தமிழோவியம்
ஆன்மீகக் கதைகள் : கோபப்படவும் வேண்டும் !
-

ஸ்ரீராமன் இலங்கைக்குப் போகவேண்டும். எப்படிக் கடலைக் கடந்து போவது..? கடலரசன் வருணனை அழைத்து உரிய ஏற்பாடுகளைச் செய்துதரக் கேட்டுக்கொள்ள எண்ணினார் ஸ்ரீராமன். கடற்கரையில் தர்ப்பையைப் பரப்பி, அன்ன ஆகாரமின்றி மௌனமாக அதில் படுத்து, வருணனைத் தியானித்துத் தவமிருந்தான். அவனது தவத்தை மெச்சி, உரிய நேரம் வந்ததும் வருணன் பிரத்தியட்சம் ஆக வேண்டும். ஆனால், அவன் வரவில்லை.

தனது தவத்தை வருணன் அவமதித்துவிட்டதாகக் கருதிய ஸ்ரீராமனுக்குக் கடும் கோபம் வந்துவிட்டது. கடல் நீரை வற்றச் செய்துவிட நினைத்தான். அதற்குரிய அக்னியாஸ்திரத்தை ஏவிவிட்டான். அடுத்த கணம் கடல் நீர் தளதளவென்று கொதிக்கத் தொடங்கியது. அதனுள் இருந்த உயிரினங்கள் யாவும் சூடு தாங்காமல் தத்தளித்தன. வருணனின் கதியும் அதுவே.

பயந்துபோன அவன் வெளியில் வந்தான். தனது தவற்றை உணர்ந்தான். ஸ்ரீராமனிடம் ஓடோடி வந்தான். "ராமா, சரணம்..மன்னிக்கவேண்டும்" என்று அலறினான்.

ஸ்ரீராமனின் கோபம் தணிந்தது. வருணனுக்கு அபயமளித்தான். அடுத்த கணம் எல்லாம் பழையநிலைக்கு திரும்பின. வருணன் பாலம் கட்ட உரிய ஏற்பாடுகளைச் செய்து உதவினான்.

கோபப்பட வேண்டிய நேரத்தில் ஸ்ரீராமர் கோபப்பட்டதால்தான், வருணன் அவரை மதிக்கத் தொடங்கினான்.

கோபம் கொடியதுதான், எனினும், சமயத்தில் அளவோடு அது தேவைப்படவும் செய்கிறது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors