக்க உறவுகள் பல மடங்கு நெருக்கமாகி சீரடைந்து வரும் இந்நிலையில் அமெரிக்காவின் எந்தவிதமான ஒரு நிர்பந்தத்திற்கும் இந்தியா பணிந்துவிடக்கூடாது. காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்காவின் தலையீட்டை எதிர்த்து எப்படி நம் நாடு தனது நிலையில் உறுதியாக இருந்ததோ அதைப் போலவே அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்களிலும் இந்தியா தனது நிலையை உறுதிப்படுத்தவேண்டும். கூட்டணிக்கட்சிகளைத் திருப்திபடுத்த மட்டுமல்லாமல் அணுசக்தி, வெளியுறவுத் துறை கொள்கைகள் விஷயத்தில் நம் நாட்டின் நிலையை மேலை நாடுகளுக்குத் தெளிவாக தெரியப்படுத்த கிடைத்த நல்லதொரு சந்தர்ப்பமாக இந்தியா இதைக் கருத வேண்டும்.

அமெரிக்கா சொல்லும் ஒவ்வொரு கருத்திற்கும் ஜால்ரா தட்டிப் பிழைக்க வேண்டிய நிலையில் நாம் இல்லை - நமக்கென்று பல சொந்த கருத்துகள் உள்ளன அவற்றைச் சொல்ல நாம் எந்த நேரத்திலும் தயங்க மாட்டோம் என்பதை அமெரிக்க அதிபருக்கு நம் பிரதமர் புரியவைப்பாரா?

Copyright © 2005 Tamiloviam.com - Authors