தமிழோவியம்
கவிதை : என்னை மறந்தேன்
- சத்தி சக்திதாசன்

 

பச்சைப் புல்லின் மேல் யாரது
பளிச்சிடும் இந்த வெள்ளைப் பாயை
பரப்பி விரித்தொரு கோலம் போட்டனர்

இலையுதிர் காலத்தின்
இலச்சினை காட்டி நிர்வாணமாய்
இருந்த மரக்கிளைகள்
இன்றென்ன வெள்ளைப்பூக்களால்
இரைத்து விட்டது போல
இட்டது யார் பனிமணலை ?

ஆகாயம் எனும் அருவியிலிருந்து
அழகாய் வெள்ளைப் பூமழை தூவி
ஆக்கிரமித்துக் கொண்டாள் பூமிதனை
அன்னையவள் இயற்கை இன்றே.

நான் நடக்க
கால் பதிக்க
கை விறைக்க
முகம் சிலிர்க்க
வெள்ளைப் பனிநிலத்தில்
நான் குளிர் புலத்தில்

குழந்தைகள் பனியை
கும்பலாய் அள்ளி
குறிவைத்து எறிந்தனர்
குளிரும் பனிப்பந்தை

கழுத்தைச் சுற்றி கம்பளி
காதை மறைக்கும் தொப்பி
கதகதப்பாய் உடலை அணைக்கும் ஆடை
கால்கள் சறுக்க - நான் கண்ட
காட்சி பனிபடர் காலத்தின்
கண்கொள்ளாக் காட்சி

என்னை நான் மறந்தேன் என்றால்
எப்படிக் கொள்வீர் ஆச்சரியம் ?

Copyright © 2005 Tamiloviam.com - Authors