தமிழோவியம்
திரைவிமர்சனம் : ஐயா
- மீனா

சரத்குமாரின் மற்றொரு டபுள் ஆக்ஷன் படம். கதையும் கிட்டத்தட்ட தெரிந்த கதைதான். ஆனாலும் நடிப்பில் கலக்கியிருக்கிறார் சரத் - திரைக்கதையில் கலக்கியிருக்கிறார் இயக்குனர் ஹரி.

வேறுசாதியைச் சேர்ந்தவர்கள் ஆனாலும் நாலு தலைமுறை நட்பில் இணைபிரியாதவர்கள் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்கள் சரத் - நெப்போலியன். மக்களுக்கு துரோகம் செய்யும் எம்.எல்.ஏ ஓ.ஏ.கே.சுந்தரைக் கொன்றுவிடுகிறார் அப்பா சரத் ஐயாதுரை.  சட்டத்தை தானே கையில் எடுத்ததை எண்ணி மனம் வாடுகிறார். ஆனாலும் அவரது நல்ல மனசு காரணமாக அவரை எம்.எல்.ஏ ஆக்கி அழகு பார்கிறார்கள் அவ்வூர் மக்களும் நெப்போலியனும். ஐயாதுரை மகன் செல்லத்துரை (சரத் 2). தன் தகப்பனைக் கொன்ற ஐயாதுரையை பழிவாங்க சிறு வயது முதல் துடித்துக்கொண்டிருக்கிறார் ஓ.ஏ.கே.சுந்தரின் மகன் பிரகாஷ்ராஜ்.

மாளவிகாவுடனான தனது திருமணம் தடைபட்டதால் கல்யாணம் என்ற பேச்சையே எடுக்காமல் வாழும் செல்லத்துரையை விரும்புகிறார் நெப்போலியனின் மகளான நயனதார. முதலில் மகளின் காதலை மறுக்கும் நெப்பொலியன், பிறகு மனைவியின் பேச்சால் மனம் மாறி திருமணத்திற்கு சம்மதிக்கிறார். தாலிகட்டப்போகும் நேரத்தில் பிரகாஷ்ராஜின் நயவஞ்சகத்தால் திருமணம் தடைபடுகிறது. உண்மையை உணராத நெப்போலியன் அப்பா சரத்தால்தான் கல்யாணம் தடைபட்டதாக எண்ணி - ஆவேசத்தில் பொறுமுகிறார். 4 தலைமுறை நட்பு பிளவுபடுகிறது.  30 ஆண்டுகளுக்கு முன்பு ஐயாதுரை செய்த கொலையை காரணம் காட்டி அவரை ஜெயிலில் தள்ளுகிறார்கள் நெப்போலியனும் பிரகாஷ்ராஜும்.

இந்த நிலையில் மகன் சரத்தின் நடவடிக்கைகளால் மனம் மாறுகிறார்கள் பிரகாஷ்ராஜும் நெப்போலியனும். பிரிந்த நெஞ்சங்கள் மீண்டும் எப்படி ஒன்று சேர்ந்தன என்பதை மீதிக் கதையில் அழகாக காட்டியுள்ளார் இயக்குனர் ஹரி.

இரண்டு ரோல் செய்யும் சில நடிகர்கள் மேக்கப்பில் மட்டும் ஆறுவித்தியாசம் காட்ட முயற்சிக்கும் வேளையில் மேக்கப் மட்டுமல்லாமல் நடிப்பிலும் கணிசமான அளவிற்கு வித்தியாசம் காட்டியுள்ளார் சரத். அப்பாவாக பொறுமை, அமைதி காக்கும் சரத் மகனாக பொங்கியெழுகிறார். முதலில் நயனதாராவை சின்னப்பெண்ணாக எண்ணி அவரது காதலை மறுக்கும் நேரத்திலும், பிறகு "கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னைத்தான் பண்ணிப்பேன்" என்று உருகும் போது நடிப்பில் சபாஷ் வாங்குகிறார். மனகே சூப்பர் என்றால் அப்பா சூப்பரோ சூப்பர்.. மக்கள் நலனுக்காக தான் செய்த ஒரே ஒரு குற்றத்தை எண்ணி எண்ணி உருகும் காட்சியிலும்,  பிரகாஷ்ராஜ் செய்த சதியால் தன் மகன் அடிபட்டு கிடப்பதைப் பார்த்து ஆவேசமாக அருவாளைத் தூக்கிக்கொண்டு கிளம்பும் காட்சியிலும் தூள்கிளப்புகிறார்.

சரத்தின் நண்பராக வரும் நெப்போலியன் தன் பாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார். சரத்தின் மீது அன்பு செலுத்தும்போதும் ஆத்திரப்படும்போதும் ஓவர் ஆக்ஷன் செய்யாமல் தேவையானதை மட்டும் செய்ததற்காகவே அவருக்கு ஒரு சபாஷ்.

அப்பா சரத்தின் மனைவியாக லட்சுமி. தனக்கே உண்டான அமைதியான ஆனால் தேவைப்படும் சமயத்தில் பொங்கும் பாத்திரம். நெப்போலியனின் மனைவியாக ரோகினி. தன் கணவன் செய்யும் தவறுகளை தைரியமாகத் தட்டிக் கேட்கிறார். கதாநாயகி நயனதாரா - வயசு வித்தியாசம் பார்க்காமல் சரத்தைக் காதலிக்கிறார். அவர் மனைவியாக ஏங்குகிறார். தோற்ற அழகைத் தவிர நடிப்பும் கொஞ்சம் வருகிறது. முயற்சி செய்தால் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை நிச்சயம் பிடிக்கலாம்.

தியேட்டர் ஓனராக வரும் வடிவேலு காமெடியில் கலக்கியிருக்கிறார். பாட்ஷா - அருணாசலா பட கிளைமாக்ஸ் காட்சிகளை மாற்றி நிலைமையை சமாளிக்கும் இவரது சமயோஜிதம் அருமை.

அப்பாவைக் கொன்ற சரத்தைப் பழிவாங்க அலையும் வில்லனாக அருமையாக படம் முழுவதும் வலம் வரும் பிரகாஷ்ராஜ் கடைசியில் மகன் சரத்தின் ஒரு செயலால் உடனே மனம் மாறுவதைப் போலக் காட்டுவது கொஞ்சம் நெருடுகிறது.

பரத்வாஜின் இசையில் பாடல்கள் ஓக்கே. அதிலும் ஒரு வார்த்தை பாடல் மனதை அள்ளுகிறது. சாதாரண கதை தான் என்றாலும் சிறந்த முறையில் திரைக்கதை அமைப்பதன் மூலம் ஒரு படத்தை வெற்றிப்படமாக்க முடியும் என்பதையும் தான் ஒரு வெற்றி இயக்குனர் என்பதையும்  மீண்டும் நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ஹரி. வாழ்த்துக்கள்!!

Copyright © 2005 Tamiloviam.com - Authors