தமிழோவியம்
கொஞ்சம் கதைக்கலாம் வாங்க : இரண்டு பேர்கள்
- ராமசந்திரன் உஷா

சிலசமயம் வாழ்க்கையில் நாம் பார்க்கும் சிலர் நம்மில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுவிடுவார்கள். அவர்கள் சாதாரணமாய் சொன்னதுக்கூட சிந்தனையைக் கிளறிவிட்டுவிடும். அப்படி நான் சமீபத்தில் பார்த்த இருவர், அதுவும் தொலைக்காட்சியில் பார்த்ததுதான் சில புரிதல்களை ஏற்படுத்தினார்கள்.

கணேசகுமாரிக்கு தாமதமாய் திருமணம். அதாவது முப்பத்தி ஏழு வயதில், திருமணத்தின் பயனாய் ஒருநாள் மட்டும் கணவனுடன் வாழ்ந்துவிட்டு மறுநாள்  நாத்தனார் மூலம் பிரச்சனை உண்டாகி கணவனைப் பிரிந்து தாய் வீடு வந்துவிட்டார். இருவருடங்களுக்கு பின்பு, குழந்தை ஒன்று இருந்தால், வாழ்க்கையில் ஒரு பிடித்தம் இருக்கும் என்று யோசித்திருக்கிறார். அவரின் உடன் பிறந்த சகோதரிக்கும் குழந்தையில்லை.

Dr. Kamala Selvarajதத்து எடுப்பதில் சில சிக்கல்கள், மற்றும் தன் வயிற்றில் பிறப்பதுப் போல வருமா என்ற எண்ணத்தில், டாக்டர் கமலா செல்வராஜ் அவர்களிடம் டெஸ்ட் டூயூப் பேபி பெற முடிவு செய்து சோதனைகளுக்கு உட்பட்டிருக்கிறார். அவரின் அதிருஷ்டம், முதல் முயற்சியிலேயே கரு உருவாகி, பத்து மாதத்தில் அழகான, ஆரோக்கியமான ஆண் குழந்தையைப் பெற்றிருக்கிறார். இப்பொழுது அந்த பிள்ளைக்கு பத்துவயதாகிறது. இதைப் படித்துவிட்டு, புரட்சிகரமான நாகரீகப் பெண் என்று கற்பனை செய்துக் கொள்ளாதீர்கள். சாதாரண மத்தியவர்க்க, பள்ளியிறுதி வகுப்பு மட்டும் படித்த பெண் கணேசகுமாரி.

இந்த புரட்சியை மற்றவர்கள், உறவினர்கள் அக்கம்பக்கம் எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்று கேள்விக்கு சிரித்துக் கொண்டே அவர் சொன்ன பதில் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. தாய், சகோதரியில் இருந்து அனைத்து உறவுகளும், நட்புகளும் நான் செய்தது சரி என்றுத்தான் சொன்னார்கள் என்றார். மீண்டும், அக்கப்பக்கத்தார்கள்கூட உங்களை தவறாக பேசவில்லையா என்ற கேள்வி எழுப்பப்பட்டப்பொழுது சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினார்.

எப்பொழுதும் நம் எல்லாருக்கும் "நாலுபேர்கள்" என்ன சொல்வார்களோ என்ற கவலை அதிகம். ஆனால் இன்றைக்கு எல்லாருக்கும் வாழ்க்கை மிக வேகமாய் ஓடிக் கொண்டு இருக்கிறது. நம்முடைய பிரச்சனைகளே வேண்டியளவு இருக்கும்பொழுது மற்றவர்களை கவனிக்க ஏது நேரம் என்று கொள்ளலாமா அல்லது பிறர் நம்மை பற்றி பேசுவதில்லை என்று நினைக்கலாமா என்று நினைக்கும்பொழுது, இப்படியே டாக்டர் கமலாசெல்வராஜ் அவர்களிடம் டெஸ்ட் டூயூப் பேபி பெற்றுக் கொண்ட தம்பதியர் வந்தார்கள்.

தான் கல்யாணம் ஆகி ஏழெட்டு வருடங்கள் எப்படி எல்லாம் சொந்தங்களால், அக்கபக்கத்தால் மலடி என்று அவமானப்பட்டேன் என்று கண்ணீர் மல்க சொன்னார். அவரின் கணவரும், பிள்ளை இல்லை என்று தன் மனைவி பட்ட அவமானங்களால் தன்னால் அலுவலகத்தில் சரியாய் வேலை செய்ய முடியாமல் அவதிப்பட்டதாக சொன்னார்.

முதலில் சொன்ன கணேசகுமாரி, தன்னை யாரும் எதுவும் தவறாய் பேசவில்லை என்று உறுதியாய் சொன்னார். அவர் செய்தது புரட்சியே. கணவனை விட்டு பிரிந்து இரண்டு வருடம் கழித்து உண்டாவது என்பது சாதாரண விஷயம் இல்லை. அவர் சொன்ன இன்னொரு விஷயம், தான் இப்படி பிள்ளை பெற்றவுடன், அவர் கணவர் விவாகரத்து செய்துவிட்டாராம். ஆனால் என்றுமே அவர்தான் என் கணவர் அதனால் தான் பெற்ற பிள்ளைக்கு அவரின் பெயரையே இன்ஷியலாய் கொடுத்திருக்கிறேன் என்றார்.

மிக நெருங்கிய சிநேகிதி ஒருத்திக்கு குழந்தையில்லை. அவளும் அவள் கணவரும் யாரையாவது முதல் முறையாய் சந்தித்தால் முதலிலேயே தங்களுக்கு குழந்தையில்லை என்று அறிவித்து விடுவார்கள். அதனால் அடுத்து எந்த கேள்வியும் எழாது இல்லையா? இது சென்சிடிவான விஷயம் என்பதால் வெகு சிலரைத் தவிர மற்றவர்கள் இதைப் பற்றியே பேச மாட்டார்கள். குடும்ப விழாக்கள், நட்பு வட்டம் இவற்றில் எல்லாம் கூட, திரைப்படத்திலோ அல்லது தொலைக்காட்சி தொடரில் பார்ப்பதுப் போலவோ கூட்டத்தில் மலடி என்று அவமானப்படுத்துவது இல்லை. இன்று அழகாய் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டு வாழ்கிறார்கள் அவர்கள்.

கணேசகுமாரி செய்கையும் பலவித விமர்சனங்களுக்கு உட்பட்டிருக்கும். ஆனால் அவர், பிறர் என்ன சொல்வார்கள் என்று கவலையும் படவில்லை, காதிலும் போட்டுக் கொள்ள முயலவில்லை. செய்யும் செயலில் நேர்மையும் உறுதியும் இருந்தால் யார் என்ன சொல்வார்களோ என்றுப் பயப்பட தேவையே இல்லை. நம் குறைகளையோ பிரச்சனைகளையோ நினைத்து அழுதுக் கொண்டு இருப்பதும், யார் எப்படி கேலி செய்வார்களோ என்று கற்பனை செய்துக் கொண்டு இருந்தால், மற்றவர்கள் பேசும் சாதாரண பேச்சுக்கூட நம்மை கேலி செய்வதுப் போல தோன்றும். நம் பின்னால் பேசப்படும் கேலி பேச்சுகளுக்கு மதிப்பு கொடுத்தால்தானே அவை நம்மை பாதிக்கும்? அப்படி யார் என்ன பேசுகிறார்கள் என்று நாம் ஏன் தெரிந்துக் கொள்ள முயல வேண்டும்? ஐம்பது வயதான கணேசகுமாரி அவர்களின் இத்தகைய பாசிடிவ் அப்ரோச் பேச்சுக்கள் பல தெளிவுகளை தந்தன என்பதில் மிகையில்லை.

Copyright © 2005 Tamiloviam.com - Authors