தமிழோவியம்
முத்தொள்ளாயிரம் : தொந்தரவு செய்யாதே, போ !
- என். சொக்கன்

பாடல் 87

பாண்டியனின் காதலிகளில் ஒருத்தி, தன்னுடைய கண்ணின்மீது குற்றப் பத்திரிகை வாசிக்கிறாள் !

அப்படி என்னதான் தவறு செய்துவிட்டது அந்தக் கண் ?

காலம்காலமாய்ச் செய்கிற அதே தவறுதான் - 'யான் நோக்குங்காலை நிலநோக்கும்', என்று வள்ளுவரும், 'உன்னை நான் பார்க்கும்போது, மண்ணை நீ பார்க்கின்றாயே !', என்று கண்ணதாசன் பாடிய அதே தவறுதான் !

'இரவில், நான் நன்றாகத் தூங்கிக்கொண்டிருக்கையில், கனவு வரும் ! அதில் என் காதலன் பாண்டியன் வருவான் ! அப்போது, என்னுடைய கண்கள் அவனை நேருக்கு நேராகப் பார்க்கும் ! காதல் மொழி பேசும் !', என்று பரவசத்துடன் சொல்லி, அந்தக் கனவின் நினைவுகளில் மூழ்கிக் களிக்கிறாள் அவள் !

ஆனால், மறுகணம், அவளுடைய முகத்தில் மெலிதான வெறுப்பும், வருத்தமும் படர்கிறது, 'மறுநாள், பகலில், அதே பாண்டியனை நேரில் பார்க்கும்போது, இந்தக் கண்கள் நாணத்தால் கவிழ்ந்துகொள்கின்றன !' - இதுதான் அவளுடைய குற்றச்சாட்டு !

'அழகிய ஆபரணங்கள் அணிந்த என் தோழி ! என்னுடைய கண்ணே இப்படி எனக்கு எதிராகச் செயல்பட்டால், நான் எப்போது என் காதலனை நேருக்கு நேர் பார்ப்பேன் ? எப்போது அவனுடைய அன்பு எனக்குக் கிடைக்கும் ?'


கனவை நனவுஎன்று எதிர்விழிக்கும்; காணும்,
நனவில் எதிர்விழிக்க நாணும் - புனையிழாய்
என்கண் இவையானால் எவ்வாறோ மாமாறன்
தண்கண் அருள்பெறுமா தான்.

(புனையிழாய் - அணிகலன்களைப் புனைந்த பெண்ணே
தண் கண் - குளிர்ச்சியான கண்
அருள் பெறுமாதான் - அருள் / அன்பைப் பெறுவது எப்படி ?)


பாடல் 88

காலை. இன்னும் தூக்கம் கலையாமல் கண்மூடியிருக்கிறாள் அந்தப் பெண், 'பொழுது விடிஞ்சாச்சு ! என்னடி இன்னும் தூக்கம் ?', என்று அதட்டியபடி, அவளுடைய தாய் அவளை உலுக்குகிறாள் !

ஆனால், அந்தப் பெண் அதற்கும் கண் திறக்கவில்லை, போதாக்குறைக்கு, தன்னுடைய கைகளால், கண்களை இறுக மூடிக்கொள்கிறாள் !

'என்னாச்சுடீ உனக்கு ? கண்ணைத் திற !', என்று அவளை மீண்டும் உசுப்புகிறாள் அம்மா. அதிஅதிகாலையிலேயே எழுந்து, குளித்து, மொட்டுகள் விரியும் மலர்களைச் சூடியிருக்கிறாள் அந்தத் தாய் - ஆனால், அவளுடைய மகள் இன்னும் துயிலெழவே இல்லை !

'அம்மா, தயவுசெய்து என்னைத் தொந்தரவு செய்யாதே ! நீ என்னைக் கொன்றுபோட்டாலும், நான் என் கண்களைத் திறக்கமாட்டேன் !', என்று உறுதியான குரலில் சொல்கிறாள் அவள்.

'ஏன் ? என்னாச்சு ? ஏன் கண்ணைத் திறக்கமாட்டாய் நீ ?', பதட்டத்துடன் கேட்கிறாள் அம்மா.

'அம்மா, சில நாள்களுக்குமுன்னால் என் வளையல்களைத் திருடிக்கொண்டுபோனானே ஒரு திருடன், அவனை நேற்று இரவு கண்டுபிடித்துவிட்டேன் !', என்கிறாள் அவள்.

'ஐயோ, யார் அந்தத் திருடன் ?', அம்மாவின் குரலில் நடுக்கம் சேர்கிறது !

'வீரம் மிகுந்த அரசன், வாள் ஏந்திய அந்தப் பாண்டிய மன்னன்தான் அம்மா என் வளையல்களைத் திருடியவன் !', என்கிறாள் மகள், 'முன்பு திருடிச் சென்றதெல்லாம் போதாததுபோல், மேலும் வளையல்களைத் திருடுவதற்காக, அவனுடைய பெரிய பட்டத்து யானையுடன் நேற்று இரவு என் கண்களுக்குள் புகுந்தான் ! உடனே, நான் சட்டென்று இமைகளை மூடி, அவனைச் சிறைப்படுத்திவிட்டேன் ! அதுவும் போதாது என்று, கைகளால் கண்களை நன்றாக மூடிக்கொண்டுவிட்டேன் !'

- இப்படிச் சொல்லிவிட்டு, அந்தப் பெண் சிறு புன்னகை செய்கிறாள், 'இப்போது நான் கையைத் திறந்தால், அவன் தப்பித்து ஓடிவிடுவான், ஆகவே நீ என்னைத் தொந்தரவு செய்யாதே, போ !'

தளைஅவிழும் பூங்கோதைத் தாயரே ஆவி
களையினும்என் கைதிறந்து காட்டேன் வளைகொடுபோம்
வன்கண்ணன் வாள்மாறன் மால்யானை தன்னுடன் வந்து
என்கண் புகுந்தான் இரா.

(தளைஅவிழ்தல் - மொட்டுகள் மலர்தல்
தாயர் - தாயார்
வளை கொடுபோம் - வளையல்களைக் கொண்டு சென்ற
வன்கண்ணன் - வீரன்
இரா - இரவு)

Copyright © 2005 Tamiloviam.com - Authors