தமிழோவியம்
பங்குச்சந்தை ஒரு பார்வை : அடுத்து பாய்ச்சலா ? பாதாளமா ?
- சசிகுமார்

 

அடுத்தப் பாய்ச்சலுக்காகச் சந்தை தயாராகிறதா, இருக்கும் நிலையில் இருந்து மேலும் சரியப் போகிறதா ?

இதேக் கேள்வி தான் அனைவரது மனதிலும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. பட்ஜெட் பற்றிய எச்சரிக்கை அளவுக்கு அதிகமாகவே சந்தையில் காணப்படுகிறது. குறியீடு ஏறுவதும், இறங்குவதும் என தள்ளாட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சிலத் துறைகளில் பட்ஜெட்டை ஒட்டிய எதிர்பார்ப்பினால் ஏற்றம் இருந்தாலும் மொத்தச் சந்தையின் வர்த்தகமும் மந்தமாகத் தான் இருந்தது.

இந்த வாரத் (பிப்ரவரி 21 - பிப்ரவரி 25) துவக்கமே சரிவுடன் தான் துவங்கியது. திங்களன்று BSE 49.64 புள்ளிகளும், NSE, Nifty 12 புள்ளிகளும் சரிவுற்றது. கடந்த வார வர்த்தகத்தில் (பிப்ரவரி 14 - பிப்ரவரி 18) கடைசி மூன்று தினங்கள் சந்தை சரிவுடனே இருந்தது. திங்களன்றும் சந்தை சரிய தொடர்ச்சியாக நான்கு தினங்கள் சந்தைக்கு சரிவு
முகம் தான்.

முதலீட்டாளர்கள் பட்ஜெட்டிற்கு முன்பு தங்களுடைய முதலீடுகளை விற்று விடவே ஆர்வம் காட்டினர். பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பட்ஜெட்டாகவே இருக்கும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருந்தாலும் பலப் பங்குகள் உச்சக்கட்ட விலையில் (52 week High) இருப்பதால் பட்ஜெட்டிற்குப் பிறகு இந்தப் பங்குகள் எந்தத் திசையில் செல்லும் என்ற நிச்சயமற்ற சூழ்நிலையில், பங்குகளை விற்று விடுவதிலேயே ஆர்வம் இருந்தது.

ஆனால் செவ்வாயன்று குறியீடு ஏற்றம் கண்டது. BSE 54.73 புள்ளிகளும், NSE 15.20 புள்ளிகளும் எகிறியது. தொடர்ந்து நான்கு நாட்களாகச் சந்தை சரிவடைந்ததால் பங்குகளை குறைந்த விலைக்கு வாங்குவதில் இருந்த ஆர்வமே இந்த உயர்வுக்கு காரணம். புதனன்று தள்ளட்டத்துடன் இருந்தச் சந்தை இறுதியில் 6 புள்ளிகள் சரிந்தது. வியாழனன்றும், வெள்ளியன்றும் இதே கதை தான். குறியீடு தள்ளாடி விட்டு வியாழனன்று 8 புள்ளிகள் சரிவுடனும், வெள்ளியன்று 4 புள்ளிகள் சரிவுடனும் வர்த்தகம் நிறைவுற்றது.

சந்தையின் உயர்வும் தாழ்வும் காளைக்கும் கரடிக்கும் இடையே நடக்கும் சண்டை என்றுச் சொல்வார்கள். அந்தச் சண்டை கொஞ்சம் ஆக்ரோஷமாகவே நடந்து கொண்டிருக்கிறது. குறியீடு உயர்வுடன் தொடங்கும், பின் பங்குகளை முதலீட்டாளர்கள் விற்கத் தொடங்க சந்தைச் சரியும். அதேப் போல குறியீடு சரிந்ததும் பங்குகளை குறைந்த விலைக்கு வாங்க முதலீட்டாளர்கள் முனையும் பொழுது குறியீடு மறுபடியும் எகிறும். காளைகளும், கரடிகளும் மாறி மாறி ஆளுமைச் செலுத்தினாலும் இறுதியில் சந்தையின் வர்த்தகம் பெரும்பாலும்
பெரிய சரிவு இல்லாமலே முடிவடைந்தது.

சந்தை இவ்வாறு தள்ளாட்டத்துடன் இருந்தாலும் கடந்த மாதத்துடன் ஒப்பிடும் பொழுது இம் மாதம் குறியீடு உயர்வுடன் தான் காணப்பட்டது. இம் மாதம் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சந்தையில் சுமார் 1 பில்லியன் டாலருக்கு முதலீடு செய்தனர். கடந்த மாதம் அமெரிக்க வட்டி விகிதம் உயரக்கூடும் என்ற அச்சத்தில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை விலக்கிக் கொள்ள, குறியீடு சுமார் 500 புள்ளிகள் சரிந்தது. கடந்த மாதம் 280 மில்லியன் டாலர் அளவுக்குச் செய்யப்பட்ட முதலீடு இம்
மாதம் அதிகரிக்கத் தொடங்கி குறியீடு கடந்த மாதம் இழந்தவற்றை மீட்டுக் கொண்டது. பொருளாதாரச் சீர்திருத்தத்தை நோக்கியப் பட்ஜெட்டாக திங்களன்று (பிப்ரவரி 28) தாக்கல் செய்ய்யப்படும் பட்ஜெட் இருக்கும் என்ற எதிர்பார்ப்பே இதற்கு முக்கிய காரணம். ஆனாலும் வரலாறு காணாத உயர் நிலையில் சந்தை தள்ளாடிக் கொண்டிருப்பதாலும், பட்ஜெட்டில் சிறு பாதகம் இருந்தால் கூட குறியீடு கடுமையாகச் சரியும் வாய்ப்புகள் இருக்கும் என்பதாலும்  சந்தையில் எச்சரிக்கை உணர்வு காணப்பட்டது.

இந்த வாரச் சந்தை நிலவரம்

மும்பை பங்குச்சந்தை குறியீடு - BSE

இந்த வாரச் சந்தை ஆரம்பம் = 6,584.32
இந்த வாரச் சந்தை முடிவு = 6,569.72 

தேசியப் பங்குச்சந்தை குறியீடு - NSE Nifty

இந்த வாரச் சந்தை ஆரம்பம் = 2,055.55 
இந்த வாரச் சந்தை முடிவு = 2,060.90

சரிவு/உயர்வு நிலை

மும்பை பங்குச்சந்தை குறியீடு(BSE) = -14.6
தேசியப் பங்குச்சந்தை குறியீடு(NSE) = -5.35

இந்த வாரம் செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீடு நிறுவனங்களின் முதலீடு

தேதி முதலீடு விற்பனை மொத்த முதலீடு
21 Feb 05 843.30 591.30 252.00
22 Feb 05 586.40 375.60 210.80
23 Feb 05 670.30 413.30 257.00
24 Feb 05 797.70 500.00 297.70
25 Feb 05 2257.80 2216.30 41.50
Data Source - Asian CERC IT Ltd.

இந்த வாரம் உயர்வடைந்தப் பங்குகளில் குறிப்பிட்டத்தக்கவை கட்டுமான நிறுவனங்களின் (Construction) பங்குகள். கட்டுமானத் துறையில் 100% வெளிநாட்டு நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவை அரசு அறிவித்துள்ளது. இதனால் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையைச் சார்ந்தப் பங்குகளான Madhucon Projects (3%), Gammon India (4%), Mahindra Gesco (3%), IVRCL (5%), Hindustan Construction (1%) போன்றப் பங்குகள் உயர்வடைந்தன.

இது தவிர இந்த வாரம் உயர்ந்தப் பங்குகளில் L&T, டாபர், GAIL, ONGC, சென்னை பெட்ரோலியம், பார்தி, ஸ்டேட் பாங்க் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஜவுளி நிறுவனப் பங்குகளான பாம்பே டையிங், அரவிந்த் மில்ஸ், ரேமாண்ட் போன்றவையும் உயர்வடைந்தன. இந்தப் பங்குகளின் உயர்வுக்கு காரணம் பட்ஜெட் பற்றிய எதிர்பார்ப்பு தான். பெட்ரோலியத்திற்கு அரசு தரும் மானிய விலையைக் குறைக்கும் நடவடிக்கைகள் வரும் பட்ஜெட்டில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் எண்ணெய் நிறுவனப் பங்குகள் வெள்ளியன்று எகிறின. பட்ஜெட்டில் இந்த எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் இந்தப் பங்குகளுக்கு மேலும் ஏற்றமிருக்கும். ஜவுளித் துறைக்கு ஏற்றம் தரும் நடவடிக்கைகள் இந்தப் பட்ஜெட்டில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஜவுளிப் பங்குகளும் வெள்ளியன்று எகிறியது.

இது தவிர வெள்ளியன்று வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தொலைத்தொடர்பு துறைக்கு நல்ல ஏற்றமிருப்பதாக தெரிவித்த தகவல் பார்தி போன்ற தொலைத்தொடர்பு பங்குகளை எகிறச் செய்தது.

பலத் துறையைச் சார்ந்தப் பங்குகள் லாப விற்பனையால் சரிவுற்றன. எதிர்வரும் இந்திய - பாக்கிஸ்தான் இடையிலேயான கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒலிபரப்பு தொடர்பாக நடந்த நீதிமன்ற வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நேரடி ஒலிபரப்பு உரிமையை பிரசார் பார்தி-தூர்தர்ஷன் நிறுவனத்துக்கு வழங்கியதால், ஜீ  தொலைக்காட்சிப் பங்குகள் சரிவடைந்தன.

விமானப் போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் பங்குகள் வெளியீடு, IPO அளவை விட 18 மடங்கு அதிகமானப் பங்குகளுக்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளது. இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சியால் விமானப் போக்குவரத்து தற்போதைய நிலையில் இருந்து பல மடங்கு அதிகமாக வளரும் வாய்ப்புகள் இருக்கிறது. இது தவிர இத் துறையில் பங்குகளை வெளியிடும் முதல் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் தான். அதனால் இந்தப் பங்குகள் பங்குச்சந்தையில் லிஸ்ட் செய்யப்படும் பொழுது வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தப் பங்குகளில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டக்கூடும். இதனால் அதிக விலையில் இருந்தாலும் முதலீட்டாளர்கள் விண்ணப்பங்களை குவித்து விட்டனர். இந்த
IPOவில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

வெள்ளியன்று வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை பட்ஜெட் எப்படியிருக்கும் என்பதை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியது. நிதிப் பற்றாக்குறையை குறைக்கும் விதத்தில் அரசின் வருவாயை பெருக்க வரி விதிப்பில் பல மாற்றங்களைச் செய்வது, வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையைக் அதிகரிப்பது, அரசு பெட்ரோலியம் உட்பட பல பொருட்களுக்கு
வழங்கும் மானியங்களை படிப்படியாகக் குறைப்பது, பலத் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை பெருக்கும் வழிகளை ஏற்படுத்துவது, உள்கட்டுமானம், ஆரம்பக் கல்வி, சுகாதாரம் போன்றவற்றின் ஏற்றத்துக்கு வழிகளை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுக்க பொருளாதார ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது. பட்ஜெட்டும் இந்த ஆய்வறிக்கையை ஒட்டியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார ஆய்வறிக்கையின் சில ஹைலைட்டான அம்சங்கள்

அந்நிய நேரடி முதலீட்டை காப்பீடு (insurance), சுரங்கம் (mining), பொது விற்பனை (retail) போன்ற துறைகளில் அதிகரிப்பது. இது ஆளும் கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தும். ஏற்கனவே இந்த வாரம் இடதுசாரிகள், பிரதமர், நிதியமைச்சர், சோனியா காந்தி இடையே பொருளாதாரச் சீர்திருத்தங்களை ஒட்டிய அவசரக் கூட்டம் நடந்தது. அரசு பலத் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பது பற்றிய தங்கள் கவலையை இடதுசாரிகள் வெளிப்படுத்தினர். அந்நிய நேரடி முதலீட்டுக்கு தாங்கள் எதிரி அல்ல ஆனால் நாட்டின் பாதுகாப்பு,
இங்கிருக்கும் தொழில்கள் நசுங்கிப் போகும் அபாயம் போன்றவையே தங்களை கவலைப்படுத்துவதாகவும் இடதுசாரிகள் தெரிவித்திருந்தனர். Retail துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தும். இத் துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிக்கும் முடிவு அமெரிக்காவின் பெரிய நிறுவனங்களான GAP, JC Penny, Wal Mart போன்ற நிறுவனங்களை இந்தியச் சந்தைக்கு அழைக்கும் முடிவு. இது தவிர காப்பீட்டில் அந்நிய முதலீடு ஏற்கனவே பல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. சென்ற பட்ஜெட்டில்
அறிவிக்கப்பட்ட இந்த முடிவு இன்னும் நடைமுறைப்படுத்தப்பட வில்லை.

வரும் ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7% மாக இருக்கும் என்று தெரிவித்திருக்கும் ஆய்வறிக்கை, வட்டி விகிதம், பணவீக்கம் போன்றவற்றை குறைந்த அளவில் இருப்பதை வலியுறுத்துகிறது. வட்டி விகிதத்தில் இனி உயர்வு இருக்காது என்றே தெரிகிறது.

விரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, வரிச் செலுத்துபவர்கள் மேல் உள்ள சுமையை அதிகரிக்காமல் குறைவான வரி விகிதம், வரி ஏய்ப்பவர்களை
கடுமையாக தண்டிப்பது, பரவலான மானியங்களை குறைத்து தேவைப்படும் ஏழைகளுக்கு மட்டுமே கொடுப்பது போன்றவற்றை ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.

இந்த ஆய்வறிக்கையை ஒட்டி பட்ஜெட் அமையும் பட்சத்தில் அது ஒரு கனவு பட்ஜெட்டாகவே இருக்கும். ஆனால் ப.சிதம்பரம் என்ன செய்துள்ளார் என்பது திங்களன்று தெரிந்து விடும். பட்ஜெட்டின் போக்கிலேயே சந்தையும் பயணிக்கும். இது தவிர ஞாயிறுன்று வெளியிடப்படும் வட மாநில தேர்தல் முடிவுகளும் பங்குச்சந்தையை பாதிக்கக்கூடும்.

சந்தையை கூர்ந்து கவனித்து அதற்கேற்ப உங்கள் முதலீடு பற்றி முடிவெடுங்கள்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors