தமிழோவியம்
உடல் நலம் பேணுவோம் : வைட்டமின் D - தொடர்ச்சி
- பத்மா அர்விந்த்

அமெரிக்காவில் மட்டும் 25மில்லியனுக்கும் அதிகமானோருக்கு ஆஸ்டியோ போரோசிஸ் என்னும் நோய் இருப்பதாக தெரிகிறது. இந்த நோய் எலும்புகளை மிகவும் உடையக்கூடியதன்மை உள்ளதாக மாற்றிவிடும். பெரும்பாலான சமயம் இந்த நோய்க்கு காரணம் கால்ஸியம் சரியாக உறிஞ்சப்படாததே ஆகும்.

வைட்டமின் D குறைவாக இருந்தால் கால்ஸியம் உறிஞ்சுதல் தடுக்கப்படுவதால் இந்த நோய் வரக்கூடிய சாத்தியங்கள் அதிகம். மாதவிலக்கு நின்றுபோன பெண்களுக்கு இது அதிகம் பாதிக்கிறது.

சாதாரணமாக மனிதனின் உடலில் எலும்புகள் தேய்வதும் மீண்டும் அவை வடிவமைக்கப்படுவதும் தொடர்ந்து நடக்கிறது. ஆனால் மாதவிலக்கு நின்று போன பெண்களுக்கு மீண்டும் எலும்புகள் வடிவமைக்கப்படுவது குறைகிறது.மருத்துவர்கள் ஈஸ்ட்ரொஜென் ஹார்மோனை தருவதன் மூலம் ஆஸ்டியோபோரோஸிஸ் ஐ தடுக்க முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இத்தகைய ஹார்மோன்கள் மாதவிலக்கு நிற்பதால் வரும் ஹார்மோன் குறைபாட்டை தடுக்க முடிகிறதே தவிர ஆஸ்டியோபோரோஸிஸை தடுப்பதில்லை. சமீப காலங்களில் வைட்டமின் D தருவது பயனளிக்கும்  எ  ன்று கருதப்படுகிறது.

அமெரிக்காவில் வயது முதிர்ந்த பெண்களில் பலருக்கு இடுப்பு எலும்புகள் உடைய வைட்டமின் D குறைபாடு காரணம் என்று அறியப்பட்டிருக்கிறது. ஒருநாளைக்கு 20 ug கொடுத்தால்கூட இந்த எலும்பு முறிவுகள் குறைவது இதற்கு எடுத்துக்காட்டு. டிகாலியோஸ் என்பவர் செய்த ஆராய்ச்சியில் வயது முதிர்ந்த பெண்களுக்கு கால்சியமும் வைட்டமின் D யும் கொடுத்து வந்ததில், இத்தகைய எலும்பு முறிவுகள் தடுக்க பட்டிருப்பதாக அறிகிறோம்.

வைட்டமின் D யும் புற்றுநோயும்:  நோய் பரவுவதை பற்றி படிக்கும் துறையில் நடந்த ஆராய்ச்சிகள் கால்சியம் மற்றும் வைட்டமின் D தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் குறைவதாக கூறுகிறது. அதிக வைட்டமின் D யும் குறைந்த புற்றுநோய் வரக்கூடிய சாத்தியங்களும் குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியில் தெளிவாக தெரிகிறது. 1994 முதல் 97 வரை குடல் பற்றிய பரிசோதனைக்குள்ளான 3000 ஆண்களில் வைட்டமின் D கொடுத்து பார்த்தால் அவர்களின் புற்றுநோய் வரக்கூடிய சாத்தியங்கள் குறைய ஆரம்பித்தன என்பது பிரசுரிக்கப்பட்டு பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு உண்மையாகும். ஆனால் அதிலேயே 10% ஆண்களுக்கு ஏற்கெனவே குடலில் புற்றுநோய் உள்ள பாலிப்புகள் எனப்படும் கட்டி இருந்தவர்களுக்கு இந்த வைட்டமின் D ஆல் எந்த வித பலனும் இல்லை. இது புற்றுநோய் இன்னும் விரைவில் வர காரணமாகிவிட்டது. எனவே வைட்டமின் D யின் புற்றுநோய் குறைப்புத்தன்மை இன்னமும் அதிக அளவில் ஆராய வேண்டிய நிலையிலேயே இருக்கிறது.

வைட்டமின் D யும் ஸ்டீராய்டும்:  உடலில் வீக்கம் ஏற்பட்டால், அல்லது சில விளையாட்டு வீரர்கள் ஸ்டீராய்ட் எடுத்துக்கொள்கிறார்கள். இந்த ஸ்டீராய்ட் கால்சியம் உறிஞ்சுதலை தடுப்பதால் சில காலத்துக்குள் இவர்களுக்கு எலும்பு சேதம் ஏற்படுகிறது. இதை தடுக்க ஒருநாளைக்குத்தேவையான வைட்டமின் D அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் பலன் கிடைக்கிறது.

வைட்டமின் D யும் அல்ஷைமர் நோயும்: வயதானவர்கள் நினைவுத்திறன் குறைந்தவர்கள் பொதுவாகவே அதிகம் வெளியே செல்வதில்லை. இதனால் சூரிய ஒளி கிடைக்காமல் இயற்கையாக இவர்கள் உடலில் தயாரிக்கப்படும் வைட்டமின் D குறைவு. இதற்கும் மேலாக கால்சியம் உறிஞ்சும் திறனும் குறைவதால் அதிக எலும்பு முறிவுகளுக்கு உள்ளாகிறார்கள்.

வைட்டமின் Dயும் காப்பியில் உள்ள காஃவீனும்: அதிக அளவில் காப்பி அருந்தும்போது காஃவீன் கால்சியம் வைட்டமின் D இவற்றின் உறிஞ்ச தேவையான வாங்கிகளை (receptor) தடை செய்கிறது. இதனால் வைட்டமின் D உறிஞ்சப்படுவதில்லை. ஒரு நாளைக்கு 18 அவுன்ஸ் காப்பி குடிக்கும் பெண் எலும்புகளில் காப்பி குறைவாக அருந்தும் பெண்ணின் எலும்புகளில் உள்ள கால்சியத்தைவிட குறைவாக இருக்கிறது. இதைத் தடுக்க அதிக கால்சியம் உட்கொள்ள வேண்டும். இது வைட்டமின் D ஐ அதிகரித்து எலும்பு முறிவை தடுக்கும்.

அதிக அளவு வைட்டமின் D உட்கொள்வதால் என்ன தீங்கு விளையும்? வைட்டமின் D நச்சாகும் போது பசியின்மை, மலச்சிக்கல், வாந்தி எடுத்தல், உடலில் பரவலாக சக்தி இன்மை மற்றும் எடை குறவது ஏற்படும். மேலும் இரத்ததில் கால்சியம் அதிகரிப்பதால் மூளையில் குழப்பமும் ஏற்படும்.

கால்சியம் சிறுநீரகங்களில் கடினமான படிந்து கற்கள் ஏறபடவும் வாய்ப்பு உண்டு.

இத்தகைய நச்சுத்தன்மை சாதாரணமாக சூரிய ஒளியாலோ உணவில் உட்கொள்கின்றபோதோ ஏற்படுவதில்லை. அதிக வைட்டமின் மாத்திரைகளை மருத்துவரை கல ந்தாலோசிக்காமல் உட்கொள்வதாலேயே ஏற்படுகிறது.

எதுதான் உடலால் தாக்குப்பிடிக்க கூடியதும் நன்மையை தரத்தக்கதாகவும் என்று உணவு துறை தீர்மானித்திருக்கிறது. சரியான சரிவிகித உணவை உண்ண கீழ்க்காணும் இணைய தளங்களுக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள்:

http://www.health.gov/dietaryguidelines

http://www.usda.gov/cnpp/pyramid2.htm

Copyright © 2005 Tamiloviam.com - Authors