தமிழோவியம்
திரைவிமர்சனம் : பிரிவோம் சந்திப்போம்
- மீனா

பெரிய கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர் சேரன். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, சித்தப்பா, மாமா, மாமி, குழந்தைகள் என கலகலப்பான களையான குடும்பம். பெற்றோரைத் தவிர வேறு யாருமே உறவு என்று இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர் சிநேகா. கூடப் பிறந்தவர்கள் யாருமில்லை என்று தோழிகளை அழைத்து கூடவே வைத்துக் கொள்ளும் சிநேகாவிற்கு வீடு நிறைய உறவினர்களுடன் வாழ வேண்டும் என்பது கனவு. இந்நிலையில் சேரனுக்கும் சிநேகாவிற்கும் பெற்றவர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

Cheran, Snehaதிருமணம் முடிந்து சேரன் வீட்டுக்கு வரும் சினேகா தன்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் கணவன், தன் குறைகளை எல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் தன்னிடம் உள்ள நிறைகளை மட்டுமே பார்க்கும் உறவினர்கள் என தன் ஆசைகள் எல்லாம் நிறைவேறிய மகிழ்சியில் திளைக்கிறார்.

ஆனால் தன் மனைவியுடன் தன்னால் நினைத்த போது தனியாக இருக்க முடியவில்லை என்று தன் கூட்டுக்குடும்பத்தை நினைத்துக் குமுறுகிறார் சேரன். தனிக்குடித்தனம் போக அவர் நினைக்கும்போது அட்டகட்டிக்கு அவருக்கு வேலை மாறுதல் வருகிறது. சந்தோஷத்தின் திளைக்கிறார் சேரன். ஆனால் திடீரென்று தனிமைக்குத் தள்ளப்படும் சிநேகா மனரீதியாக பாதிக்கப்படுகிறார். மனைவியின் நிலை கண்டு கலங்கும் சேரன் எப்படி சிநேகாவை குணப்படுத்துகிறார் என்பதே மீதிக்கதை.

பெரிய குடும்பத்து பிள்ளையாக வரும் சேரன் தன் இயல்பான நடிப்பால் கவர்கிறார். திருமணத்திற்கு முன்பு சிநேகாவை நினைத்து கனவு காண்பது, சுய நினைவிழந்து போகும் மனைவியின் நிலைகண்டு பதறுவது என தனது இயல்பான நடிப்பால் பல இடங்களில் சேரன் அசத்துகிறார். ஒரு சில இடங்களில் சற்று மிகைப்படுத்தப்பட்ட நடிப்பை தவிர்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அடுத்த வீட்டுப் பெண் போலத் தோன்றும் முகம், கச்சிதமான நடிப்பு, கண்களாலேயே பேசுவது என்று அசத்துகிறார் சிநேகா. முதலில் சேரனின் குடும்பத்தைக் கண்டு ஆனந்தப்படும்போதும் - பிறகு அவர்களை விட்டுப் பிரிய மனமில்லாமல் பிரியும்போதும் - திரும்ப அவர்களோடு சேர்வோமா என்று ஏங்கும் போதும் சிநேகா சபாஷ் போடவைக்கிறார்.

மருத்துவராக வரும் ஜெயராம் தனது இயல்பான நடிப்பால் கவர்கிறார். சுயவைத்தியம் செய்துகொள்ளும் இளவரசுக்கு அவர் கொடுக்கும் பதில் நம்மில் பலருக்கும் பொருந்தும்.

அசட்டுத்தனமாக இல்லாமல் எம்.எஸ். பாஸ்கர், லட்சுமணன் மற்றும் கஞ்சா கருப்புவின் காமெடி அசத்தலாக அமைந்தது பெரிய ஆறுதல். அதிலும் குறிப்பாக கஞ்சா கருப்பு மணமகள் தேவை விளம்பரத்திற்கு சொல்லும் தகவல்கள் சூப்பர்.

எம்.எஸ். பிரபுவின் ஒளிப்பதிவும் ராஜீவனின் கலையும் வித்யாசாகரின் இசையும் படத்திற்கு பெரும் பலம். பாடல்களை விட அவரது பின்னணி இசை அருமை.

ஆனாலும் படத்தின் பிற்பாதியில் சிநேகாவின் தனிமையை குறித்து இயக்குனர் எடுத்திருக்கும் காட்சிகள் படத்தில் சற்று தொய்வை ஏற்படுத்துகின்றன. தனிமையை இத்தனை விரிவாக எடுத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழும்புவதைத் தவிர்க்க இயலவில்லை. விரிவாக எடுக்கப்பட்ட செட்டிநாடு திருமணக் காட்சியும் படத்தின் நீளத்தை அதிகரிக்க மட்டுமே உதவியுள்ளது.

ஆனாலும் படம் நெடுக்க பட்டா கத்தியுடன் அலையும் ரெளடிக்கூட்டம், காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு அர்த்த வசனங்கள், காதைப் பிளக்கும் இசையுடன் கூடிய குத்துப்பாட்டு - இவை எல்லாவற்றையும் தவிர்த்து நல்ல தரமான - குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான ஒரு படத்தைத் தந்ததற்காகவே இயக்குனர் கரு.பழனியப்பனை என்ன பாராட்டினாலும் தகும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors